வெளிபடுத்தல் 2 : 1 (RCTA)
எபேசு சபையின் தூதருக்கு இதை எழுது! 'தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டு, எழு பொன் குத்து விளக்குகளின் நடுவில் நடப்பவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்;
வெளிபடுத்தல் 2 : 2 (RCTA)
நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய், எவ்வளவு மனவுறுதி காட்டியிருக்கிறாய் என்பதை அறிவேன். தீயவர்களின் போக்கை நீ சகிக்கிறதில்லை என்பதும் எனக்குத் தெரியும், அப்போஸ்தலர்களாய் இல்லாதிருந்தும் சிலர் தங்களை அப்போஸ்தலர்கள் ஆக்கிக்கொண்டார்கள்.
வெளிபடுத்தல் 2 : 3 (RCTA)
அவர்களைப் பரிசோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் மனவுறுதியோடும் நீ விளங்குகிறாய். என் பெயரின் பொருட்டு எவ்வளவோ தாங்கிக் கொண்டாய். ஆயினும் தளர்ச்சியுறவில்லை
வெளிபடுத்தல் 2 : 4 (RCTA)
ஆனால் உன்மேல் நான் சொல்லவேண்டிய குறையொன்று உண்டு: தொடக்கத்தில் உனக்கு இருந்த அன்பு இப்போதில்லை.
வெளிபடுத்தல் 2 : 5 (RCTA)
உயர்ந்த நிலையினின்று நீ தவறிவிட்டாய். இதை நினைத்து மனந்திரும்பி, தொடக்கத்தில் நீ செய்துவந்த செயல்களைச் செய்க. இல்லையேல் நான் உன்னிடம் வந்து உன் விளக்கை அது இருக்குமிடத்திலிருந்து அகற்றி விடுவேன்; நீ மனந்திரும்பாவிட்டால் அப்படிச் செய்வேன்.
வெளிபடுத்தல் 2 : 6 (RCTA)
இருப்பினும் உன் நடத்தையில் நல்லது ஒன்று உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய்.
வெளிபடுத்தல் 2 : 7 (RCTA)
தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்; கடவுளுடைய இன்ப வனத்தில் உள்ளதும் வாழ்வு தருவதுமான மரத்தின் கனியை உண்ணும் பேற்றை வெற்றி கொள்பவனுக்கு அருள்வேன்.
வெளிபடுத்தல் 2 : 8 (RCTA)
'சிமிர்னாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'முதலும் இறுதியுமானவர், சாவுக்குட்பட்டும் உயிர் வாழ்கின்றவர் உரைப்பதாவது:
வெளிபடுத்தல் 2 : 9 (RCTA)
நீ படும் வேதனையும் உற்ற வறுமையும் நான் அறிவேன்- எனினும் நீ செல்வமிக்கவனே- தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதை எல்லாம் நான் அறிவேன். அவர்கள் யூதர்களே அல்லர்; சாத்தானின் கூட்டமே.
வெளிபடுத்தல் 2 : 10 (RCTA)
உனக்கு வரப்போகும் துன்பங்களுக்கு அஞ்ச வேண்டாம். இதோ, அலகை உங்களுள் சிலரைச் சிறையில் தள்ளிச் சோதனைக்கு உட்படுத்தப்போகிறது. பத்து நாள் வேதனையுறுவீர்கள். சாவதாயினும் விசுவாசத்தில் நிலைத்திரு. வாழ்வை உனக்கு நான் வெற்றிவாகையாய்ச் சூட்டுவேன்.
வெளிபடுத்தல் 2 : 11 (RCTA)
தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனை இரண்டாவது சாவு தீண்டாது.'
வெளிபடுத்தல் 2 : 12 (RCTA)
"பெர்கமுவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'இருபுறமும் கூர்மையான வாளை உடையவர் உரைப்பதாவது:
வெளிபடுத்தல் 2 : 13 (RCTA)
நீ குடியிருப்பது எத்தகைய இடம் என்று நான் அறிவேன்; சாத்தானின் அரியணை அங்கே தான் உள்ளது. என் பெயரை உறுதியுடன் பற்றிக்கொண்டுள்ளாய். சாத்தான் குடியிருக்கிற உங்கள் நகரத்திலே என் உண்மைச் சாட்சியான, அந்திப்பாஸ் கொலையுண்ட நாளில்கூட, நீ என்மேல் வைத்த விசுவாசத்தை மறுக்கவில்லை.
வெளிபடுத்தல் 2 : 14 (RCTA)
ஆனால் உம்மேல் நான் சொல்லவேண்டிய குறைகள் சில உள்ளன: பாலாமின் போக்குக்கேற்ற கொள்கையைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உளர். இந்தப் பாலாம்தான் இஸ்ராயேல் மக்கள் பாவத்தின் விழும்படி செய்யப் பாலாக்குக்குச் சொல்லிக் கொடுத்தவன். ஆனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டார்கள்; விபசாரம் செய்தார்கள்.
வெளிபடுத்தல் 2 : 15 (RCTA)
இது போலத்தான் நிக்கொலாயரின் கொள்கைகளைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உள்ளனர்.
வெளிபடுத்தல் 2 : 16 (RCTA)
ஆகவே மனத்திரும்பு. இல்லையேல் விரைவில் நான் உன்னிடம் வந்து, என் வாயினின்று வெளிப்படும் வாள்கொண்டு அவர்களுக்கெதிராகப் போர் தொடுப்பேன்.
வெளிபடுத்தல் 2 : 17 (RCTA)
தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனுக்கு மறைந்துள்ள மன்னாவை அருளுவேன். மேலும் அவனுக்கு வெள்ளைக் கல் ஒன்றையும் அளிப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பெறுபவனன்றி வேறு எவனும் அதை அறியான்.'
வெளிபடுத்தல் 2 : 18 (RCTA)
'தியத்தைராவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'எரிதழல்போலச் சுடர்விடும் கண்களும் வெண்கலம்போன்ற பாதங்களும் உடைய இறைமகன் உரைப்பதாவது:
வெளிபடுத்தல் 2 : 19 (RCTA)
உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, விசுவாசம், பணி செய்யும் ஆர்வம், மனவுறுதி இவை எனக்குத் தெரியும். நீ இன்று செய்துவருவது முன்பு செய்ததைவிட மிகுந்தது என்றறிவேன்.
வெளிபடுத்தல் 2 : 20 (RCTA)
ஆனால் உன்மேல் நான் சொல்ல வேண்டிய குறையொன்று உண்டு: யேசபேல் போன்ற ஒருத்தியை நீ விட்டுவைத்திருக்கிறாய். இறைவாக்குரைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அவள், என் ஊழியர்களை ஏமாற்றி அவர்கள் விபசாரம் செய்யவும், சிலைகளுக்குப் படைத்ததை உண்ணவும் போதித்து வருகிறாள்.
வெளிபடுத்தல் 2 : 21 (RCTA)
அவள் மனந்திரும்புவாள் என நெடு நாள் காத்திருந்தேன். ஆனால் அவள் தன் விபாசரத்தைவிட்டு மனந்திரும்ப மாட்டேன் என்கிறாள்.
வெளிபடுத்தல் 2 : 22 (RCTA)
இதோ, அவளை நான் படுகிடையாய்க் கிடத்திவிடுவேன். அவளோடு விபசாரம் செய்பவர்கள் அவளுடைய செயல்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் கொடிய வேதனைக் குள்ளாக்குவேன்.
வெளிபடுத்தல் 2 : 23 (RCTA)
அவளுடைய பிள்ளைகளையும் கொன்று தீர்ப்பேன். மனித உள்ளங்களையும் இதயங்களையும் ஊடுருவிக் காண்பவர் நான் என்பதை எல்லாச் சபைகளும் அப்போது அறிந்து கொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் செயல்களுக்குத் தக்கபடி கூலி கொடுப்பேன்.
வெளிபடுத்தல் 2 : 24 (RCTA)
தியத்தைராவில் வாழும் ஏனையோரே, நீங்கள் இந்தக் கொள்கைகளை ஏற்கவில்லை; சாத்தானின் ஆழ்ந்த ஞானம் என்று பிறர் கூறுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள் மீது வேறு எச்சுமையும் சுமத்த மாட்டேன்;
வெளிபடுத்தல் 2 : 25 (RCTA)
நான் வருமளவும் நீங்கள் பெற்றுக் கொண்ட போதனையில் நிலைத்திருங்கள்.
வெளிபடுத்தல் 2 : 26 (RCTA)
என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றிகொள்பவனுக்கும் நான் விரும்பிய வழியில் இறுதிவரை நிலைத்திருப்பவனுக்கும்' "புறவினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.
வெளிபடுத்தல் 2 : 27 (RCTA)
அவன் அவர்களை இருப்புக்கோல் கொண்டு நடத்துவான்; மட்பாண்டங்களைப் போல் நொறுக்கிவிடுவான்."
வெளிபடுத்தல் 2 : 28 (RCTA)
விடிவெள்ளியையும் அவனுக்கு அளிப்பேன்.
வெளிபடுத்தல் 2 : 29 (RCTA)
தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
❮
❯