ரூத் 2 : 1 (RCTA)
நோயேமியுடைய கணவனான எலிமெலேக்கின் உறவினனும் செல்வாக்கு உள்ளவனும் பெருத்த செல்வந்தனுமான போசு என்ற ஒருவன் இருந்தான்.
ரூத் 2 : 2 (RCTA)
மோவாபிய பெண் ரூத் தன் மாமியை நோக்கி, "நீர் அனுமதி கொடுத்தால் நான் வயல்வெளிக்குப் போய் எந்தக் குடியானவனுடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவன் பிறகே சென்று, அறுவடை செய்கிறவர்களுடைய கைக்குத் தப்பின கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருவேன்" என்றாள். அதற்கு நோயேமி, "என் மகளே, போய் வா" என்றாள்.
ரூத் 2 : 3 (RCTA)
ரூத் அவ்வாறே சென்று அறுவடை செய்கிறவர்கள் பிறகே கதிர்களைப் பொறுக்கி வந்தாள். அந்த வயலோ எலிமெலேக்கின் உறவினனான போசுக்குச் சொந்தமானது.
ரூத் 2 : 4 (RCTA)
அந்நேரத்தில் அவனே பெத்லகேமிலிருந்து வந்து அறுவடை செய்தவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்றான். அதற்கு வேலைக்காரர், "ஆண்டவர் உம்மை ஆசீர்வதிப்பாராக" என்றனர்.
ரூத் 2 : 5 (RCTA)
மேலும், போசு அறுவடை செய்தவர்களை மேற்பார்த்து வந்த ஓர் இளைஞனை நோக்கி, "யாருடைய பெண் இவள்?" என்று வினவினான்.
ரூத் 2 : 6 (RCTA)
அதற்கு அவன், "இவள், மோவாப் நாட்டிலிருந்து நோயேமியோடு வந்த மோவாபிய பெண்.
ரூத் 2 : 7 (RCTA)
அறுவடை செய்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரை வயலிலேயே நிற்கிறாள். சிறிது நேரத்திற்குக் கூட அவள் வீட்டுக்குப் போகவில்லை" என்று சொன்னான்.
ரூத் 2 : 8 (RCTA)
இப்பொழுது போசு ரூத்தைப் பார்த்து, "மகளே, கேள். கதிர் பொறுக்குவதற்காக நீ வேறு வயலுக்குப் போகாமலும், இவ்விடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமலும் இங்கேயே என் ஊழியக்காரிகளோடு தங்கியிரு.
ரூத் 2 : 9 (RCTA)
அவர்கள் அறுவடை செய்யும்போது நீ அவர்கள் பிறகே போ; ஒருவரும் உனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று என் ஆட்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, உனக்குத் தாகம் எடுத்தால் தண்ணீர்க் குடங்கள் அருகே சென்று வேலைக்காரர் குடிக்கிற தண்ணீரையே நீயும் குடிக்கலாம்" என்றான்.
ரூத் 2 : 10 (RCTA)
அப்பொழுது அவள் தரையில் முகம் குப்புற விழுந்து வாழ்த்தி, அவனை நோக்கி, "தங்கள் கண்களில் எனக்குத் தயை கிடைத்ததும், அன்னிய பெண்ணாகிய என்னைத் தாங்கள் கவனித்துக் கொள்ளும்படி மனம் வைத்ததும் ஏனோ?" என்றாள்.
ரூத் 2 : 11 (RCTA)
அதற்குப் போசு, "உன் கணவன் இறந்த பிறகு நீ உன் மாமிக்குச் செய்தவை அனைத்தும், நீ உன் பெற்றொரையும் பிறந்த நாட்டையும் விட்டு விட்டு, முன்பின் அறியாத மக்களிடம் வந்ததும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன.
ரூத் 2 : 12 (RCTA)
உன் செயலுக்கு ஏற்ற வெகுமதியைக் கடவுள் உனக்கு அளிப்பாராக! நீ இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை நாடி அவரது திருவடியே தஞ்சம் எனத் தேடி வந்தாயே; அவரால் முழுக் கைம்மாறு பெறுவாயாக!" என்றான்.
ரூத் 2 : 13 (RCTA)
அதற்கு அவள், "ஐயா, உம் வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் நான் சமமற்றவளாயினும், நீர் அடியாளைத் தேற்றி என் இதயத்தோடு பேசியதால் உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததே" என்றாள்.
ரூத் 2 : 14 (RCTA)
மறுமுறையும் போசு அவளைப்பார்த்து, "சாப்பிட நேரமாகும் போது நீ இங்கே வந்து அப்பம் சாப்பிடு. காடியில் உன் அப்பத் துண்டுகளைத் தோய்த்துக் கொள்" என்றான். அவள் அப்படியே அறுவடை செய்கிறவர்களின் அருகே அமர்ந்து, வறுத்த கோதுமையை வயிறார உண்டு, எஞ்சியதை வைத்துக் கொண்டாள்.
ரூத் 2 : 15 (RCTA)
மேலும், வழக்கப்படி அவள் கதிர்களைப் பொறுக்கச் சென்றபோது, போசு தன் வேலைக்காரர்களை நோக்கி, "அவள் உங்களோடு அறுக்க வந்தாலும் நீங்கள் அவளைத் தடுக்க வேண்டாம்.
ரூத் 2 : 16 (RCTA)
உங்கள் அரிகளிலே வேண்டுமென்றே சிலவற்றைச் சிந்தி நிலத்தில் போட்டுவிடுங்கள். அவள் கூச்சமின்றிப் பொறுக்கிக் கொள்ளட்டும். அவள் பொறுக்கும் போது அவளை அதட்டாதீர்கள்" என்று பணித்தான்.
ரூத் 2 : 17 (RCTA)
அப்படியே அவள் மாலை வரை கதிர்களைப் பொறுக்கி, பொறுக்கினதைத் தடிகொண்டு அடித்துத் தூற்றி ஏறக்குறைய மூன்று மரக்கால் கொண்ட ஒரு ஏப்பி அளவு வாற்கோதுமை இருக்கக் கண்டாள்.
ரூத் 2 : 18 (RCTA)
அவள் அதைச் சுமந்து கொண்டு நகருக்குத் திரும்பி வந்து தன் மாமிக்குக் காண்பித்தாள்; அத்தோடு, தான் வயிறார உண்டபின் மீதியாக வைத்திருந்ததையும் அவளுக்குக் கொடுத்தாள்.
ரூத் 2 : 19 (RCTA)
அப்பொழுது அவளுடைய மாமி, "இன்று நீ எங்கே கதிர் பொறுக்கினாய்? எங்கு வேலை செய்தாய்? உன்மேல் தயவு காட்டினவன் ஆசிர்வதிக்கப்பட்டவனே" என்று சொன்னாள். அவளோ, தான் யாரிடத்தில் வேலை செய்தாள் என்றும், அம்மனிதனுடைய பெயர் போசு என்றும் அவளுக்கு சொன்னாள்.
ரூத் 2 : 20 (RCTA)
அதற்கு நோயேமி, "ஆண்டவரால் அவன் ஆசீர்வதிக்கப்படக்கடவான்! ஏனெனில் அவன் உயிரோடிருக்கிறவர்களுக்குச் செய்து வந்த உதவியை இறந்தோர்க்கும் செய்து வருகிறான்" எனப் பதில் கூறினாள். மீண்டும் மருமகளைப் பார்த்து, "அம்மனிதன் நம் உறவினன்தான்" என்றாள். அப்பொழுது ரூத், "வெள்ளாண்மை முழுவதையும் அறுத்து முடியும் வரை
ரூத் 2 : 21 (RCTA)
அவர் தம் வேலைக்காரிகளோடு என்னை இருக்கச் சொல்லியிருக்கிறார்" என்றாள்.
ரூத் 2 : 22 (RCTA)
அதற்கு மாமி, "மகளே, வேறொரு வயலுக்குப் போனால் மனிதர் உன்னைத் தடுக்கலாம். ஆகையால் நீ இவனுடைய வேலைக்காரிகளோடு அறுக்கப் போவது மேலானது" என்றாள்.
ரூத் 2 : 23 (RCTA)
அப்படியே அவள் போசுடைய வேலைக்காரிகளுடன் தங்கி வாற்கோதுமையும் தானியங்களும் களஞ்சியத்தில் சேரும் வரை அவர்களோடு அறுவடை செய்து வந்தாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23