வெளிபடுத்தல் 4 : 1 (RCTA)
இதன்பின் நான் கண்ட காட்சியாவது: விண்ணகத்தில் கதவு ஒன்று திறந்திருக்கக் கண்டேன். எக்காளத்தின் ஒலியைப்போல் என்னோடு முதலில் பேசிய குரல்: "மேலே வா, இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்" என்றது.
வெளிபடுத்தல் 4 : 2 (RCTA)
உடனே தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. அரியணை ஒன்று விண்ணகத்தில் இருக்கக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருக்கிறார்.
வெளிபடுத்தல் 4 : 3 (RCTA)
பார்வைக்கு அவர் மணிக்கல் போலும், கோமேதகம் போலும் காணப்படுகின்றார். மரகதம்போன்ற வானவில் அரியணையைச் சூழ்ந்திருக்கிறது.
வெளிபடுத்தல் 4 : 4 (RCTA)
அவ்வரியணையைச் சுற்றி இருபத்து நான்கு இருக்கைகள் இருக்கின்றன. அவ்விருக்கைகளில் இருபத்து நான்கு மூப்பர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து தலையில் பொன் முடி சூடியிருக்கின்றனர்.
வெளிபடுத்தல் 4 : 5 (RCTA)
அரியணையினின்று மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்புகின்றன.
வெளிபடுத்தல் 4 : 6 (RCTA)
அரியணை முன் ஏழு தீப் பந்தங்கள் எரிகின்றன. அவை கடவுளுடைய ஏழு ஆவிகளே. அரியணை முன்னே பளிங்கெனத் தெளிந்த கடல்போன்றதொன்று தென்படுகிறது. நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் இருக்கின்றன. அவற்றிற்கு முன்புறமும் பின்புறமும் கண்கள் பல இருக்கின்றன.
வெளிபடுத்தல் 4 : 7 (RCTA)
அவ்வுயிர்களுள் முதலாவது, சிங்கத்தைப்போல் உள்ளது; இரண்டாவது இளங்காளைபோல் உள்ளது; மூன்றாவதற்கு மனித முகம் இருக்கிறது; நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருக்கிறது.
வெளிபடுத்தல் 4 : 8 (RCTA)
இந்நான்கு உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் ஆறு சிறகுகள் உள்ளன. உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருக்கின்றன. "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்! இருந்தவரும் இருக்கிறவரும் இனி வருபவரும் இவரே" என்று அவை இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகின்றன.
வெளிபடுத்தல் 4 : 9 (RCTA)
என்றென்றும் வாழ்பவர்க்கு, அரியணையில் வீற்றிருப்பவர்க்கு அவ்வுயிர்கள் மகிமையும் மாட்சியும் நன்றியும் செலுத்தும்போதெல்லாம்,
வெளிபடுத்தல் 4 : 10 (RCTA)
இருபத்து நான்கு மூப்பர்களும் அரியணையில் வீற்றிருப்பவர் முன், அடிபணிந்து என்றென்றும் வாழ்கின்ற அவரைத் தொழுகின்றனர்.
வெளிபடுத்தல் 4 : 11 (RCTA)
அவர்கள் தங்கள் பொன் முடிகளை எடுத்து அரியணை முன் வைத்து, "எங்கள் ஆண்டவரே! எங்கள் இறைவனே! மகிமையும் மாட்சியும் வல்லமையும் பெறத்தக்கவர் நீரே; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே! அனைத்தும் உண்டானது உம் விருப்பத்தாலே, உம் விருப்பத்தாலே எல்லாம் படைக்கப்பட்டன" என்று பாடுகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

BG:

Opacity:

Color:


Size:


Font: