சகரியா 2 : 1 (RCTA)
நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவர் தென்பட்டார்.
சகரியா 2 : 2 (RCTA)
எங்கே போகிறீர்?" என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர், "யெருசலேமை அளந்து அதன் நீளத்தையும் அகலத்தையும் பார்க்கப் போகிறேன்" என்றார்.
சகரியா 2 : 3 (RCTA)
இதோ, என்னிடம் பேசிய தூதர் கிளம்பிப் போகும் போது, வேறொரு தூதர் அவருக்கு எதிரில் வந்தார்.
சகரியா 2 : 4 (RCTA)
வந்தவர் முன்னவரை நோக்கி, "விரைந்து போய் அந்த இளைஞரிடம், 'யெருசலேமில் இருக்கின்ற திரளான மனிதர்களையும் கால்நடைகளையும் முன்னிட்டு அந்நகரம் மதில் சூழா ஊர்களைப் போலவே இருக்கும்.
சகரியா 2 : 5 (RCTA)
ஏனெனில் நாமே அதனைச் சுற்றி நெருப்புச் சுவராய் அமைவோம், நாமே அதனுள் மகிமையாக இருப்போம், என்கிறார் ஆண்டவர்' என்று சொல்" என்றார்.
சகரியா 2 : 6 (RCTA)
எழுந்திருங்கள் எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவிடுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் வானத்தின் நாற்றிசைகளிலும் உங்களை நாம் சிதறடித்தோம், என்கிறார் ஆண்டவர்.
சகரியா 2 : 7 (RCTA)
பபிலோன் மகளிடத்தில் வாழ்கின்ற சீயோனே, எழுந்து தப்பியோடு!
சகரியா 2 : 8 (RCTA)
ஏனெனில் சேனைகளின் ஆண்டவர்- அவருடைய மகிமை தான் என்னை இங்கே அனுப்பிற்று- உங்களைச் சூறையாடிய மக்களினங்களைக் குறித்துச் சொல்லுகிறார்: "உங்களைத் தொடுகிறவன் நம் கண்மணியையே தொடுகிறான்;
சகரியா 2 : 9 (RCTA)
இதோ, அவர்கள் மேல் நம் கையை நீட்டப்போகிறோம்; தங்களுக்குத் தொண்டு செய்தவர்களுக்கே அவர்கள் கொள்ளைப் பொருளாவார்கள். அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் என்னை அனுப்பினார் என்பதை அறிந்து கொள்ளுவீர்கள்.
சகரியா 2 : 10 (RCTA)
சீயோன் மகளே, அகமகிழ்ந்து அக்களி, இதோ, வருகிறோம், வந்து உன் நடுவில் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.
சகரியா 2 : 11 (RCTA)
அந்நாளில் பலநாட்டு மக்களினங்கள் ஆண்டவரிடம் வந்து சேர்ந்து கொள்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள், அவர் உன் நடுவில் குடிகொண்டிருப்பார்; அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
சகரியா 2 : 12 (RCTA)
அப்போது ஆண்டவர் யூதாவைப் பரிசுத்த நாட்டில் தம் உரிமைச் சொத்தாய் உடைமையாக்கிக் கொள்வார்; யெருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்."
சகரியா 2 : 13 (RCTA)
மனிதர்களே, நீங்களனைவரும் ஆண்டவர் முன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் அவர் தம் பரிசுத்த இடத்திலிருந்து எழுந்தருளினார்.
❮
❯