ரூத் 4 : 1 (RCTA)
இதற்கிடையில் போசு நகர வாயிலை அடைந்து அங்கே அமர்ந்திருந்தான். அப்பொழுது அவன் முன்பு சொல்லியிருந்த அந்த உறவினன் அவ்வழியே வரக் கண்டு, அவன் பெயரைச் சொல்லி அழைத்து, "இங்கு வந்து சற்று அமரும்" என்று கூறினான். அவனும் வந்து அமர்ந்தான்.
ரூத் 4 : 2 (RCTA)
பின்னர் போசு நகரின் மூப்பருள் பத்துப்பேரை அழைத்து வந்து, "இங்கே அமருங்கள்" என்று அவர்களுக்குச் சொன்னான்.
ரூத் 4 : 3 (RCTA)
அவர்களும் உட்கார்ந்த பின் போசு அந்த உறவினனை நோக்கி, "மோவாப் நாட்டினின்று திரும்பி வந்த நோயேமி, நம் சகோதரனான எலிமெலேக்குடைய வயலை விற்கப் போகிறாள்.
ரூத் 4 : 4 (RCTA)
இங்கு அமர்ந்திருப்போர் அனைவர் முன்னிலையிலும், மக்களுள் முதியோர் முன்னிலையிலும் நீ இதை அறியும்படி சொல்ல விரும்பினேன். உறவின் முறைப்படி நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பின், மீட்டுக்கொள்; உனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் என்ன செய்ய வெண்டும் என்று கூறிவிடு. முதலாவது நீ, இரண்டாவது நான். ஆக உன்னையும் என்னையும் தவிர வேறு எந்த உறவினனும் இல்லை" என்று சொன்னான். "நான் நிலத்தை மீட்டுக்கொள்வேன்" என்று அவன் பதில் கூறினான்.
ரூத் 4 : 5 (RCTA)
போசு அவனை நோக்கி. "நீ அப்பெண்ணிடமிருந்து அந்நிலத்தை வாங்குகிற போது இறந்து போன அவனுடைய மனைவியான மோவாபிய பெண் ரூத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினனுக்கு நீ வாரிசு அளித்து அவன் பெயர் நிலைநிற்கச் செய்ய வேண்டும்" என்றான்.
ரூத் 4 : 6 (RCTA)
அப்போது அவன், "என் குடும்பத்தில் நான் எனக்கு ஒரு வாரிசை எழுப்ப வேண்டும். எனவே எனக்குரிய உரிமையை நான் விட்டுக் கொடுக்கிறேன். அதை மனமார விட்டுக் கொடுப்பதாக இதோ வாக்களிக்கிறேன். எனவே, எனக்குள்ள உரிமையை நீரே பயன்படுத்திக்கொள்ளும்" என்று மறுமொழி கூறினான்.
ரூத் 4 : 7 (RCTA)
இஸ்ராயேலில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கப்படி உறவினர்களில் ஒருவன் மற்றொருவன் கையில் தன் உரிமை முழுவதையும் கொடுக்கும் பொழுது, அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக அவன் தன் மிதியடியைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ராயேலில் உரிமை மாற்றத்தின் அடையாளமாய் இருந்து வந்தது.
ரூத் 4 : 8 (RCTA)
எனவே, போசு தன் உறவினனைப் பார்த்து, "உன் மிதியடியைச் கழற்று" என உரைத்தான். அவனும் உடனே தன் காலில் கிடந்த மிதியடியைக் கழற்றிப் போட்டான்.
ரூத் 4 : 9 (RCTA)
அப்பொழுது போசு மக்களுள் மூப்பரையும் எல்லா மக்களையும் பார்த்து, "எலிமெலேக், கேளியோன், மகலோன் என்பவர்களுக்குச் சொந்தமாயிருந்த எல்லாவற்றையும் நோயேமியின் கையிலிருந்து நான் பெற்றுக் கொண்டேன் என்பதற்கு நீங்களே சாட்சி.
ரூத் 4 : 10 (RCTA)
மேலும், இறந்தவனுடைய பெயர் அவன் குடும்பத்தினின்றும், சகோதரர் மக்களிடமிருந்தும் அற்றுப் போகாமல் தன் கோத்திரத்திலேயே அவன் பெயர் நிலை நிற்கச் செய்யும் பொருட்டு மகலோன் மனைவியாகிய மோவாபிய ரூத்தை நான் மணந்து கொள்வதற்கும் நீங்களே சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றான்.
ரூத் 4 : 11 (RCTA)
வாயிலில் இருந்த எல்லா மக்களும் மக்களுள் மூப்பரும் அவனை நோக்கி, "நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம்; உன் வீட்டிற்கு வரப்போகிற இப்பெண்ணை ஆண்டவர் இஸ்ராயேல் வீட்டைக் கட்டி எழுப்பிய ராக்கேலைப் போலவும் லீயாளைப் போலவும் ஆசீர்வதிப்பாராக. இவள் எப்ராத்தா ஊரிலே புண்ணியத்தின் மாதிரியாய் இருந்து பெத்லகேமில் புகழ் பெற்றிருப்பாளாக!
ரூத் 4 : 12 (RCTA)
இவ்விளம் பெண் மூலம் ஆண்டவர் உனக்கு அருளவிருக்கிற மகப்பேற்றினால் உன் வீடு, தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பாரேசுடைய வீட்டைப்போல் ஆகக்கடவது" என்றனர்.
ரூத் 4 : 13 (RCTA)
ஆகையால், போசு ரூத்தை மணந்து தன் மனைவியாக அவளை ஏற்றுக்கொண்டான். அவர்கள் கூடி வாழ்ந்த போது அவள் கருவுற்று ஒரு மகளைப் பெறும்படி ஆண்டவர் அவள் மேல் அருள் கூர்ந்தார்.
ரூத் 4 : 14 (RCTA)
அப்பொழுது பெண்கள் நோயேமியை நோக்கி, "ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! ஏனெனில் அவர் உன் குடும்பத்தில் வாரிசு அற்றுப் போகவிடாமல், அவன் பெயர் இஸ்ராயேலில் புகழடையச் செய்துள்ளார்.
ரூத் 4 : 15 (RCTA)
அத்தோடு உன் மனத்தைத் தேற்றி முதிர்ந்த வயதில் உன்னைக் காப்பாற்ற ஒருவனை உனக்குத் தந்தருளினார். உனக்கு அன்பு செய்யும் மருமகளுக்குப் பிள்ளை பிறந்திருப்பது உனக்கு ஏழு புதல்வர்கள் இருப்பதிலும் சிறந்தது அன்றோ?" என்றனர்.
ரூத் 4 : 16 (RCTA)
நோயேமி அப்பிள்ளையை எடுத்துத் தன்மடியிலே வைத்துக்கொண்டு அதன் செவிலித் தாயாகக் குழந்தையை இடுப்பிலே தூக்கி வளர்த்து வந்தாள்.
ரூத் 4 : 17 (RCTA)
அண்டை வீட்டுப் பெண்களோ, 'நோயேமிக்கு ஒரு மகன் பிறந்தான்' என்று அவளை வாழ்த்தி, அவனுக்கு ஒபேது என்று பெயர் இட்டனர். அவன்தான் தாவீதின் தந்தையாகிய ஈசாயியுடைய தந்தை.
ரூத் 4 : 18 (RCTA)
பாரேசுடைய தலைமுறை அட்டவணையாவது:
ரூத் 4 : 19 (RCTA)
பாரேசு எசுரோனைப் பெற்றார்; எசுரோன் ஆராமைப் பெற்றார்; ஆராம் அமினதாபைப் பெற்றார்;
ரூத் 4 : 20 (RCTA)
அமினதாப் நகசோனைப் பெற்றார்;
ரூத் 4 : 21 (RCTA)
நகசோன் சால்மேனைப் பெற்றார்;
ரூத் 4 : 22 (RCTA)
சால்மேன் போசைப் பெற்றார்; போசு ஒபேதைப் பெற்றார்; ஒபேது ஈசாயியைப் பெற்றார்; ஈசாயி தாவீதைப் பெற்றார்.
❮
❯