ரோமர் 7 : 1 (RCTA)
சகோதரர்களே, உயிரோடு இருக்கும் வரையில்தான் ஒருவன்மேல் சட்டத்திற்கு அதிகாரம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? சட்டம் தெரிந்தவர்களைக் கேட்கிறேன்.
ரோமர் 7 : 2 (RCTA)
எடுத்துக்காட்டாக, மணமான பெண் ஒருத்தி, கணவன் உயிரோடு இருக்கும் வரையில் தான் திருமணச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். கணவன் இறந்துவிட்டால் அந்தச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுகிறாள்.
ரோமர் 7 : 3 (RCTA)
ஆகையால், கணவன் உயிரோடிருக்கும்போதே அவள் வேறொருவனோடு வாழ்ந்தால், அவளுக்கு விபசாரி என்ற பெயர் கிடைக்கும்; ஆனால், கணவன் இறந்து போனால், அவள் திருமணச் சட்டத்தினின்று விடுதலைபெற்றவள் ஆகிறாள், ஆகவே அவள் வேறொருவனுக்கு மனைவியானால், விபசாரி அல்லள்.
ரோமர் 7 : 4 (RCTA)
அவ்வாறே, என் சகோதரர்களே, நீங்களே கிறிஸ்துவின் உடலோடு ஒன்றித்திருப்பதால் சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள் ஆனீர்கள்; அதன் விளைவாக, வேறொருவரோடு பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர். நாம் கடவுளுக்கேற்ற பயன்தர வேண்டுமென்றே அவர் உயிர்த்தெழுந்தார்.
ரோமர் 7 : 5 (RCTA)
நாம் ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, பாவ இச்சைகள் சட்டத்தின் வழியாய்க் கிளர்ந்து எழும்பி, நம்முடைய உறுப்புகளில் சாவுக்கேற்ற பயன் தரும்படியாகச் செயலாற்றின.
ரோமர் 7 : 6 (RCTA)
இப்பொழுதோ நாம் கட்டுண்டிருந்த சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்து, அதனின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதிய சட்டத்திற்குரிய பழைய நெறியில் இனி ஊழியம் செய்வதை விட்டு ஆவியானவருக்குரிய புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிந்தது.
ரோமர் 7 : 7 (RCTA)
அப்படியானால், நாம் என்ன சொல்வது? சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருகாலும் இல்லை. ஆயினும், சட்டம் இல்லாதிருந்தால் நான் பாவத்தை அறிந்திருக்க மாட்டேன். ஏனெனில், 'இச்சியாதே' எனச் சட்டம் சொல்லாமற்போயிருந்தால், இச்சை என்பது என்ன என்றே நான் அறிந்திருக்கமாட்டேன்.
ரோமர் 7 : 8 (RCTA)
ஆனால், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னில் எல்லாவகை இச்சைகளையும் தூண்டிற்று. ஏனெனில், சட்டம் இல்லாவிடிலும் பாவம் செத்துக்கிடக்கிறது.
ரோமர் 7 : 9 (RCTA)
ஒரு காலத்தில் சட்டம் இல்லாதபோது நான் உயிர் உள்ளவனாயிருந்தேன். கட்டளை வந்தபோது பாவம் உயிர்பெற்றது; நானோ உயிரிழந்தேன்.
ரோமர் 7 : 10 (RCTA)
வாழ்வுக்கு வழியாய் இருக்க வேண்டிய கட்டளை, சாவுக்கு வழியாயிற்று எனக் கண்டேன்.
ரோமர் 7 : 11 (RCTA)
ஏனெனில், கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாவம் என்னை வஞ்சித்து அந்தக் கட்டளை வழியாக என்னைக் கொன்றது.
ரோமர் 7 : 12 (RCTA)
சட்டம் தன்னிலேயே பரிசுத்தமானது தான்; அவ்வாறே கட்டளையும் பரிசுத்தமானது, நீதியானது, நன்மை மிக்கது.
ரோமர் 7 : 13 (RCTA)
அவ்வாறாயின், நன்மை மிக்கதான ஒன்று, எனக்குச் சாவாக மாறிற்றா? ஒருகாலும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்; பாவம் தன் இயல்பைக் காட்டுவதற்காக நல்லதாகிய ஒன்றைக்கொண்டு எனக்குச் சாவை விளைவித்தது; இவ்வாறு, பாவம் கட்டளையின் வழியாகத் தன் கொடிய இயல்பை அளவு கடந்த முறையில் காட்டுவதாயிற்று.
ரோமர் 7 : 14 (RCTA)
சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; நானோ பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்: சீரழிந்த இயல்புள்ளவன்.
ரோமர் 7 : 15 (RCTA)
ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ, அதையே செய்கிறேன்.
ரோமர் 7 : 16 (RCTA)
எனக்கு விருப்பம் இல்லாததையே நான் செய்தால், சட்டம் நல்லது என ஏற்றுக் கொள்கிறேன்.
ரோமர் 7 : 17 (RCTA)
ஆனால், அவ்வாறெல்லாம் செயல்புரிபவன் நானல்லேன்; என்னுள் குடிகொண்டிருக்கும் பாவம்தான் செயல்புரிகிறது.
ரோமர் 7 : 18 (RCTA)
ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் இயல்பில், நன்மை எதுவும் குடி கொண்டில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. அதைச் செய்யத்தான் முடியவில்லை.
ரோமர் 7 : 19 (RCTA)
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
ரோமர் 7 : 20 (RCTA)
அப்படி நான் எதை விரும்பவில்லையோ அதையே செய்கிறேன் என்றால், அதைச் செய்பவன் நானல்லேன். என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே அதைச் செய்கிறது என்பது தெளிவு
ரோமர் 7 : 21 (RCTA)
ஆகவே, நான் நன்மை செய்ய விரும்பும்போதெல்லாம், என் கைக்கு எட்டுவது தீமைதான்; இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்.
ரோமர் 7 : 22 (RCTA)
ஏனெனில், என் உள்மனத்தில் நான் கடவுளின் சட்டத்திற்கு மனமுவந்து உட்படுகிறேன்.
ரோமர் 7 : 23 (RCTA)
ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது. என் உறுப்புகளில் இருக்கும் பாவச் சட்டத்திற்கு என்னைச் சிறைப்படுத்துகிறது.
ரோமர் 7 : 24 (RCTA)
ஆழ் துயரில் மூழ்கியுள்ள மனிதன் நான்! சாவின் பிடியிலுள்ள இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
ரோமர் 7 : 25 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு நன்றி. சுருங்கச் செல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் நானே வலுவற்ற என் இயல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் உட்பட்டிருக்கிறேன்.
❮
❯