வெளிபடுத்தல் 19 : 1 (RCTA)
இதற்குப்பின் விண்ணில் பெரியதொரு கூட்டத்தின் முழக்கம் போன்ற பேரொலியைக் கேட்டேன். அக்கூட்டம், "அல்லேலூயா, மீட்பும் மகிமையும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
வெளிபடுத்தல் 19 : 2 (RCTA)
ஏனெனில், அவரிடும் தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை. தன் விபசாரத்தால் மண்ணகத்தைச் சீரழித்த, பேர்போன வேசிக்கு அவர் தீர்ப்பிட்டார்;
வெளிபடுத்தல் 19 : 3 (RCTA)
தம் ஊழியர்களின் இரத்தத்திற்காக அவளைப் பழிவாங்கினார்" என்று ஆர்ப்பரித்தது மேலும் அக்கூட்டம், "அல்லேலூயா, அவளை எரிக்கும் புகை என்றென்றும் மேலே எழுகிறது" என்றது.
வெளிபடுத்தல் 19 : 4 (RCTA)
இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருக்கும் கடவுள்முன் அடிபணிந்து, "ஆமென், அல்லேலூயா" என்று தொழுதனர்.
வெளிபடுத்தல் 19 : 5 (RCTA)
அரியணையிலிருந்து வெளிவந்த குரல்; "கடவுளுடைய ஊழியர்களே, அவருக்கு அஞ்சுபவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்" என்றது.
வெளிபடுத்தல் 19 : 6 (RCTA)
மேலும் பெரியதொரு கூட்டத்தின் ஆர்ப்பரிப்புப் போலும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும், இடி முழக்கம்போலும் தொனித்த பேரொலி ஒன்று கேட்டேன். அது சொன்னதாவது: "அல்லேலூயா, எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்தலானார்.
வெளிபடுத்தல் 19 : 7 (RCTA)
நாம் அகமகிழ்ந்து களிகூர்ந்து அவருக்கு மகிமை அளிப்போமாக. ஏனெனில், செம்மறியின் மணவிழா வந்து விட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
வெளிபடுத்தல் 19 : 8 (RCTA)
அணிவதற்குப் பகட்டானதும் தூயதுமான விலைமிக்க ஆடை அவளுக்கு அளிக்கப்பட்டது. அவ்விலைமிக்க ஆடையோ இறைமக்களின் நீதிச் செயல்களே."
வெளிபடுத்தல் 19 : 9 (RCTA)
பின்பு வானதூதர் என்னிடம் சொன்னதாவது: "செம்மறியின் மணவிருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் என்று எழுது." மேலும், "இவை கடவுளின் உண்மை வார்த்தைகள்" என்று சொன்னார்.
வெளிபடுத்தல் 19 : 10 (RCTA)
பின்னர் நான் அவரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன். அவரோ, "வேண்டாம், வேண்டாம், இயேசு சொன்ன சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட உன் சகோதரர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல்வேண்டும்" என்றார். இயேசு தந்த அந்தச் சாட்சியமே இறைவாக்குகளுக்கு உயிர்.
வெளிபடுத்தல் 19 : 11 (RCTA)
பின் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெண்குதிரை! அதன் மேல் ஒருவர் ஏறியிருந்தார். அவர் பெயர் 'நம்பிக்கைக்குரியவர்; உண்மையுள்ளவர். அவர் நீதியோடு தீர்ப்பிட்டுப் போர் தொடுக்கிறார்.
வெளிபடுத்தல் 19 : 12 (RCTA)
அவருடைய கண்கள் எரிதழல்போல் இருந்தன; தலையில் மகுடங்கள் பல சூடியிருந்தார். அவரைத் தவிர மற்றெவர்க்கும் தெரியாததொரு பெயர் அவர்மேல் பொறிக்கப்பட்டிருந்தது.
வெளிபடுத்தல் 19 : 13 (RCTA)
இரத்தத்தில் தோய்ந்த ஆடை ஒன்றை அவர் அணிந்திருந்தார். "கடவுளுடைய வார்த்தை" என்பது அவருடைய பெயர்.
வெளிபடுத்தல் 19 : 14 (RCTA)
விலைமிக்க, தூய வெண்ணாடை அணிந்த விண்ணகப் படைகள் வெண்குதிரைகள் மேலேறி அவரைப் பின்தொடர்ந்தன.
வெளிபடுத்தல் 19 : 15 (RCTA)
நாடுகளைத் தாக்குவதற்கு அவருடைய வாயினின்று கூரிய வாளொன்று வெளிப்பட்டது. அவர் இருப்புக்கோல்கொண்டு அவர்களை நடத்துவார். எல்லாம் வல்ல கடவுளின் கடுஞ்சினம் என்னும் ஆலையை அவர் மிதிப்பார்.
வெளிபடுத்தல் 19 : 16 (RCTA)
"அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்" என்ற பெயர் அவரது ஆடையிலும் தொடையிலும் எழுதியிருந்தது.
வெளிபடுத்தல் 19 : 17 (RCTA)
பின்பு வானதூதர் ஒருவர் கதிரவனில் நிற்கக் கண்டேன். வானத்தில் உயரப்பறக்கும் பறவைகள் அனைத்தையும் நோக்கி:
வெளிபடுத்தல் 19 : 18 (RCTA)
அவர் உரத்த குரலில், "வாருங்கள், அரசர், படைத்தலைவர், வலியோர் இவர்களின் தசையும், குதிரைகள், அவற்றின்மீது ஏறியிருப்போரின் தசையும், குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரின் தசையும் தின்னும்படி, கடவுள் செய்யும் பெரு விருந்துக்கு வந்து கூடுங்கள்" என்றார்.
வெளிபடுத்தல் 19 : 19 (RCTA)
குதிரைமீது ஏறியிருந்தவருக்கும் அவரது படைக்கும் எதிராகப் போர் தொடுக்க அக்கொடிய விலங்கும் மண்ணகத்து அரசர்களும், அவர்களுடைய படைகளும் கூடியிருப்பதைக் கண்டேன்.
வெளிபடுத்தல் 19 : 20 (RCTA)
அவ்விலங்கு பிடிபட்டது. அதனோடு அவ்விலங்கின் முன்னிலையில் அருங்குறிகள் செய்த போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இந்த அருங்குறிகளால் தான் அவன் விலங்கின் அடையாளத்தால் குறிக்கப்பட்டவர்களையும், அதனுடைய சிலையைத் தொழுதவர்களையும் ஏமாற்றியிருந்தான். இவர்கள் இருவரும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு எறியப்பட்டார்கள்.
வெளிபடுத்தல் 19 : 21 (RCTA)
குதிரைமீது ஏறியிருந்தவரின் வாயினின்று வெளிப்பட்டவாளால் எஞ்சியிருந்தோர் கொல்லப்பட்டனர். அந்தப் பிணங்களைப் பறவைகள் எல்லாம் வயிறாரத் தின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21