சகரியா 5 : 1 (RCTA)
மீண்டும் நான் கண்களை உயர்த்திய போது, இதோ, பறக்கின்ற ஓலைச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
சகரியா 5 : 2 (RCTA)
அந்தத் தூதர், "என்ன பார்க்கின்றாய்?" என்று என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஓலைச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழமும், அகலம் பத்து முழமும் உள்ளது" என்றேன்.
சகரியா 5 : 3 (RCTA)
அதற்கு அவர் என்னிடம், "நாடெங்கும் உலவி வரும் சாபனையே இது; ஏனெனில் கள்வனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்; பொய்யாணை இடுகிறவனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்.
சகரியா 5 : 4 (RCTA)
நாம் அதனை வெளியில் அனுப்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அது கள்வன் வீட்டிலும், நமது திருப்பெயரால் பொய்யாணை செய்கிறவன் வீட்டிலும் நுழைந்து, அங்கே தங்கி, மரங்கள், கற்கள் இவற்றோடு அவ்வீட்டையும் அழித்து விடும்" என்றார்.
சகரியா 5 : 5 (RCTA)
என்னிடம் பேசிய தூதர் வெளியே வந்து, என்னிடம், "உன் கண்களை உயர்த்திப் பார், அங்கே போவது என்ன?" என்று கேட்டார்.
சகரியா 5 : 6 (RCTA)
என்ன அது?" என்று நான் திரும்பிக்கேட்டேன். அவர், "அது வெளியேறிப்போகும் மரக்கால்" என்றார். தொடர்ந்து அவரே, "அதுதான் உலகெங்கும் பரவியிருக்கும் அக்கிரமம்" என்று சொன்னார்.
சகரியா 5 : 7 (RCTA)
இதோ, அதனுடைய ஈயமூடி திறக்கப்பட்டது; மரக்காலுக்குள் பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதைக் கண்டேன்!
சகரியா 5 : 8 (RCTA)
அப்போது அந்தத் தூதர், "இவளே அந்த அக்கிரமம்" என்றார்; உடனே, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்து அதன் வாயைப் பளுவான ஈயமூடியால் அடைத்தார்.
சகரியா 5 : 9 (RCTA)
இப்போது என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு பெண்கள் வெளிப்பட்டார்கள்! நாரையின் இறக்கைகள் போல் அவர்களுக்கும் இறக்கைகள் இருந்தன; அவற்றில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் அந்த மரக்காலை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு பறந்தனர்.
சகரியா 5 : 10 (RCTA)
என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "மரக்காலை எங்கே தூக்கிக்கொண்டு போகிறார்கள்?" என்று கேட்டேன்.
சகரியா 5 : 11 (RCTA)
அவர், "சென்னார் நாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஆங்கே அதற்கொரு கோயில் கட்டப்போகிறார்கள்; கட்டியானதும், மரக்காலை அதற்குரிய மேடையில் வைப்பார்கள்" என்றார்.
❮
❯