சகரியா 7 : 1 (RCTA)
மன்னன் தாரியுசின் நான்காம் ஆட்சியாண்டில் கஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு சக்கரியாசுக்கு அருளப்பட்டது.
சகரியா 7 : 2 (RCTA)
பேத்தேல் என்னும் ஊர்மக்கள் சராசார், ரோகோமெலேக் ஆகியவர்களுடன் தங்கள் ஆட்களை, ஆண்டவரின் அருளை மன்றாடவும்,
சகரியா 7 : 3 (RCTA)
சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் இருக்கும் அர்ச்சகர்களையும், இன்னும் இறைவாக்கினர்களையும் கண்டு, "இத்தனை ஆண்டுகளாகச் செய்து வந்தது போல், ஐந்தாம் மாதத்தில் துக்கம் கொண்டாடி எங்களை ஒடுக்கிக் கொள்ள வேண்டுமோ?" என்று கேட்டு வரவும் அனுப்பினார்கள்.
சகரியா 7 : 4 (RCTA)
அப்போது, சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
சகரியா 7 : 5 (RCTA)
இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் நீ கூற வேண்டியது இதுவே: இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து நீங்கள் துக்கம் கொண்டாடினீர்களே, எமக்காகவா நோன்பிருந்தீர்கள்?
சகரியா 7 : 6 (RCTA)
நீங்கள் உண்ணும் போதும், குடிக்கும் போதும் உங்களுக்காகத் தானே உண்ணுகிறீர்கள், குடிக்கிறீர்கள்?
சகரியா 7 : 7 (RCTA)
யெருசலேமில் மக்கள் குடியேறிய பின் வளம் பெருகிய போது, அதனைச் சூழ்ந்திருந்த நகரங்கள், தென்னாடு, பள்ளச் சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், ஆண்டவர் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக முழங்கிய சொற்களும் இவையே அல்லவா?"
சகரியா 7 : 8 (RCTA)
ஆண்டவரின் வாக்கு தொடர்ந்து சக்கரியாசுக்கு அருளப்பட்டது:
சகரியா 7 : 9 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்; ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!
சகரியா 7 : 10 (RCTA)
கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா; உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."
சகரியா 7 : 11 (RCTA)
ஆயினும் அவர்கள் செவிமடுக்க மறுத்தார்கள், புறங்காட்டிப் பின்வாங்கினார்கள், கேட்காதிருக்கும் பொருட்டுத் தங்கள் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டார்கள்.
சகரியா 7 : 12 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் தம் ஆவியால் ஏவி முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாய்த் தந்த திருச்சட்டத்தையும் வார்த்தைகளையும் கேட்டு விடாதபடி தங்கள் உள்ளத்தை வைரம் போலக் கடினமாக்கிக் கொண்டார்கள். ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கடுஞ்சினம் கொண்டார்.
சகரியா 7 : 13 (RCTA)
நாம் கூப்பிட்ட பொழுது அவர்கள் கேட்காமல் இருந்தது போலவே, அவர்கள் கூப்பிட்ட பொழுது நாம் கேட்கவில்லை" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;
சகரியா 7 : 14 (RCTA)
ஆகவே, அவர்கள் முன்பின் அறியாத எல்லா மக்களினங்களின் நடுவில் சிதறச்செய்தோம்; இவ்வாறு, அவர்கள் விட்டுச் சென்ற நாடு பாழாயிற்று; அந்நாட்டில் போவான் வருவான் எவனுமே இல்லை; இன்ப நாட்டைப் பாழாக்கி விட்டார்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14