உன்னதப்பாட்டு 4 : 1 (RCTA)
தலைமகன்: என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன் முகத்திரைக்குப் பின்னால் இருக்கின்ற உன்னுடைய கண்கள் வெண்புறாக்கள். உனது கருங் கூந்தல் கலாத் மலைச் சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.
உன்னதப்பாட்டு 4 : 2 (RCTA)
மயிர்கத்தரித்த பின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லம் இரட்டைக் குட்டி போட்டன; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
உன்னதப்பாட்டு 4 : 3 (RCTA)
உன்னுடைய இதழ்கள் செம்பட்டு நூலிழைகள், உன்னுடைய சொற்கள் இனிமையானவை; உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும்.
உன்னதப்பாட்டு 4 : 4 (RCTA)
உன் கழுத்து அரண்கள் இடப்பட்ட தாவீதின் கோபுரத்துக்கு நிகரானது. அங்கே வீரர்களின் கேடயங்களான ஆயிரம் பரிசைகள் தொங்குகின்றன
உன்னதப்பாட்டு 4 : 5 (RCTA)
உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், லீலிகள் நடுவில் மேயும் இரட்டை வெளிமான் கன்றுகள்
உன்னதப்பாட்டு 4 : 6 (RCTA)
வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையதற்கும் சாம்பிராணிக் குன்றுக்கும் போய் விடுவேன்.
உன்னதப்பாட்டு 4 : 7 (RCTA)
என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது.
உன்னதப்பாட்டு 4 : 8 (RCTA)
லீபானிலிருந்து வா, என் மணமகளே, லீபானிலிருந்து வந்திடுவாய். அமனா மலையுச்சி, சானீர், ஏர்மோன் முதலிய மலைகளின் கொடுமுடியிலிருந்தும் சிங்கக் குகைகள், சிவிங்கி மறைவிடங்கள் ஆகியவற்றினின்றும் இறங்கிவா.
உன்னதப்பாட்டு 4 : 9 (RCTA)
என் தங்காய்! என் மணமகளே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! உன் கண்களின் நோக்கு ஒன்றினாலும் உன் கழுத்து ஆரத்தின் ஒரு முத்தினாலும் உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே!
உன்னதப்பாட்டு 4 : 10 (RCTA)
உன் காதலின்பம் எவ்வளவு இனிமை! என் தங்காய்! என் மணமகளே! உன் காதலின்பம் திராட்சை இரசத்தைக் காட்டிலும், உன் தைலங்களின் மணம் பரிமளத்தைக் காட்டிலும், எவ்வளவோ மிகுந்த சிறப்புள்ளவை.
உன்னதப்பாட்டு 4 : 11 (RCTA)
என் மணமகளே! உன் இதழ்கள் தேறலைச் சிந்துகின்றன; உன் நாவின் அடியில் தேனும் பாலும் இருக்கின்றன; உன் ஆடைகள் பரப்பும் நறுமணமோ லீபானின் நறுமணம் போல் கமழ்கின்றதே.
உன்னதப்பாட்டு 4 : 12 (RCTA)
பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.
உன்னதப்பாட்டு 4 : 13 (RCTA)
மாதுளைப் பழத்தோட்டமாய் நீ தளிர்த்தாய், அங்கே மணங்கமழ் மரஞ்செடிகொடிகள் எல்லாம் உள்ளன;
உன்னதப்பாட்டு 4 : 14 (RCTA)
நளத்தம், குங்குமம், வசம்பு, லவங்கம், சாம்பிராணி மரங்கள் அனைத்தும், வெள்ளைப் போளமும் கரிய போளமும், இன்னும் எல்லாச் சிறந்த நறுமணப் பொருட்களும் உள்ளன.
உன்னதப்பாட்டு 4 : 15 (RCTA)
தோட்டத்தைச் செழிப்பிக்கும் நீருற்று, உயிருள்ள நீர் சுரக்கும் கிணறு; லீபானிலிருந்து வழிந்தோடும் நீரோடைகளுமுள்ன.
உன்னதப்பாட்டு 4 : 16 (RCTA)
தலைமகள்: வாடையே, எழுந்திடுக; தென்றலே, வந்திடுக; என் தோட்டத்தின் மேல் வீசிடுக; அதன் நறுமணம் எங்கும் பரவட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16