வெளிபடுத்தல் 7 : 1 (RCTA)
இதற்குப்பின் மண்ணுலகின் நான்கு மூலைகளிலும் வானதூதர் நால்வர் நிற்கக் கண்டேன். மண்மீது வீசும் நான்கு காற்றுகள் நிலத்தின் மீதோ, நீரின் மீதோ, எந்த மரத்தின் மீதோ வீசாதவாறு அவர்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
வெளிபடுத்தல் 7 : 2 (RCTA)
கதிரோன் எழும் திசையிலிருந்து இன்னொரு வானதூதர் எழுந்து வருவதைக் கண்டேன். உயிருள்ள கடவுளின் முத்திரை அவர் கையில் இருந்தது. அவர் நிலத்திற்கும் நீருக்கும் தீங்கு விளைவிக்க அதிகாரம் பெற்றிருந்த வானதூதர் நால்வரையும் உரத்த குரலில் அழைத்து,
வெளிபடுத்தல் 7 : 3 (RCTA)
"எங்கள் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடுமளவும் நிலத்திற்கோ நீருக்கோ மரத்திற்கோ தீங்கு யாதும் விளைவிக்கவேண்டாம்" என்றார்.
வெளிபடுத்தல் 7 : 4 (RCTA)
முத்திரையிடப்பட்டவர்களின் தொகை என்னவென்று சொல்லக் கேட்டேன். இஸ்ராயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்.
வெளிபடுத்தல் 7 : 5 (RCTA)
யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிபடுத்தல் 7 : 6 (RCTA)
ஆசேர் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிபடுத்தல் 7 : 7 (RCTA)
சிமியோன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிபடுத்தல் 7 : 8 (RCTA)
இசக்கார் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமின் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.
வெளிபடுத்தல் 7 : 9 (RCTA)
இதற்குப்பின் யாராலும் எண்ண இயலாத பெருந்திரளான மக்களைக் கண்டேன். இவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். இவர்கள் அரியணைக்கும் செம்மறிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தனர்; வெண்ணாடை அணிந்திருந்தனர்; கையில் குருத்தோலைகளை ஏந்தியிருந்தனர்.
வெளிபடுத்தல் 7 : 10 (RCTA)
உரத்த குரலில், "அரியணைமீது வீற்றிருக்கும் எங்கள் கடவுளுக்கும் செம்மறிக்குமே மீட்பு உரியது" என்று பாடினர்.
வெளிபடுத்தல் 7 : 11 (RCTA)
அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்ற வானதூதர்கள் அனைவரும் அரியணைமுன் முகம்குப்புற விழுந்து கடவுளைத் தொழுது,
வெளிபடுத்தல் 7 : 12 (RCTA)
"ஆமென், போற்றியும் மகிமையும் ஞானமும் நன்றியும் மாட்சியும் வல்லமையும் பலமும் நம் கடவுளுக்கு என்றென்றும் உரியனவாகுக, ஆமென்" என்றனர்.
வெளிபடுத்தல் 7 : 13 (RCTA)
மூப்பர்களுள் ஒருவர் என்னை நோக்கி, "வெண்ணாடை அணிந்த, இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தெரியுமா?" என்று கேட்க, நான் "ஐயா, நீர்தான் சொல்ல வேண்டும்" என்றேன்.
வெளிபடுத்தல் 7 : 14 (RCTA)
அதற்கு அவர் சொன்னது: "இவர்கள் பெரும் வேதனையினின்று மீண்டவர்கள். தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டார்கள்.
வெளிபடுத்தல் 7 : 15 (RCTA)
ஆகவேதான் இவர்கள் கடவுளது அரியணை முன் நின்று அவரது ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு வழிபாடு செலுத்துகிறார்கள். அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களைத் தம் நிழலில் வாழச் செய்வார்.
வெளிபடுத்தல் 7 : 16 (RCTA)
இனி அவர்களுக்குப் பசிதாகம் இராது. வெயிலோ வெப்பமோ அவர்களைத் தாக்காது.
வெளிபடுத்தல் 7 : 17 (RCTA)
ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் செம்மறியானவர் அவர்களை மேய்த்து, வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு அவர்களை நடத்திச் செல்வார். கடவுள் அவர்களது கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்."
❮
❯