வெளிபடுத்தல் 21 : 1 (RCTA)
பின்பு நான் புதிய வானகமும் புதிய வையகமும் கண்டேன். முதலிலிருந்த வானகமும் வையகமும் மறைந்துபோயின.
வெளிபடுத்தல் 21 : 2 (RCTA)
கடலும் இல்லாமல் போயிற்று. அப்போது புதிய யெருசலேம் ஆகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மணமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல் அது மலர்ந்தது.
வெளிபடுத்தல் 21 : 3 (RCTA)
பின் அரியணையிலிருந்து ஒரு பெருங் குரலைக் கேட்டேன். அக்குரல், "இதோ, கடவுளின் இல்லம் மனிதரிடையே உள்ளது; அவர்களோடு அவர் குடிகொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்; கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்.
வெளிபடுத்தல் 21 : 4 (RCTA)
அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது.
வெளிபடுத்தல் 21 : 5 (RCTA)
அரியணை மீது வீற்றிருந்தவர், "இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்" என்றார். மேலும், "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை என்று எழுது" என்றார்.
வெளிபடுத்தல் 21 : 6 (RCTA)
பின், என்னைப் பார்த்துச் சொன்னதாவது: "எல்லாம் முடிந்துவிட்டது. அகரமும் னகரமும் நானே- தொடக்கமும் முடிவும் நானே. தாகமாயிருக்கிறவனுக்கு வாழ்வின் ஊற்றிலிருந்து இலவசமாய் நீர் கொடுப்பேன்.
வெளிபடுத்தல் 21 : 7 (RCTA)
வெற்றிகொள்பவன் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வான். நான் அவனுக்குக் கடவுளாய் இருப்பேன். அவன் எனக்கு மகனாய் இருப்பான்.
வெளிபடுத்தல் 21 : 8 (RCTA)
கோழைகள், விசுவாசமற்றவர்கள், அருவருப்புக்குரியவர்கள், கொலைகாரர்கள், காமுகர், சூனியம் வைப்பவர்கள், சிலை வழிபாட்டினர் முதலிய பொய்யர்கள் அனைவருக்கும் கந்தக நெருப்பு எரியும் கடலே உரிய பங்காகும். இதுவே இரண்டாவது சாவு.
வெளிபடுத்தல் 21 : 9 (RCTA)
அதன்பின் இறுதி ஏழு வாதைகளால் நிரம்பிய கலசங்களை ஏந்திய ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்தார். அவர் என்னைப் பார்த்து: "வா, செம்மறியானவர் மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டப் போகிறேன்" என்றார்.
வெளிபடுத்தல் 21 : 10 (RCTA)
தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர், உயர்ந்ததொரு பெரிய மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். கடவுளிடமிருந்து விண்ணினின்று யெருசலெம் நகர் இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
வெளிபடுத்தல் 21 : 11 (RCTA)
கடவுளுடைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்தது. அது விலைமிக்க இரத்தினக்கல் போலும், பளிங்கென ஒளிவீசும் மணிக்கல் போலும் சுடர்விட்டது.
வெளிபடுத்தல் 21 : 12 (RCTA)
உயர்ந்ததொரு பெரிய மதில் அதைச் சூழ்ந்திருந்தது. அதற்குப் பன்னிரு வாயில்கள் காணப்பட்டன. அவ்வாயில்களில் பன்னிரு தூதர்கள் நின்றர்கள். இஸ்ராயேலின் பன்னிரு குலத்தாரின் பெயர்கள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
வெளிபடுத்தல் 21 : 13 (RCTA)
கிழக்கே மூன்று, வடக்கே மூன்று, தெற்கே மூன்று, மேற்கே மூன்று வாயில்கள் இருந்தன.
வெளிபடுத்தல் 21 : 14 (RCTA)
நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன.
வெளிபடுத்தல் 21 : 15 (RCTA)
என்னோடு பேசியவர் நகரையும் அதன் வாயில்களையும் மதிலையும் அளக்கும்பொருட்டு ஒரு பொன் அளவுகோலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
வெளிபடுத்தல் 21 : 16 (RCTA)
அந்நகரம் சதுரமாக இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவு. அவர் கோலைக்கொண்டு நகரத்தை அளந்தார். நூற்றைம்பது காதம் இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவாக இருந்தன. அவர் தம் மதிலையும் அளந்தார்.
வெளிபடுத்தல் 21 : 17 (RCTA)
அதன் உயரம் நூற்றுநாற்பத்து நான்கு முழும். வானதூதர் பயன்படுத்திய அளவு மனிதரிடையே வழங்கும் அளவுகளே.
வெளிபடுத்தல் 21 : 18 (RCTA)
மதில் மணிக்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரமோ பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும் பொன்னாலானது.
வெளிபடுத்தல் 21 : 19 (RCTA)
நகர மதில்களின் அடிக்கற்கள் எல்லாவித இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதல் அடிக்கல் மணிக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கம், நான்காவது மரகதம்,
வெளிபடுத்தல் 21 : 20 (RCTA)
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது இந்திரநீலம். பன்னிரண்டாவது சுகந்தி.
வெளிபடுத்தல் 21 : 21 (RCTA)
பன்னிரு வாயில்களும் பன்னிரு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு முத்தாலானது. நகரின் வீதி பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும்பொன்னாலானது.
வெளிபடுத்தல் 21 : 22 (RCTA)
அதனுள் நான் ஆலயத்தைக் காணவில்லை. கடவுளாகிய ஆண்டவரும் செம்மறியுமே அதன் ஆலயம்.
வெளிபடுத்தல் 21 : 23 (RCTA)
அந்நகருக்கு ஒளிகொடுக்க கதிரவனோ நிலவோ தேவையில்லை. கடவுளுடைய மாட்சிமை அதற்கு ஒளி வீசியது; செம்மறியே அதன் விளக்கு;
வெளிபடுத்தல் 21 : 24 (RCTA)
அதன் ஒளியில் எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்; மண்ணக அரசர் தங்களிடம் மகிமையாய் உள்ளதெல்லாம் அதனுள் கொண்டுவருவர்.
வெளிபடுத்தல் 21 : 25 (RCTA)
அதன் வாயில்கள் நாளெல்லாம் திறந்திருக்கும்.
வெளிபடுத்தல் 21 : 26 (RCTA)
அங்கு இரவே இராது. நாடுகளில் உள்ள மகிமை பெருமையானதெல்லாம் அதனுள் கொண்டு வரப்படும்.
வெளிபடுத்தல் 21 : 27 (RCTA)
ஆனால் மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையாது. அருவருப்பானதும் பொய்யானதும் செய்பவர்கள் அங்கு நுழைவதில்லை. செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் எழுதப்பட்டிருப்பவர் மட்டுமே அங்குச் செல்வர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27