2 சாமுவேல் 21 : 1 (TOV)
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
2 சாமுவேல் 21 : 2 (TOV)
அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
2 சாமுவேல் 21 : 3 (TOV)
ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
2 சாமுவேல் 21 : 4 (TOV)
அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
2 சாமுவேல் 21 : 5 (TOV)
அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
2 சாமுவேல் 21 : 6 (TOV)
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
2 சாமுவேல் 21 : 7 (TOV)
ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக் கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
2 சாமுவேல் 21 : 8 (TOV)
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மேரப் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
2 சாமுவேல் 21 : 9 (TOV)
அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தின நாட்களிலே அவர்கள் கொன்று போடப்பட்டார்கள்.
2 சாமுவேல் 21 : 10 (TOV)
அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
2 சாமுவேல் 21 : 11 (TOV)
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
2 சாமுவேல் 21 : 12 (TOV)
தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,
2 சாமுவேல் 21 : 13 (TOV)
அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து,
2 சாமுவேல் 21 : 14 (TOV)
சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
2 சாமுவேல் 21 : 15 (TOV)
பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள்; தாவீது விடாய்த்துப்போனான்.
2 சாமுவேல் 21 : 16 (TOV)
அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
2 சாமுவேல் 21 : 17 (TOV)
செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
2 சாமுவேல் 21 : 18 (TOV)
அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம்நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
2 சாமுவேல் 21 : 19 (TOV)
பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
2 சாமுவேல் 21 : 20 (TOV)
இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து,
2 சாமுவேல் 21 : 21 (TOV)
இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.
2 சாமுவேல் 21 : 22 (TOV)
இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
❮
❯