சகரியா 6 : 1 (RCTA)
மறுபடியும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகள்.
சகரியா 6 : 2 (RCTA)
முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும்,
சகரியா 6 : 3 (RCTA)
மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் பல வண்ணமுள்ள கொழுத்த குதிரைகளும் பூட்டியிருந்தன.
சகரியா 6 : 4 (RCTA)
என்னிடம் பேசிய தூதரிடம், "ஐயா, இவை என்ன?" என்று கேட்டேன்.
சகரியா 6 : 5 (RCTA)
அதற்கு மறுமொழியாக அந்தத் தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன் நின்றிருந்த பின், புறப்பட்டு வானத்தின் நாற்றிசைக் காற்றுகளை நோக்கிச் செல்கின்றன.
சகரியா 6 : 6 (RCTA)
கருப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டுக்குப் போகிறது; வெண்ணிறக் குதிரைகள் மேற்றிசை நாட்டுக்குப் போகின்றன; பலவண்ணக் குதிரைகளோ தென்னாட்டுக்குப் போகின்றன" என்றார்.
சகரியா 6 : 7 (RCTA)
கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
சகரியா 6 : 8 (RCTA)
அவர் என்னைக் கூவியழைத்து, "இதோ, வடநாட்டை நோக்கிப் போகும் குதிரைகள் நமது ஆவியை வடநாட்டின் மேல் இறங்கச் செய்தன" என்று சொன்னார்.
சகரியா 6 : 9 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
சகரியா 6 : 10 (RCTA)
நாடுகடத்தப்பட்டுப் பபிலோனில் இருக்கிறவர்களிடமிருந்து வந்திருக்கிற ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியவர்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே புறப்பட்டு சொப்போனியாவின் மகன் யோசியாசின் வீட்டுக்குப் போ.
சகரியா 6 : 11 (RCTA)
அங்கே அவர்கள் தந்த பொன், வெள்ளியைக் கொண்டு முடிசெய்து, தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு; சூட்டி,
சகரியா 6 : 12 (RCTA)
'சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, 'தளிர்' என்னும் பெயரினர்; ஏனெனில் இவர் தம் வேரிலிருந்தே தளிர்ப்பார், ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார்.
சகரியா 6 : 13 (RCTA)
இவர் தான் ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார், அரச மகிமையைப் பூண்டுகொள்வார், அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார். அவருடைய அரியணை அருகில் அர்ச்சகர் ஒருவர் இருப்பார்; இருவர்க்கும் இடையில் நிறைவான சமாதானம் இருக்கும்" என்று சொல்.
சகரியா 6 : 14 (RCTA)
அந்த மணிமுடி ஆண்டவரின் திருக்கோயிலில் ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியோர்க்கும், சொப்போனியாவின் மகன் யோசியாசுக்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.
சகரியா 6 : 15 (RCTA)
தொலை நாட்டிலிருப்பவர்களும் வந்து ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லுக்கு நீங்கள் கவனமாய்க் கீழ்ப்படிந்தால், இதெல்லாம் நிறைவேறும்."
❮
❯