தீத்து 3 : 1 (RCTA)
தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிந்து கீழ்ப்படிய மக்களுக்கு நினைவூட்டும்.
தீத்து 3 : 2 (RCTA)
அவர்கள் எந்த நற்செயலுக்கும் தயாராயிருக்கவும், பழிச்சொல்லும் வீண் சண்டையும் விலக்கி, அமைதியுடன் எல்லாரிடமும் நிறைவான சாந்தத்தோடு பழகவும் வேண்டும்.
தீத்து 3 : 3 (RCTA)
நாமும் ஒருகாலத்தில் மதிகேடராய் யாருக்கும் அடங்காமல் நெறி தவறியிருந்தோம்; பல்வேறான இச்சைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டு, பொறாமையும் தீய மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்தோம்; வெறுப்புக்குரியோராய்ப் பிறரையும் வெறுத்து வந்தோம்.
தீத்து 3 : 4 (RCTA)
நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் நேயமும் பிரசன்னமானபோது,
தீத்து 3 : 5 (RCTA)
நீதிநெறியைப் பின்பற்றி நாமே செய்த நற்செயல்களை முன்னிட்டன்று, தம் இரக்கத்தை முன்னிட்டே புதுப்பிறப்பைத் தரும் முழுக்கினாலும், புத்துயிர் அளிக்கும் பரிசுத்த ஆவியாலும் இறைவன் நம்மை மீட்டார்.
தீத்து 3 : 6 (RCTA)
இந்த ஆவியை அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மீது நிரம்பப் பொழிந்தார்.
தீத்து 3 : 7 (RCTA)
கிறிஸ்துவின் அருளினால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி நமக்குள்ள நம்பிக்கையால் முடிவில்லா வாழ்வுக்கு உரிமையாளராவதற்கே இவ்வாறு செய்தார்.
தீத்து 3 : 8 (RCTA)
இது உண்மையான வார்த்தை. ஆகவே, கடவுள்மேல் விசுவாசமுள்ளவர்கள் நற்செயல்களில் ஈடுபடக் கருத்தாயிருக்கும்படி நீர் வற்புறுத்தவேண்டும் என்பது என் விருப்பம். இவை நல்லவை, மக்களுக்குப் பயன்படுபவை
தீத்து 3 : 9 (RCTA)
ஆனால், மூட ஆராய்ச்சிகள், தலைமுறைகளைப் பற்றிய ஆய்வுகள், சண்டை சச்சரவுகள், சட்டத்தைப்பற்றிய வாக்குவாதங்கள் இவற்றை விலக்கும். இவை பயனற்றவை; வீணானவை.
தீத்து 3 : 10 (RCTA)
கட்சி விளைவிப்பவனை இரு முறை எச்சரித்தபின் விட்டு விலகும்.
தீத்து 3 : 11 (RCTA)
அப்படிப்பட்டவன் நெறி பிறழ்ந்தவன்; தனக்குத் தானே தீர்ப்பைத் தேடிக்கொண்ட பாவி. இது உமக்குத் தெரிந்ததே.
தீத்து 3 : 12 (RCTA)
உம்மிடம் அர்த்தெமாவையோ, தீக்கிக்குவையோ நான் அனுப்பும்பொழுது நீர் நிக்கொப்போலி நகருக்கு என்னிடம் விரைவில் வந்துசேரும். அங்கேதான் குளிர்காலத்துக்குத் தங்கத் தீர்மானித்திருக்கிறேன்.
தீத்து 3 : 13 (RCTA)
அப்பொல்லோவையும் வழக்கறிஞரான சேனாவையும் வழிகூட்டி அனுப்பிவையும். அவர்களுக்கு எவ்விதக் குறையும் ஏற்படாதபடி அக்கறையோடு பார்த்துக்கொள்ளும்.
தீத்து 3 : 14 (RCTA)
நம்மவர்களும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யும்படி கண்ணியமான வேலைகளில் ஈடுபடக் கற்றுக்கொள்வார்களாக. அவர்கள் பயனற்றவர்களாயிருத்தலாகாது.
தீத்து 3 : 15 (RCTA)
என்னோடு இருக்கும் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை நேசிக்கிறவர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறும். இறை அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
❮
❯