உன்னதப்பாட்டு 8 : 1 (RCTA)
நீர்மட்டும் என் உடன் பிறந்தவனாய் இருந்தால்! என் அன்னையிடம் பால்குடித்த அண்ணனாயிருந்தால்! வெளியிலே நான் உம்மைக் கண்டால் முத்தமிடுவேன், என்னை எவரும் இகழ மாட்டார்கள்.
உன்னதப்பாட்டு 8 : 2 (RCTA)
உம்மை என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் கூட்டிக் கொண்டு வருவேன். வாசனை கலந்த இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன், என் மாதுளம் பழச் சாற்றைப் பருகத் தருவேன்.
உன்னதப்பாட்டு 8 : 3 (RCTA)
அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார்.
உன்னதப்பாட்டு 8 : 4 (RCTA)
தலைமகன்: யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: அன்புடையாளை எழுப்பாதீர்; தானே விழிக்கும் வரை தட்டியெழுப்பாதீர்.
உன்னதப்பாட்டு 8 : 5 (RCTA)
முடிவுரை: பாடகர்க்குழு: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு பாலைவெளியிலிருந்து எழுந்து வரும் அவள் யார்? தலைமகன்: கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன், அங்கே தான் உன் தாய் நோயுற்று உன்னைப் பெற்றாள், உன்னைப் பெற்றவள் உன்னைப் பெற வேதனையுற்றாள்.
உன்னதப்பாட்டு 8 : 6 (RCTA)
நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!
உன்னதப்பாட்டு 8 : 7 (RCTA)
பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. பிற்சேர்க்கைகள்: அறிஞன் ஒருவனின் முதுமொழி: அன்பைப் பெறுவதற்காக ஒருவன் தன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் வாரி வழங்கினாலும், இகழ்ச்சியையே பெற்றுக் கொள்வான்.
உன்னதப்பாட்டு 8 : 8 (RCTA)
விடுகதைகள் இரண்டு: நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு இன்னும் கொங்கைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும் நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்வோம்?
உன்னதப்பாட்டு 8 : 9 (RCTA)
அவள் ஒரு மதிலானால், அதன் மேல் வெள்ளி அரண்களைக் கட்டுவோம். அவள் கதவு நிலையானால், கேதுரு பலகைகள் வைத்து அடைப்போம்.
உன்னதப்பாட்டு 8 : 10 (RCTA)
நான் மதில்தான்; என் கொங்கைகள் அதன் கோபுரங்கள்; அவர் கண்களின் பார்வையில் நான் அமைதி கண்டவளைப் போல் ஆனேன்.
உன்னதப்பாட்டு 8 : 11 (RCTA)
பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.
உன்னதப்பாட்டு 8 : 12 (RCTA)
எனது திராட்சைத் தோட்டம் என் கண் முன் இருக்கிறது: சாலமோனே, ஆயிரம் வெள்ளிக்காசு உமக்கிருக்கட்டும்; உம் காவலர்களுக்கும் இருநூறு காசுகள் இருக்கட்டும்.
உன்னதப்பாட்டு 8 : 13 (RCTA)
இறுதிப் பிற்சேர்க்கைகள்: தோட்டங்களில் வாழ்கிறவளே! என் தோழர்கள் உன் குரலொலிக்குச் செவி மடுத்துக் கவனமாய்க் கேட்கிறார்கள்: நானும் அதைக் கேட்கக் கூடாதோ?
உன்னதப்பாட்டு 8 : 14 (RCTA)
என் காதலரே! விரைந்து ஓடிவிடுக! வாசனைச் செடிகளுள்ள மலைகளில் இருக்கும் வெளிமானுக்கும் இளங் கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14