ரோமர் 2 : 1 (RCTA)
ஆகையால், பிறருக்குத் திர்ப்பிடும் மனிதா, நீ யாராயினும் சரி, சாக்குச் சொல்லுவதற்கு வழியில்லை. ஏனெனில், பிறருக்குத் தீர்ப்பிடுவதால் நீ உனக்கு எதிராகவே தீர்ப்புக் கூறுகிறாய்; தீர்ப்புக்கூறும் நீயே அவற்றைச் செய்கிறாயே!
ரோமர் 2 : 2 (RCTA)
இத்தகைய செயல்களைச் செய்வோருக்குக் கடவுள் இடும் தீர்ப்பு நீதி வழுவாதது என்று நமக்குத் தெரியும்.
ரோமர் 2 : 3 (RCTA)
இவற்றைச் செய்பவர்களின் மேல் தீர்ப்புக் கூறும் நீயும் இவற்றையே செய்து வருகிறாய். நீ மட்டும் கடவுளின் தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாயா?
ரோமர் 2 : 4 (RCTA)
அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்பையும் பொறுமையையும் புறக்கணிக்கின்றாயா ? கடவுள் பரிவு காட்டுவது உன்னை மனந்திரும்பத் தூண்டுவதற்கே என்பதை அறியாயோ?
ரோமர் 2 : 5 (RCTA)
உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால், கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப் போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.
ரோமர் 2 : 6 (RCTA)
அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.
ரோமர் 2 : 7 (RCTA)
நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு முடிவில்லாத வாழ்வை வழங்குவார்.
ரோமர் 2 : 8 (RCTA)
ஆனால், கட்சி மனப்பான்மை உள்ளவர்களாய், உண்மைக்குப் பணியாமல், அநியாயத்திற்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் வெகுளியும் வந்து விழும்.
ரோமர் 2 : 9 (RCTA)
முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், தீமை செய்யும் எந்த மனிதனுக்குமே, வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
ரோமர் 2 : 10 (RCTA)
அவ்வாறே, முதலில் யூதனுக்கும், அடுத்துக் கிரேக்கனுக்கும், நன்மை செய்யும் அனைவருக்குமே, மகிமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
ரோமர் 2 : 11 (RCTA)
ஏனெனில், ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம் இல்லை.
ரோமர் 2 : 12 (RCTA)
திருச்சட்டத்தை அறியாமல் பாவஞ் செய்தவன் எவனும் திருச்சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவான்; திருச்சட்டத்திற்கு உட்பட்டுப் பாவம் செய்தவன் எவனும் திருச்சட்டத்தினால் தீர்ப்பிடப்படுவான்.
ரோமர் 2 : 13 (RCTA)
ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ரோமர் 2 : 14 (RCTA)
திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகேவே நிறைவேற்றும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே சட்டமாய் அமைகிறது.
ரோமர் 2 : 15 (RCTA)
திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
ரோமர் 2 : 16 (RCTA)
நான் அறிவிக்கும் நற்செய்தியில் உள்ளதுபோல, இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைத் தீர்ப்பிடும் நாளில் மேற்சொன்னவையெல்லாம் வெளியாகும்.
ரோமர் 2 : 17 (RCTA)
ஆனால் யூதன் என்னும் பெயர் தாங்கியுள்ள நீ திருச்சட்டத்தில் ஊன்றி நிற்கிறாய்;
ரோமர் 2 : 18 (RCTA)
கடவுளைப்பற்றிப் பெருமைப் படுகிறாய்; அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறாய்; திருச்சட்டத்தைக் கற்றறிந்தவனாதலால் நன்மையானதைத் தேர்ந்து தெளிகிறாய்.
ரோமர் 2 : 19 (RCTA)
அறிவும் உண்மையுமே உருவான திருச்சட்டம் உனக்கு உண்டென்கிற துணிவில்,
ரோமர் 2 : 20 (RCTA)
குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில், இருப்போருக்கு ஒளியாகவும் அறிவீனர்களுக்கு ஆசானாகவும், குழந்தைகளுக்குப் போதகனாகவும் இருக்க முற்படுகிறாய்.
ரோமர் 2 : 21 (RCTA)
இவ்வாறு பிறனுக்குப் போதிக்கும் நீ, உனக்கே போதித்துக்கொள்ள வில்லையே! திருடாதே எனக் கற்பிக்கும் நீ, திருடுகிறாய்!
ரோமர் 2 : 22 (RCTA)
விபசாரம் செய்யாதே எனச் சொல்லும் நீ, விபசாரம் செய்கிறாய்! தெய்வங்களின் சிலைகளை அருவருக்கும் நீ, கோயில்களைக் கொள்ளையிடுகிறாய்!
ரோமர் 2 : 23 (RCTA)
திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப் படும் நீ, அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவு படுத்துகிறாய்!
ரோமர் 2 : 24 (RCTA)
ஆம், மறை நூலில் உள்ளவாறு 'உங்களால் கடவுளின் பெயர் புறவினத்தாரிடையே பழிப்புக்குள்ளாகிறது'.
ரோமர் 2 : 25 (RCTA)
திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் பயனுண்டு, மெய்தான்; ஆனால் திருச்சட்டத்தை மீறுபவனாய் இருந்தால், நீ விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவனாகிவிட்டாய்.
ரோமர் 2 : 26 (RCTA)
ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவன் திருச்சட்டத்தின் முறைமைகளைக் கடைபிடித்தால், விருத்தசேதனம் இல்லாத நிலை, விருத்தசேதனம் உள்ள நிலைபோல் கருதப்படும் அன்றோ?
ரோமர் 2 : 27 (RCTA)
உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.
ரோமர் 2 : 28 (RCTA)
ஏனெனில், புறத்திலே மட்டும் யூதனாய் இருப்பவன் யூதனல்லன்; அவ்வாறே புறத்தில், அதாவது, உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும், விருத்தசேதனமன்று.
ரோமர் 2 : 29 (RCTA)
ஆனால், உள்?ர யூதனாய் இருப்பவனே யூதன்; எழுதிய சட்டத்தின்படியல்லாமல், ஆவியானவர் அருளியபடி உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே, விருத்தசேதனம். அத்தகையவன் மனிதரிடமிருந்து அன்று, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29