ரோமர் 11 : 1 (RCTA)
அப்படியானால் கடவுள் தம் மக்களைத் தள்ளிவிட்டார் எனலாமா? ஒருகாலும் இல்லை. நானும் ஓர் இஸ்ராயேலன் தானே. நானும் ஆபிரகாமின் வழிவந்தவன்., பென்யமீனின் குலத்தைச் சார்ந்தவன்.
ரோமர் 11 : 2 (RCTA)
முன்பு தேர்ந்தெடுத்த தம் மக்களைக் கடவுள் தள்ளிவிடவில்லை. எலியாசைப் பற்றிய மறைநூல் பகுதி என்ன சொல்கிறது என்பதை அறியீர்களா ? அவர் இஸ்ராயேலுக்கு எதிராக,
ரோமர் 11 : 3 (RCTA)
ஆண்டவரே உம்முடைய வாக்குரைப்போரைக் கொன்று போட்டனர்; உம் பீடங்களைத் தகர்த்தெறிந்தனர்; எஞ்சியிருப்பவன் நான் ஒருவனே என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் ' என்று கடவுளிடம் மன்றாடினார்.
ரோமர் 11 : 4 (RCTA)
ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன? 'பொய்த் தேவன் பாகாலின் முன் முழந்தாளிட்டுப் பணியாத ஏழாயிரம்பேர் எனக்கென்று எஞ்சியிருக்கச் செய்துள்ளேன் ' என்பதாம்.
ரோமர் 11 : 5 (RCTA)
இக்காலத்தில் நிகழ்ந்துள்ளதும் இதுவே. இன்றும் அருளால் தேர்ந்தெடுக்கப் பட்டவராய் எஞ்சினோர் சிலர் உள்ளனர்.
ரோமர் 11 : 6 (RCTA)
அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயின், செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது பொருள்; செயல்களை முன்னிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அருள் அருளாகாது.
ரோமர் 11 : 7 (RCTA)
அப்படியானால் முடிவென்ன? தாங்கள் தேடுகிறதை இஸ்ராயேல் மக்கள் இன்னும் அடையவில்லை; அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் அடைந்தனர்; மற்றவர்களுடைய மனமோ மழுங்கிப் போயிற்று.
ரோமர் 11 : 8 (RCTA)
அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: ' மரத்துப்போன மனத்தைக் கடவுள் அவர்களுக்குத் தந்தார். காணாத கண்களையும் கேளாத செவிகளையும் தந்தார், இந்த நாள்வரை அவ்வாறே உள்ளனர். '
ரோமர் 11 : 9 (RCTA)
தாவீதும் இதைக் குறிப்பிடுகிறார்: ' அவர்கள் உண்ணும் விருந்தே அவர்களுக்குக் கண்ணியாகவும், வலைப்பொறியாகவும் ஆகட்டும், இடறலாகவும் தண்டனையாகவும் ஆகட்டும்.
ரோமர் 11 : 10 (RCTA)
காணமுடியாதபடி அவர்கள் கண்கள் இருளக்கடவன, என்றைக்கும் இறைவா அவர்கள் முதுகை வளைத்து விடும்.'
ரோமர் 11 : 11 (RCTA)
அப்படியானால், அவர்கள் கால் இடறியது விழுந்து ஒழிவதற்கா? இல்லவே இல்லை. அவர்கள் தவறியதால் புறவினத்தாருக்கு மீட்புக் கிடைத்தது; அவர்களுள் போட்டி மனப்பான்மையைத் தூண்டவே இங்ஙனம் ஆயிற்று.
ரோமர் 11 : 12 (RCTA)
அவர்கள் தவறியதால் உலகம் வளமுற்றதென்றால், அவர்கள் வீழ்ச்சியுற்றதால் புறவினத்தார் வளம்பெற்றனர் என்றால் யூதர்கள் முழுத் தொகையும் மனந்திரும்பும் போது அவ்வளம் இன்னும் எத்துணையோ மிகுதியாகும்.
ரோமர் 11 : 13 (RCTA)
புறவினத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் புறவினத்தாரின் அப்போஸ்தலன்தான்;
ரோமர் 11 : 14 (RCTA)
ஆனால் என் இனத்தாருள் போட்டி மனப்பான்மையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரை மீட்கக் கூடும் என்று நம்பியே அந்த அப்போஸ்தலத் திருப்பணியை மேலானதாக மதிக்கிறேன்.
ரோமர் 11 : 15 (RCTA)
யூதர்கள் தள்ளுண்டதால் உலகம் இறைவனோடு ஒப்புரவாயிற்று என்றால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது பற்றி என்னென்போம்? இறந்தோர் உயிர் பெறுவதாகும்.
ரோமர் 11 : 16 (RCTA)
முதலில் ஒரு பிடி மாவை இறைவனுக்கு அர்ப்பணித்துப் பரிசுத்தமாக்கினால், கலவை முழுவதும் பரிசுத்தம் ஆகிறது; அவ்வாறே வேர் பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமானவையே.
ரோமர் 11 : 17 (RCTA)
ஒலிவ மரத்தின் கிளைகள் சில தறிக்கப்பட்டபின், காட்டொலிவ மரக்கிளையாகிய நீ அந்த ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டு, அதன் வளமார்ந்த வேரோடு பங்கு பெற்றாய் எனின். அக்கிளைகளை விட உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ளாதே.
ரோமர் 11 : 18 (RCTA)
அப்படியே எண்ணிக் கொண்டாலும், நீ வேரைத் தாங்கவில்லை, வேர்தான் உன்னைத் தாங்குகிறது, என்பதை மறவாதே.
ரோமர் 11 : 19 (RCTA)
' நான் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன' என நீ சொல்லக்கூடும்.
ரோமர் 11 : 20 (RCTA)
சரிதான்; அவர்கள் விசுவசியாததால் தறிக்கப்பட்டார்கள், நீயோ விசுவாசிப்பதால் நிலைத்து நிற்கிறாய்; அதனால் நீ உன்னை உயர்வாக எண்ணிக்கொள்ள இடமில்லை; அச்சந்தான் உனக்கு இருக்க வேண்டும்.
ரோமர் 11 : 21 (RCTA)
ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் அழிக்காமல் விடவில்லை என்றால், உன்னையும் தண்டிக்காமல் விட மாட்டார்.
ரோமர் 11 : 22 (RCTA)
ஆகவே கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பார். தவறி வீழ்ந்தவர்கள் மேல் ஊன்றி நிற்க வேண்டும். இல்லையேல் நீயும் தறிக்கப்படுவாய்.
ரோமர் 11 : 23 (RCTA)
அவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் அவிசுவாசத்தை விட்டுவிட்டால், அவர்களும் ஒட்டப்படுவர். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
ரோமர் 11 : 24 (RCTA)
ஏனெனில் காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீ வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டாயானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுவது எவ்வளவு எளிது!
ரோமர் 11 : 25 (RCTA)
சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
ரோமர் 11 : 26 (RCTA)
இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னரே இஸ்ராயேல் இனம் மீட்கப்படும்; அதற்கொப்பவே மறை நூலிலும்: 'விடுதலை அளிப்பவர் சீயோனிலிருந்து வருவார், யாக்கோபின் குலத்திலிருந்து இறைப்பற்றின்மை அனைத்தையும் போக்கிவிடுவார்;
ரோமர் 11 : 27 (RCTA)
நான் அவர்களுடைய பாவங்களை எடுத்து விடுவேன். நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை இதுவே ' என்று எழுதியுள்ளது.
ரோமர் 11 : 28 (RCTA)
நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இறைவனின் வெறுப்புக்கு உரியவர்களே; அதுவும் உங்கள் நன்மைக்கே, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுடைய முன்னோரை முன்னிட்டு, அவர்கள் இறைவனின் அன்புக்கு உரியவர்களே.
ரோமர் 11 : 29 (RCTA)
ஏனெனில், கடவுள் தாம் கொடுத்த வரங்களையும், விடுத்த அழைப்பையும் திருப்பி வாங்கிக் கொள்வதில்லை.
ரோமர் 11 : 30 (RCTA)
ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டீர்கள்.
ரோமர் 11 : 31 (RCTA)
அதுபோல நீங்கள் இரக்கம் பெற்றுக்கொண்டதால் அவர்கள் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; அவர்கள் இப்படிக் கீழ்ப்படியாமல் இருப்பது, அவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வதற்கே.
ரோமர் 11 : 32 (RCTA)
ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகக் கடவுள் அனைவரும் கீழ்ப்படியாமையின் கொடுமையால் கட்டுண்டு கிடக்கச் செய்தார்.
ரோமர் 11 : 33 (RCTA)
கடவுளின் அருட்செல்வம் எத்துணை மிகுதியானது! அவரின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய திட்டங்கள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.
ரோமர் 11 : 34 (RCTA)
' ஏனெனில், ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார்?
ரோமர் 11 : 35 (RCTA)
கைம்மாறாக ஏதாவது பெற்றுக்கொள்ள முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?
ரோமர் 11 : 36 (RCTA)
ஏனெனில், யாவும் அவரிடமிருந்தே வந்தன, அவராலேயே உண்டாயின, அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

BG:

Opacity:

Color:


Size:


Font: