ரூத் 3 : 1 (RCTA)
ரூத் தன் மாமியிடம் திரும்பி வந்தபின் அவளை நோக்கி, "என் மகளே, நீ நலமாய் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்; உனக்கு நன்மை உண்டாகும்படி முயல்வேன்.
ரூத் 3 : 2 (RCTA)
நீ யாருடைய வேலைக்காரிகளோடு வயலில் இருந்தாயோ, அந்தப் போசு நம் உறவினன் தான். இன்றிரவு அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
ரூத் 3 : 3 (RCTA)
ஆகையால் நீ குளித்து எண்ணெய் பூசி நல்ல துணிகளை உடுத்திக்கொண்டு அக்களத்திற்குப் போ. அவன் உண்டு குடித்து முடிக்கும் வரை நீ அவன் கண்ணில் படாதபடி இருக்க வேண்டும்.
ரூத் 3 : 4 (RCTA)
அவன் படுக்க ச்செல்லும்போது அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்துக்கொள். பின்னர் நீ அங்குச் சென்று அவன் கால்களை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கி, நீயும் அங்கேயே படுத்துக்கொள். பிறகு நீ செய்ய வேண்டியது என்ன என்று அவனே உனக்குச் சொல்வான்" என்றாள்.
ரூத் 3 : 5 (RCTA)
அதற்கு அவள், "நீர் எனக்குச் சொன்னபடி எல்லாம் செய்வேன்" என்று சொன்னாள்.
ரூத் 3 : 6 (RCTA)
பின் களத்திற்குப் போய் மாமி தனக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் செய்தாள்.
ரூத் 3 : 7 (RCTA)
போசு உண்டு குடித்து மகிழ்ந்த பின் ஒரு கதிர்க் கட்டருகில் படுக்கச் சென்றான். இவளோ மறைவில் வந்து அவன் கால்மாட்டுப் போர்வையை ஒதுக்கிப் படுத்துக் கொண்டாள்.
ரூத் 3 : 8 (RCTA)
நள்ளிரவில் அவன் திடுக்குற்று எழுந்து தன் கால்மாட்டில் ஒரு பெண் படுத்திருக்கக் கண்டு அஞ்சினான்.
ரூத் 3 : 9 (RCTA)
நீ யார்? என்று அவன் அவளைக் கேட்டான். அதற்கு அவள், "நான் உம் அடியாளாகிய ரூத். நீர் என் உறவினராய் இருப்பதால் அடியாள் மேல் உமது போர்வையைப் போர்த்தும்" எனப் பதில் கூறினாள்.
ரூத் 3 : 10 (RCTA)
அவனோ, "மகளே, நீ ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவளே. ஏனெனில், ஏழை அல்லது பணக்கார இளைஞனை நீ தேடிப்போகவில்லை. எனவே, உன் முந்தின இரக்கச் செயலை விட இப்போது நீ செய்ததே மேலானது.
ரூத் 3 : 11 (RCTA)
ஆகையால் நீ அஞ்சவேண்டாம். மேலும், நீ என்னிடம் கேட்பதெல்லாம் நான் உனக்குச் செய்வேன். ஏனெனில் என் நகரில் வாழ்கிற மக்கள் எல்லாரும் நீ புண்ணியவதி என்று அறிந்திருக்கிறார்கள்.
ரூத் 3 : 12 (RCTA)
நான் உனக்கு உறவினன் என்பது மெய்தான். எனினும், என்னிலும் நெருங்கின உறவினன் வேறு ஒருவன் இருக்கிறான்.
ரூத் 3 : 13 (RCTA)
இன்றிரவு அமைதியாய் இரு. நாளை அவன் உறவின் முறையைப் பற்றி உன்னை மணந்து கொள்ளச் சம்மதிப்பானானால் நல்லது. அவன் உன்னை மணந்து கொள்ள மனம் இசையாவிடில் யாதொரு சந்தேகமுமின்றி நான் உன்னை மணந்து கௌ;வதாக ஆண்டவர்மேல் ஆணையிடுகிறேன். ஆகவே, விடியும் வரை தூங்கு" என்று சொன்னான்.
ரூத் 3 : 14 (RCTA)
எனவே, விடியும் வரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். பின் ஒருவரை ஒருவர் அவர்கள் அடையாளம் அறிந்து கொள்ளும் முன்பே அவள் படுக்கையினின்று எழுந்தாள். போசு அவளை நோக்கி, "நீ இங்கே வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்க வேண்டாம்" என்றான்.
ரூத் 3 : 15 (RCTA)
மீண்டும் அவளை நோக்கி, "நீ போர்த்தியிருக்கிற போர்வையை விரித்து இரு கைகளிலும் பிடித்துக்கொள்" என்றான். அவள் விரித்துப் பிடிக்க அவன் அதில் ஆறு மரக்கால் வாற் கோதுமையை அளந்து போட்டு அவள் தலையில் தூக்கி வைத்தான். அவள் அதை எடுத்துக்கொண்டு நகரில் நுழைந்து, தன் மாமியிடம் வந்தாள்.
ரூத் 3 : 16 (RCTA)
அவள், "மகளே, என்ன நடந்தது?" என்று கேட்டாள். அதற்கு மருமகள் அம்மனிதன் தனக்குச் செய்ததை எல்லாம் அவளுக்கு விரிவாய் எடுத்துரைத்தாள்.
ரூத் 3 : 17 (RCTA)
ரூத் மறுமுறையும், "அவர் என்னைப் பார்த்து; 'உன் மாமியிடம் நீ வெறுங்கையுடன் போகவேண்டாம்' என்று சொல்லி, ஆறு மரக்கால் வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார்" என்று சொன்னாள்.
ரூத் 3 : 18 (RCTA)
அப்போது நோயேமி, "காரியம் எப்படி முடியுமோ என்று தெரியும் வரை பொறுத்திரு, மகளே; ஏனெனில் அவன் சொன்னதை நிறைவேற்றாமல் விடமாட்டான்" என்றாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18