வெளிபடுத்தல் 17 : 1 (RCTA)
ஏழு கலசங்களையுடைய ஏழு வானதூதர்களுள் ஒருவர் என்னைப் பார்த்து, 'வா, நீர்த்திரள் மேல் அமர்ந்திருக்கும் பேர்போன வேசி தண்டனைத் தீர்ப்புக்குள்ளாவதை உனக்குக் காட்டுவேன்.
வெளிபடுத்தல் 17 : 2 (RCTA)
மண்ணக அரசர்கள் எல்லாரும் அவளோடு விபசாரம் செய்தார்கள். மண்ணில் வாழும் மக்கள் எல்லாரும் அவளுடைய விபசார மதுவினால் வெறிகொண்டார்கள்" என்று சொன்னார்.
வெளிபடுத்தல் 17 : 3 (RCTA)
தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர் என்னைப் பாலைவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே செந்நிற விலங்கின்மேல் அமர்ந்திருந்த பெண் ஒருத்தியைக் கண்டேன். அந்த விலங்கின் உடலெல்லாம் தூஷணப்பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.
வெளிபடுத்தல் 17 : 4 (RCTA)
அப்பெண் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து பொன்னாலும் இரத்தினங்களாலும் முத்துகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். கையில் அவளது விபசாரத்தின் அருவருப்பும் அசுத்தமும் நிறைந்த பொற்கிண்ணம் இருந்தது.
வெளிபடுத்தல் 17 : 5 (RCTA)
மறைவான பொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதியிருந்தது. பாபிலோன் மாநகர் வேசிகளுக்கும், மண்ணகத்தில் அருவருப்பான யாவற்றிற்கும் தாய் என்பதே அப்பெயர்.
வெளிபடுத்தல் 17 : 6 (RCTA)
அப்பெண், பரிசுத்தர்களின் இரத்தத்தையும், இயேசுவின் சாட்சிகளது இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருப்பதைக் கண்டேன்; அவளைக் கண்டபோது மிகவும் வியப்படைந்தேன்.
வெளிபடுத்தல் 17 : 7 (RCTA)
வானதூதர் என்னை நோக்கிக் கூறியதாவது; "நீ வியப்படைவதேன்? அந்தப் பெண்ணைப் பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைத் தூக்கிச் செல்லும் விலங்கின் மறை பொருளையும் உனக்குச் சொல்லுகிறேன்.
வெளிபடுத்தல் 17 : 8 (RCTA)
நீ கண்ட விலங்கு முன்பு இருந்தது; தற்போது உயிரோடு இல்லை. பாதாளக் குழியிலிருந்து எழப்போகிறது; ஆனால் அழிந்துபோகும். வாழ்வு நூலில் உலகத் தொடக்கமுதல் பெயர் எழுதப்படாத மண்ணுலகினர், அந்த விலங்கைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்பு உயிரோடு இருந்து தற்போது இல்லாத அந்த விலங்கு திரும்பவும் உயிர்பெற்று வருவதைக் காண்பார்கள்.
வெளிபடுத்தல் 17 : 9 (RCTA)
இங்கே நுண்மதியும் அறிவுக் கூர்மையும் தேவை: ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும்.
வெளிபடுத்தல் 17 : 10 (RCTA)
அவர்களுள் ஐவர் ஒழிந்தனர். இப்போதுள்ளவன் ஒருவன்; ஒருவன் இன்னும் தோன்றவில்லை. அவன் தோன்றியபின் சிறிது காலமே இருப்பான்.
வெளிபடுத்தல் 17 : 11 (RCTA)
முன்பு இருந்து, தற்போது உயிரோடில்லாத விலங்கே எட்டாவது அரசனைக் குறிக்கும். அவன் ஏழு அரசர்களுள் ஒருவன். அவனும் அழிந்துபோவான்.
வெளிபடுத்தல் 17 : 12 (RCTA)
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் அவர்கள் விலங்கோடு ஒரு மணியளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.
வெளிபடுத்தல் 17 : 13 (RCTA)
அவர்கள் ஒரு மனத்தவராய், தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கினிடம் ஒப்படைப்பார்கள்.
வெளிபடுத்தல் 17 : 14 (RCTA)
செம்மறிக்கு எதிராக அவர்கள் போரிடுவார்கள். செம்மறியோ அவர்களை வெல்வார். ஏனெனில் அவரே ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர், அரசர்க்கெல்லாம் அரசர். அழைக்கப்பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் அவரோடு இருக்கும் உண்மை ஊழியர்களும் அவரோடு வெற்றி கொள்வர்."
வெளிபடுத்தல் 17 : 15 (RCTA)
மேலும் அவர் எனக்குச் சொன்னதாவது: "அந்த வேசி, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கக் கண்டாயே, அந்த நீர்த்திரள் பல இனங்கள், பல நாடுகள், பல மொழிகளைச் சார்ந்த மக்கள் திரளைக் குறிக்கும்.
வெளிபடுத்தல் 17 : 16 (RCTA)
நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் வேசியின்மேல் வெறுப்புக்கொண்டு, அவள் ஆடைகளைப் பறித்து. அவளைப் பாழாக்கிவிடும். அவளது தசையைத் தின்னும்; அவளை நெருப்பினால் சுட்டெரித்துவிடும்.
வெளிபடுத்தல் 17 : 17 (RCTA)
கடவுள் தமது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டே இங்ஙனம் அந்நாட்டினரின் உள்ளங்களை ஏவிவிட்டார். கடவுள் கூறியது நிறைவேறுமட்டும், அவர்கள் ஒரு மனத்தவராய்த் தங்கள் ஆட்சியை விலங்கினிடம் ஒப்படைத்தது அதே ஏவுதலால்தான்.
வெளிபடுத்தல் 17 : 18 (RCTA)
நீ காட்சியில் கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மேல் ஆட்சி செலுத்தும் பெரிய நகரம்.
❮
❯