வெளிபடுத்தல் 16 : 1 (RCTA)
பின், ஆலயத்தினின்று உரத்த குரல் ஒன்றைக் கேட்டேன்: "நீங்கள் போய், கடவுளின் கோபம் நிறைந்த ஏழு கலசங்களையும் மண்ணுலகின்மீது ஊற்றுங்கள்" என்று அக்குரல் ஏழு வானதூதர்களிடமும் கூறியது.
வெளிபடுத்தல் 16 : 2 (RCTA)
முதல் வானதூதர் போய், தம் கலசத்தை மண்ணுலகின்மீது ஊற்றவே, கொடிய விலங்கின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள், அதன் சிலையைத் தொழுதவர்கள் உடம்பெல்லாம் மிகக் கொடிய புண் உண்டாயிற்று.
வெளிபடுத்தல் 16 : 3 (RCTA)
இரண்டாவது வானதூதர் தம் கலசத்தைக் கடலில் ஊற்றவே, அது பிணத்தின் இரத்தம் போல் மாறியது. கடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்தன.
வெளிபடுத்தல் 16 : 4 (RCTA)
மூன்றாவது வானதூதர் தம் கலசத்தை ஆறுகள்மீதும், நீரூற்றுக்கள்மீதும் ஊற்றவே, அவையும் இரத்தமாயின.
வெளிபடுத்தல் 16 : 5 (RCTA)
நீர்த்திரளைப் பார்வையிடும் வானதூதர் இவ்வாறு சொல்லக் கேட்டேன்: "இருக்கிறவரும் இருந்தவருமான புனிதரே! இங்ஙனம் தீர்ப்பிடும் நீர் நீதியுள்ளவர்.
வெளிபடுத்தல் 16 : 6 (RCTA)
ஏனெனில், பரிசுத்தருடைய இரத்தத்தையும், இறைவாக்கினருடைய இரத்தத்தையும் மக்கள் சிந்தியதால், நீர் அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே."
வெளிபடுத்தல் 16 : 7 (RCTA)
பீடத்தினின்று எழுந்த குரலும், "ஆம், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவையே" என்றது.
வெளிபடுத்தல் 16 : 8 (RCTA)
நான்காவது வானதூதர் தம் கலசத்தைக் கதிரவன் மீது ஊற்றவே, அது மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மை பெற்றது.
வெளிபடுத்தல் 16 : 9 (RCTA)
கடும் வெப்பத்தால் மனிதர் எரிக்கப்பட்டவர்களாய், இவ்வாதைகளின் மீது வன்மை கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் தூஷித்தார்களேயொழிய, மனந்திரும்பி அவரை மகிமைப்படுத்த விரும்பவில்லை.
வெளிபடுத்தல் 16 : 10 (RCTA)
ஐந்தாவது வானதூதர் தமது கலசத்தை விலங்கின் அரியணை மீது ஊற்றவே, அதன் அரசை இருள் கவ்வியது. பட்டபாட்டைத் தாங்க முடியாமல் மக்கள் தங்கள் நாவைக் கடித்துக்கொண்டனர்.
வெளிபடுத்தல் 16 : 11 (RCTA)
தங்கள் பாடுகளையும், புண்களையும் முன்னிட்டு, விண்ணகக் கடவுளைத் தூஷித்தார்களேயொழிய, தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை.
வெளிபடுத்தல் 16 : 12 (RCTA)
ஆறாவது வானதூதர் தமது கலசத்தைப் பெரிய யூப்ரடீஸ் ஆற்றில் ஊற்றவே, தண்ணீர் வற்றிப்போக, கீழ்த்திசை மன்னர்களுக்கு வழியுண்டாயிற்று.
வெளிபடுத்தல் 16 : 13 (RCTA)
பறவைநாகத்தின் வாயினின்றும் விலங்கின் வாயினின்றும் போலித் தீர்க்கதரிசிகளின் வாயினின்றும் தவளை வடிவில் மூன்று அசுத்த ஆவிகள் வெளிவரக் கண்டேன்.
வெளிபடுத்தல் 16 : 14 (RCTA)
அவை அருங்குறிகளைப் புரியும் பேய்களின் ஆவிகள். எல்லாம் வல்ல கடவுளின் பெருநாளிலே போர் செய்யுமாறு உலகனைத்திலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்க அவை செல்லுகின்றன. இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.
வெளிபடுத்தல் 16 : 15 (RCTA)
ஆடையின்றி எல்லார் முன்னிலும் வெட்கி நிற்க நேராதவாறு ஆடைகளைக் களையாமல் விழித்திருப்பவன் பேறுபெற்றவன்.
வெளிபடுத்தல் 16 : 16 (RCTA)
எபிரேய மொழியில் அர்மகெதோன் எனப்படும் இடத்தில் அரசர்களை அவை ஒன்று சேர்த்தன.
வெளிபடுத்தல் 16 : 17 (RCTA)
ஏழாவது வானதூதர் தம் கலசத்தை வான் வெளியில் ஊற்றவே, ஆலயத்தின் அரியணையினின்று. 'முடிந்துவிட்டது' என்றொரு பெருங்குரல் ஒலித்தது.
வெளிபடுத்தல் 16 : 18 (RCTA)
மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதன் மண்ணில் தோன்றிய நாள்முதல், இதுவரை இத்தகைய நிலநடுக்கம் உண்டானதேயில்லை. அது அவ்வளவு கொடியதாய் இருந்தது.
வெளிபடுத்தல் 16 : 19 (RCTA)
அந்தப் பெருநகரம் மூன்று பாகங்களாகப் பிரிந்து போயிற்று; மாநிலத்தின் நகரங்கள் இடிந்து விழுந்தன. பாபிலோன் மாநகரையும் பழிவாங்கக் கடவுள் மறக்கவில்லை;
வெளிபடுத்தல் 16 : 20 (RCTA)
தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.
வெளிபடுத்தல் 16 : 21 (RCTA)
அம்மிக் கல் போலக் கல்மழை விண்ணின்று மக்கள் மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைத் தூஷித்தனர்.
❮
❯