சகரியா 1 : 1 (RCTA)
தாரியுஸ் அரசனின் இரண்டாம் ஆட்சியாண்டில் எட்டாம் மாதத்தில் அத்தோ என்பவரின் மகனான பராக்கியாவின் மகன் சக்கரியாஸ் என்ற இறைவாக்கினருக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
சகரியா 1 : 2 (RCTA)
ஆண்டவர் உங்கள் தந்தையர் மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார்.
சகரியா 1 : 3 (RCTA)
ஆதலால் நீ இம்மக்களுக்குக் கூறு: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம்மிடம் திரும்பி வாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அப்போது நாமும் உங்கள்பால் திரும்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
சகரியா 1 : 4 (RCTA)
முன்னாளில் இறைவாக்கினர்கள் உங்கள் தந்தையரை நோக்கி, 'இதோ, சேனைகளின் ஆண்டவரது வாக்கு: உங்களுடைய தீய நெறிகளையும், உங்களுடைய தீய செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்' என்று முழக்க மிட்டனர்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிமடுக்கவுமில்லை; நம்மைப் பொருட்படுத்தவுமில்லை; அவர்களைப் போல நீங்களும் இராதீர்கள், என்கிறார் ஆண்டவர்.
சகரியா 1 : 5 (RCTA)
உங்கள் தந்தையர் எங்கே? இறைவாக்கினர்களும் என்றென்றைக்கும் வாழ்வார்களோ?
சகரியா 1 : 6 (RCTA)
நம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்த நம் வார்த்தைகளும் முறைமைகளும் உங்கள் தந்தையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, 'சேனைகளின் ஆண்டவர் எங்கள் நெறிகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ப எங்களை நடத்தத் திருவுளங் கொண்டார், அவ்வாறே எங்களை நடத்தினார்' என்று சொன்னார்கள்."
சகரியா 1 : 7 (RCTA)
மன்னன் தாரியுசின் இரண்டாம் ஆட்சியாண்டில் பதினோராம் மாதத்தின்- அதாவது ஷுபாத் மாதத்தின்- இருபத்து நான்காம் நாள், அத்தோ என்பவரின் மகனான பராக்கியாவின் மகன் சக்கரியாஸ் என்கிற இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
சகரியா 1 : 8 (RCTA)
இதோ, சிவப்புக் குதிரை மேலேறி வந்த மனிதன் ஒருவனை இரவில் காட்சியில் கண்டேன். அவன் பள்ளத்தாக்கின் இடுக்கில் வளர்ந்திருந்த மீர்த்துச் செடிகள் நடுவில் நின்று கொண்டிருந்தான்; அவனுக்குப் பின்னால் செந்நிறத்தனவும் பொன்னிறத்தனவும் வெண்ணிறத்தனவுமான குதிரைகள் நின்று கொண்டிருந்தன.
சகரியா 1 : 9 (RCTA)
அப்போது நான், 'ஐயா இவை எதைக் குறிக்கின்றன?' என்று கேட்டேன். என்னிடம் பேசிய வானதூதர், 'இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்' என்றார்.
சகரியா 1 : 10 (RCTA)
மீர்த்துச் செடிகள் நடிவில் நின்று கொண்டிருந்த ஆள், 'இவை உலகெங்கும் சுற்றித் திரிந்து வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன' என்று சொன்னான்.
சகரியா 1 : 11 (RCTA)
இவர்கள் மீர்த்துச் செடிகளின் நடுவில் நின்ற ஆண்டவருடைய தூதரிடம், 'உலகெங்கும் நாங்கள் சுற்றி வந்தோம்; இதோ உலகம் முழுவதும் அமைதியாய் இருக்கிறது' என்றார்கள்.
சகரியா 1 : 12 (RCTA)
அப்போது ஆண்டவரின் தூதர், 'சேனைகளின் ஆண்டவரே, இந்த எழுபது ஆண்டுகளாய் நீர் உமது கோபத்தைக் காட்டிய யெருசலேமின் மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எத்தனை காலத்திற்கு இரக்கம் காட்டாமல் இருப்பீர்?' என்றார்.
சகரியா 1 : 13 (RCTA)
அதற்கு ஆண்டவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த தூதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார்.
சகரியா 1 : 14 (RCTA)
ஆகவே, என்னிடம் பேசிய தூதர் என்னைப் பார்த்து, 'நீ உரத்த குரலில் கூவி அறிவிக்க வேண்டியது: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் மீதும், சீயோன் மீதும் நாம் மிகுந்த அன்பார்வம் கொண்டிருக்கிறோம்.
சகரியா 1 : 15 (RCTA)
ஆனால் இன்பமாய் வாழ்கின்ற புறவினத்தார் மீது கடுஞ்சினம் கொண்டுள்ளோம்; ஏனெனில் நாம் சிறிதளவே சினமுற்றிருந்த போது, அவர்கள் வரம்பு கடந்து அழிவு செய்தனர்.
சகரியா 1 : 16 (RCTA)
ஆதலால் பரிவோடு நாம் யெருசலேமுக்குத் திரும்பி வருவோம், என்கிறார் ஆண்டவர்; அங்கே நமது இல்லம் கட்டப்படும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; யெருசலேமின் மீது அளவுநூல் பிடிக்கப்படும்.
சகரியா 1 : 17 (RCTA)
மறுபடியும் அறிவி: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம்முடைய நகரங்களில் மீண்டும் வளம் பொங்கி வழியும்; ஆண்டவர் மீண்டும் சீயோனைத் தேற்றுவார்; யெருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்ளுவார்' என்று சொல்லச் சொன்னார்."
சகரியா 1 : 18 (RCTA)
பின்பு நான் கண்களை உயர்த்திப் பார்த்த போது, இதோ, நான்கு கொம்புகள் காணப்பட்டன.
சகரியா 1 : 19 (RCTA)
என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை தான் யூதாவையும் இஸ்ராயேலையும் யெருசலேமையும் சிதறடித்த கொம்புகள்" என்றார்.
சகரியா 1 : 20 (RCTA)
அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காட்டினார்.
சகரியா 1 : 21 (RCTA)
இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என்று நான் கேட்டேன். அவர், "எவனும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே; இவர்களோ, யூதாவின் நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்தி வந்த மக்களினங்களின் கொம்புகளை வெட்டி முறித்துத் திகிலுண்டாக்க வந்தவர்கள்" என்று மறுமொழி சொன்னார்.
❮
❯