சகரியா 8 : 1 (RCTA)
சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
சகரியா 8 : 2 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோன்மீது நாம் அளவில்லா அன்பார்வம் கொண்டுள்ளோம், அவளைக் காப்பதற்காக அடங்காத ஆத்திரத்தோடு ஆர்வம் கொண்டுள்ளோம்.
சகரியா 8 : 3 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோனுக்கு நாம் திரும்பி வரப்போகிறோம், யெருசலேமின் நடுவில் குடிகொள்ளுவோம்; யெருசலேம் நகரம் பிரமாணிக்கமுள்ள நகரமென்றும், சேனைகளின் ஆண்டவருடைய மலை பரிசுத்த மலையென்றும் பெயர் பெற்று விளங்கும்.
சகரியா 8 : 4 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் பொதுவிடங்களில் மறுபடியும் கிழவர்களும் கிழவிகளும் அமர்ந்திருப்பார்கள்; வயதில் முதிர்ந்தவர்களானதினால் ஒவ்வொருவரும் கையில் கோல் வைத்திருப்பர்.
சகரியா 8 : 5 (RCTA)
நகரத்தின் தெருக்களில் சிறுவர்களும் சிறுமிகளும் நிறைந்து தெருக்களிலே விளையாடுவார்கள்.
சகரியா 8 : 6 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இம்மக்களுள் எஞ்சியிருப்போர்க்கு அந்நாட்களில் இதெல்லாம் பெரும் புதுமையாய்த் தோன்றுமாயின், நமக்கும் அது புதுமையாகத் தோன்றுமோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
சகரியா 8 : 7 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் நம்முடைய மக்களை நாம் மீட்டு வருவோம்;
சகரியா 8 : 8 (RCTA)
அவர்களைக் கூட்டி வருவோம், அவர்களும் யெருசலேமின் நடுவில் குடியிருப்பர்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள், நாம் அவர்களுக்குக் கடவுளாயிருப்போம்; எங்களுக்கிடையில் பிரமாணிக்கமும் நீதியும் நிலவும்."
சகரியா 8 : 9 (RCTA)
இன்னும் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திருக்கோயிலை மீண்டும் கட்டும்படி சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்திற்கு அடிப்படையிட்ட நாளிலிருந்து இறைவாக்கினர்களின் வாய்மொழிகளை இந்நாட்களில் கேட்டு வருகின்ற மக்களே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
சகரியா 8 : 10 (RCTA)
ஏனெனில் இந்நாள் வரையில் மனிதனுக்கோ மிருகத்துக்கோ கூலி கொடுக்கப்பட்டதில்லை; போவார் வருவாருக்குப் பகைவர் தந்த தொல்லையிலிருந்து பாதுகாப்பும் இல்லை; ஏனெனில் ஒருவனுக்கு எதிராக இன்னொருவன் எழும்படி விட்டுவிட்டோம்.
சகரியா 8 : 11 (RCTA)
ஆனால் இப்பொழுது இம்மக்களுள் எஞ்சியிருப்பவர்களை முன்னாட்களில் நடத்தியது போல நாம் நடத்த மாட்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
சகரியா 8 : 12 (RCTA)
ஏனெனில் சமாதானம் விதைக்கப்படும், திராட்சைக்கொடி தன் கனியைக் கொடுக்கும், நிலம் தன் பலனைத் தரும், வானம் பனியைப் பொழியும்; இவற்றையெல்லாம் இம்மக்களுள் எஞ்சியிருப்போர் உரிமையாக்கிக் கொள்ளும்படி செய்வோம்.
சகரியா 8 : 13 (RCTA)
யூதா வீடே, இஸ்ராயேல் வீடே, புறவினத்தார் நடுவில் உங்கள் பெயர் சாபனைச் சொல்லாய் இருந்தது; ஆனால் நாம் உங்களை மீட்டபின் உங்கள் பெயர் ஆசிமொழியாய் இருக்கும்; ஆதலால் அஞ்சவேண்டா; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்."
சகரியா 8 : 14 (RCTA)
ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "உங்கள் தந்தையர்கள் நமக்குச் சினமூட்டிய போது, நாம் இரக்கம் காட்டாமல் உங்களக்குக் தீங்கு செய்யத் தீர்மானித்தோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;
சகரியா 8 : 15 (RCTA)
அவ்வாறே மீண்டும் இந்நாட்களில் யெருசலேமுக்கும் யூதாவின் வீட்டுக்கும் நன்மை செய்யத் தீர்மானித்திருக்கிறோம்; ஆகையால் அஞ்சவேண்டா.
சகரியா 8 : 16 (RCTA)
நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை இவையே: ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள்; உங்கள் ஊர்ச் சபையில் நீங்கள் தரும் தீர்ப்பு உண்மையானதும், சமாதானத்திற்கு வழி கோலுவதுமாய் இருக்கட்டும்;
சகரியா 8 : 17 (RCTA)
ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய உங்கள் உள்ளத்தில் திட்டம் போடாதீர்கள், பொய்யாணை செய்ய விரும்பாதீர்கள்; ஏனெனில் இவற்றையெல்லாம் நாம் வெறுக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
சகரியா 8 : 18 (RCTA)
சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
சகரியா 8 : 19 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஐந்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஏழாம் மாதத்தின் உண்ணா நோன்பும், பத்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும் யூதாவின் வீட்டாருக்கு மகிழ்ச்சியும் அக்களிப்பும் கொண்டாட்டங்களும் நிறைந்த காலங்களாய் மாறிவிடும்; ஆனால் உண்மையையும் சமாதானத்தையும் விரும்பிக் கடைப்பிடியுங்கள்.
சகரியா 8 : 20 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களும், பல நகரங்களின் மாந்தரும் இன்னும் வருவார்கள்;
சகரியா 8 : 21 (RCTA)
ஒரு நகரத்தின் மக்கள் இன்னொரு நகரத்தாரிடம் போய், 'ஆண்டவருடைய அருளை மன்றாடவும், சேனைகளின் ஆண்டவரைத் தேடவும் உடனே புறப்பட்டுப்போவோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்' என்று சொல்லுவார்கள்.
சகரியா 8 : 22 (RCTA)
பல்வேறு நாட்டினரும் வலிமை வாய்ந்த மக்களினங்களும் சேனைகளின் ஆண்டவரைத் தேடவும், ஆண்டவருடைய அருளை மன்றாடிக் கேட்கவும் யெருசலேமுக்கு வருவார்கள்.
சகரியா 8 : 23 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாட்களில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தாரிலிருந்து பத்துப் பேர் சேர்ந்து ஒரு யூதனுடைய மேலாடையைப் பிடித்துக் கொண்டு, நாங்களும் உன்னோடு வருகிறோம்; ஏனெனில் கடவுள் உங்களோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்' என்பார்கள்."
❮
❯