சகரியா 4 : 1 (RCTA)
என்னிடம் பேசிய தூதர் மறுபடியும் வந்து உறக்கத்திலிருந்து எழுப்புவதைப்போல் என்னை எழுப்பினார்.
சகரியா 4 : 2 (RCTA)
எழுப்பி, "என்ன காண்கிறாய்?" என்று என்னைக் கேட்க, நான், "இதோ, பொன் மயமான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் வட்டில் ஒன்றுள்ளது; அதன் மேல் சுற்றிலும் ஏழு அகல் விளக்குகள் இருக்கின்றன; ஒவ்வொரு விளக்குக்கும் ஏழு மூக்குகள் உள்ளன.
சகரியா 4 : 3 (RCTA)
மேலும் ஒலிவமரங்கள் இரண்டு- ஒன்று தண்டுக்கு வலப்புறமும், மற்றது இடப்புறமும்- இருக்கின்றன" என்றேன்.
சகரியா 4 : 4 (RCTA)
அப்போது என்னிடம் பேசிய தூதரை நோக்கி, "ஐயோ, இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன்.
சகரியா 4 : 5 (RCTA)
என்னிடம் பேசிய தூதர் மறுமொழியாக, "இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குத் தெரியாதா?" என்றார்; நான் "தெரியாது, ஐயா" என்றேன்.
சகரியா 4 : 6 (RCTA)
அப்போது அவர் என்னிடம், "சொரொபாபெலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: ஆற்றலாலுமன்று, வல்லமையாலுமன்று, ஆனால் நமது ஆவியாலே ஆகும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
சகரியா 4 : 7 (RCTA)
மாபெரும் மலையே, நீ என்ன? சொரொபாபெலின்முன் சமவெளியாய் விடு; அவரே தலைக்கல்லைக் கொண்டுவருவார். அப்போது மக்கள், 'அதன் மேல் அருள் பொழிக!, அருள் பொழிக!' என்று ஆர்ப்பரிப்பார்கள் "என்றார்.
சகரியா 4 : 8 (RCTA)
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
சகரியா 4 : 9 (RCTA)
சொரொபாபெலின் கைகள் இந்தக் கோயிலுக்கு அடிப்படை போட்டன; அவருடைய கைகளே அவ்வேலையை முடிக்கும். அப்போது சேனைகளின் ஆண்டவர்தாம் என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
சகரியா 4 : 10 (RCTA)
தொடக்க வேலையின் நாளை அவமதித்தவர்கள் யார்? சொரொபாபெலின் கையில் தூக்குநூல் குண்டைக் கண்டு அகமகிழ்வார்கள். "அந்த ஏழு விளக்குகள் உலகெலாம் சுற்றிப் பார்க்கின்ற ஆண்டவரின் கண்கள்" என்றார் அந்தத் தூதர்.
சகரியா 4 : 11 (RCTA)
அப்போது நான், "விளக்குத் தண்டுக்கு வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் ஒலிவமரங்கள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன்;
சகரியா 4 : 12 (RCTA)
தொடர்ந்து நானே, "எண்ணெய் ஊற்றுவதற்கென இருக்கும் பொற் குழாய்கள் இரண்டினருகிலும் உள்ள அந்த ஒலிவமரக் கிளைகள் இரண்டுக்கும் பொருள் என்ன?" என்றேன்.
சகரியா 4 : 13 (RCTA)
அதற்கு அவர், "இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்க, நான், "தெரியாது, ஐயா" என்றேன்.
சகரியா 4 : 14 (RCTA)
அப்போது அவர், "அனைத்துலக ஆண்டவர் திருமுன் நிற்கின்ற அபிஷுகம் செய்யப்பட்ட இருவர் இவர்கள்" என்று விடை பகர்ந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14