வெளிபடுத்தல் 18 : 1 (RCTA)
இதற்குப்பின் பெரும் வல்லமையுள்ள இன்னொரு வானதூதர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மண்ணுலகு அவரது மாட்சியால் மிகுந்த ஒளி பெற்றது.
வெளிபடுத்தல் 18 : 2 (RCTA)
அவர் உரத்த குரலில் கூறினதாவது; 'வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர், அது பேய்களின் உறைவிடமாயிற்று, அசுத்த ஆவியெல்லாம் நடமாடும் கூடமாயிற்று, அசுத்தமும் அருவருப்பும் மிக்க பறவைகள் எல்லாம் வாழும் கூடம் ஆதுவே.
வெளிபடுத்தல் 18 : 3 (RCTA)
அவ்வேசி காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்தாள். மண்ணக அரசர்கள் அவளோடு விபசாரம் செய்தனர். அவளது செல்வச் செருக்கினால் மண்ணக வணிகர்கள் செல்வம் திரட்டினர்.'
வெளிபடுத்தல் 18 : 4 (RCTA)
பின்னர் விண்ணினின்று இன்னொரு குரலைக் கேட்டேன். அது சொன்னதாவது "என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும், அவளுக்கு நேரும் வாதைகளில் அகப்படாதிருக்கவும், அவளைவிட்டுப் போய்விடுங்கள்.
வெளிபடுத்தல் 18 : 5 (RCTA)
அவளுடைய பாவங்கள் வானளாவக் குவிந்துவிட்டன; அவளுடைய அநீதச் செயல்களைக் கடவுள் நினைவில் வைத்துள்ளார்.
வெளிபடுத்தல் 18 : 6 (RCTA)
அவள் கொடுத்ததற்கேற்றபடி திருப்பிக் கொடுங்கள்; அவள் செயல்களுக்கேற்றவாறு இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்; அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரு மடங்காகக் கலந்து கொடுங்கள்.
வெளிபடுத்தல் 18 : 7 (RCTA)
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச் செருக்குடன் வாழ்ந்த அளவுக்கு வேதனையும் துயரமும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள். 'நான் அரசியாக வீற்றிருக்கிறேன், நான் கைம்பெண் அல்லேன், ஒருநாளும் துயருறேன்' என்று தன் இதயத்தில் கூறினாளன்றோ?
வெளிபடுத்தல் 18 : 8 (RCTA)
ஆகவே, சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகளெல்லாம் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்; நெருப்பு அவளை எரித்துவிடும்: ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பிடும் ஆண்டவராகிய கடவுள் வல்லமை மிக்கவர்.'
வெளிபடுத்தல் 18 : 9 (RCTA)
அவளோடு விபசாரம் செய்து செல்வச் செருக்கோடு வாழ்ந்த மண்ணக அரசர்கள் அவள் எரியும்போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து
வெளிபடுத்தல் 18 : 10 (RCTA)
அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று, 'ஐயோ! ஐயோ! வல்லமை மிக்க நகரே! பாபிலோன் மாநகரே ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்து விட்டதே" என்று அழுது புலம்புவார்கள்.
வெளிபடுத்தல் 18 : 11 (RCTA)
மண்ணக வணிகர்களும் அவளுக்காக அழுது புலம்புவார்கள். ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை வாங்குவோர் யாரும் இல்லை.
வெளிபடுத்தல் 18 : 12 (RCTA)
பொன், வெள்ளி, இரத்தினங்கள், முத்துக்கள், மெல்லிய துணி, இரத்தாம்பரம், பட்டாடை, செந்நிற ஆடை, வாசனைக் கட்டைகள், தந்தப் பொருட்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக் கல் இவற்றாலான பொருட்கள்,
வெளிபடுத்தல் 18 : 13 (RCTA)
இலவங்கம், ஓமம், தூபவர்க்கம், பரிமளத்தைலம், சாம்பிராணி, திராட்சை இரசம், எண்ணெய், மெதுமாவு, கோதுமை, ஆடுகள், மாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள், மனித உயிர்கள் இவையெல்லாம் வாங்க யாருமில்லை.
வெளிபடுத்தல் 18 : 14 (RCTA)
"நீ இச்சித்த கனிகள் எட்டாமல் போயின. உன் பகட்டும் மினுக்கும் எல்லாம் ஒழிந்தன. இனி யாரும் அவற்றைக் காணப்போவதில்லை" என்பார்கள்.
வெளிபடுத்தல் 18 : 15 (RCTA)
இச்சரக்குகளைக்கொண்டு, அவளோடு வாணிபம்செய்து, செல்வம் திரட்டியவர்கள் அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று:
வெளிபடுத்தல் 18 : 16 (RCTA)
"ஐயோ, ஐயோ, மாநகரே! மெல்லிய துணியும் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து, பொன் இரத்தினம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவளே,
வெளிபடுத்தல் 18 : 17 (RCTA)
ஒரு மணி நேரத்தில் உன் செல்வமெல்லாம் அழிந்து போய்விட்டதே" என்று அழுது புலம்புவார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணஞ் செய்வோர், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் அனைவருமே தொலைவில் நின்று,
வெளிபடுத்தல் 18 : 18 (RCTA)
அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து, "இம் மாநகர்க்கு நிகரான ஒரு நகருண்டோ?" என்று கத்தினார்கள்.
வெளிபடுத்தல் 18 : 19 (RCTA)
புழுதியை வாரித் தலைமேல் போட்டுக்கொண்டு, "ஐயோ, ஐயோ, கடலின் கப்பல் செலுத்திய அனைவரையும் தன் செல்வ வளத்தால் செல்வமிக்கவராக்கிய இம் மாநகர் ஒரு மணி நேரத்தில் பாழாகிவிட்டதே" என்று அழுது புலம்பினர்.
வெளிபடுத்தல் 18 : 20 (RCTA)
'வானகமே, இறைமக்களே, அப்போஸ்தலர்களே, இறைவாக்கினரே, அவளைப் பார்த்து அகமகிழுங்கள்; உங்கள் சார்பாகக் கடவுள் அவளைப் பழிவாங்கிவிட்டார்."
வெளிபடுத்தல் 18 : 21 (RCTA)
வலிமை மிக்க வானதூதர் ஒருவர் எந்திரக் கல்போன்றதொரு பெரிய கல்லை எடுத்து, கடலில் எறிந்து சொன்னதவாது: "பாபிலோன் மாநகர் இவ்வாறே வீசி எறியப்படும்; இருந்த இடம் தெரியாமல் அது மறைந்து விடும்.
வெளிபடுத்தல் 18 : 22 (RCTA)
யாழ் மீட்டுபவர், பாடகர், குழல் வாசிப்பவர், எக்காளம் ஊதுவோர் இவர்களின் ஓசை இனி உன்னிடம் ஒருபோதும் எழாது. எத்தொழில் துறையிலும் உள்ள தொழிலாளிகள் இனியொருபோதும் உன்னகத்தே காணப்படமாட்டார்கள் எந்திரக் கல் அரைக்கும் ஓசை இனி ஒருபோதும் உன்னகத்தே கேட்காது.
வெளிபடுத்தல் 18 : 23 (RCTA)
விளக்கொளி உன்னிடம் இனி ஒருபோதும் ஒளிராது; மணவிழாவின் மங்கல ஒலி இனி ஒருபோதும் உன்னிடம் எழாது. உன் வணிகர்கள் மண்ணகத்தில் தனிச்சிறப்புற்று விளங்கினர். உன் மந்திர மாயத்தால் எல்லா நாடுகளும் ஏமாந்தன.
வெளிபடுத்தல் 18 : 24 (RCTA)
இறைவாக்கினரின் இரத்தமும், இறைமக்களின் இரத்தமும், மண்ணுலகில் கொல்லப்பட்ட அனைவரின் இரத்தமுமே அவளிடம் காணப்பட்டது."
❮
❯