சகரியா 12 : 1 (RCTA)
ஓர் இறைவாக்கு. இஸ்ராயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்ணை விரித்தவரும், மண்ணுலகை நாட்டியவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் கொடுத்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
சகரியா 12 : 2 (RCTA)
இதோ, சுற்றியுள்ள மக்களினங்களுக்கெல்லாம் போதையேற்றும் மதுக்கிண்ணமாக நாம் யெருசலேமைச் செய்யப்போகிறோம்; யெருசலேமுக்கு எதிராக முற்றுகையிடப்படும் போது அக்கிண்ணம் யூதாவுக்குக் கொடுக்கப்படும்.
சகரியா 12 : 3 (RCTA)
அந்நாளில் மக்களினங்களுக்கெல்லாம் யெருசலேமை ஒரு பளுவான கல்லாக்குவோம்; அதைத் தூக்குகிறவர் யாவரும் காயமடைவர், உலகத்தின் மக்களினங்கள் அனைத்தும் அதற்கெதிராய்த் திரண்டு வருவர்.
சகரியா 12 : 4 (RCTA)
அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
சகரியா 12 : 5 (RCTA)
அப்போது யூதாவின் குலங்கள் தங்களுக்குள், 'யெருசலேம் மக்களின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரில் தான் இருக்கிறது' என்று சொல்லிக் கொள்வார்கள்.
சகரியா 12 : 6 (RCTA)
அந்நாளில் யூதாவின் குலங்களை விறகுகள் நடுவில் வைத்த தீயைப் போலவும், வைக்கோல் கட்டுகளுக்குள் இட்ட கொள்ளியைப் போலவும் ஆக்குவோம்; சூழ்ந்துள்ள மக்களினங்கள் யாவற்றையும் அவர்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் விழுங்குவார்கள்; யெருசலேம் மக்களோ முன்னிருந்த இடத்திலேயே- யெருசலேமிலேயே குடியிருப்பார்கள்.
சகரியா 12 : 7 (RCTA)
தாவீதின் வீட்டாருடைய பெருமையும், யெருசலேம் மக்களுடைய பெருமையும் யூதாவின் பெருமையை விட மிகுந்து விடாமலிருக்க, ஆண்டவர் முதலில் யூதாவின் கூடாரங்களுக்கே வெற்றி தருவார்.
சகரியா 12 : 8 (RCTA)
அந்நாளில், யெருசலேமில் வாழும் மக்களை ஆண்டவர் பாதுகாப்பார்; அப்போது அவர்களுள் நிற்க வலுவில்லாதவன் கூடத் தாவீதைப் போல் இருப்பான்; தாவீதின் வீட்டார் கடவுளைப் போலும், அவர்கள் முன் செல்லும் ஆண்டவரின் தூதரைப் போலும் இருப்பார்கள்.
சகரியா 12 : 9 (RCTA)
அந்நாளில் யெருசலேமுக்கு எதிராக வரும் மக்களினங்கள் அனைத்தையும் அழிக்க வழி செய்வோம்.
சகரியா 12 : 10 (RCTA)
ஆனால் நாம் தாவீதின் வீட்டார் மேலும், யெருசலேம் மக்கள் மேலும் இரக்க உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் பொழிவோம்; அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனை நோக்குவர்; நோக்கி, ஒருவன் தன் ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து விட்டுப் புலம்புவது போலும், இறந்து போன தன் தலைப் பேற்றுக்காக ஒருவன் கதறியழுவது போலும் அவனுக்காக அழுவார்கள்.
சகரியா 12 : 11 (RCTA)
அந்நாளில் யெருசலேமில் எழும்பும் புலம்பல் மெகித்தோ சமவெளியில் ஆதாதிரம்மோன் பட்டணத்தில் எழுந்த புலம்பலை போலப் பெரிதாயிருக்கும்.
சகரியா 12 : 12 (RCTA)
குடும்பம் குடும்பமாய் நாடெங்கும் அழுது புலம்புவர்; தாவீதின் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் மறுபுறமும்,
சகரியா 12 : 13 (RCTA)
நாத்தான் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், லேவி வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், செமேயி கோத்திரங்கள் ஒருபக்கமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு பக்கமுமாய்ப் புலம்புவார்கள்;
சகரியா 12 : 14 (RCTA)
மற்றுமுள்ள கோத்திரங்களின் எல்லாக் குடும்பங்களும் அவற்றிலுள்ள பெண்களும் தனித்தனியே புலம்பியழுவார்கள்.
❮
❯