வெளிபடுத்தல் 14 : 1 (RCTA)
பின்பு இதோ, சீயோன் மலைமீது செம்மறியானவர் நிற்கக்கண்டேன். அவரது பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியிலே பொறித்திருந்த நூற்று நாற்பத்து நாலாயிரம் பேர் அவரோடு இருந்தனர்.
வெளிபடுத்தல் 14 : 2 (RCTA)
பின் விண்ணினின்று ஒரு குரல் கேட்டது. அது பெருவெள்ளம் போலும், பேரிடி முழக்கம் போலும் ஒலித்தது. நான் கேட்ட குரல் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் இருந்தது.
வெளிபடுத்தல் 14 : 3 (RCTA)
அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினார்கள். மண்ணுலகினின்று மீட்கப்பட்ட நூற்று நாற்பத்து நாலாயிரம் பேரைத் தவிர மற்றெவரும் அந்தப் பாடலைக் கற்க இயலவில்லை.
வெளிபடுத்தல் 14 : 4 (RCTA)
இவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களை மாசுபடுத்தாதவர்கள்; கன்னிமை காத்தவர்கள். இவர்கள் செம்மறி செல்லுமிடமெல்லாம் அவரைத் தொடர்ந்து செல்பவர்கள். கடவுளுக்கும் செம்மறிக்கும் அர்ச்சிக்கப்பட்ட முதற்கனிகளாக மனித குலத்தினின்று மீட்கப்பட்டவர்கள்.
வெளிபடுத்தல் 14 : 5 (RCTA)
இவர்கள் வாயினின்று பொய் வெளிப்பட்டதில்லை. இவர்கள் மாசற்றவர்கள்.
வெளிபடுத்தல் 14 : 6 (RCTA)
பின் இன்னொரு வானதூதர் வானத்தில் உயரப் பறக்கக் கண்டேன். மண்ணில் வாழ்வோர்க்கும், இனம், குலம், மொழி, நாடு ஒவ்வொன்றிற்கும் அறிவிப்பதற்கு நித்திய நற்செய்தியை அவர் தாங்கிச் சென்றார்.
வெளிபடுத்தல் 14 : 7 (RCTA)
கடவுளுக்கு அஞ்சுங்கள், அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் தீர்ப்பிடும் நேரம் வந்துவிட்டது. விண்ணும் மண்ணும் தொழுங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
வெளிபடுத்தல் 14 : 8 (RCTA)
அவரைப் பின்தொடர்ந்த இன்னொரு வானதூதர், "வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர்; காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்த பாபிலோன் வீழ்ச்சியுற்றது" என்றார்.
வெளிபடுத்தல் 14 : 9 (RCTA)
மூன்றாவது தூதர் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்து உரத்த குரலில் சொன்னதாவது: "விலங்கையும் அதன் சிலையையும் தொழுது, நெற்றியிலோ கையிலோ அடையாளம் பெற்றிருப்பவன்
வெளிபடுத்தல் 14 : 10 (RCTA)
எவனும் கடவுளுடைய கோபம் என்னும் மதுவைக் குடிக்கத்தான் வேண்டும். அது இறைவனது சினம்; அவர் தம் கிண்ணத்தில் கலப்பில்லாமல் வார்த்த மதுவே அது. அவன் பரிசுத்த வானதூதர் முன்னிலையிலும் செம்மறியின் முன்னிலையிலும் தீயாலும் கந்தகத்தாலும் வேதனைக்குள்ளாவான்.
வெளிபடுத்தல் 14 : 11 (RCTA)
அந்த வேதனையில் உண்டாகும் புகை என்றென்றும் மேலே எழுகிறது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் தொழுவோருக்கும், அதன் அடையாளத்தைப் பெறுவோருக்கும், இரவும் பகலும் ஓய்வு இராது.
வெளிபடுத்தல் 14 : 12 (RCTA)
ஆகவே, கடவுளுடைய கட்டளைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காக்கிற இறை மக்களிடம் மனவுறுதி இருக்கவேண்டும்.
வெளிபடுத்தல் 14 : 13 (RCTA)
பின்பு விண்ணினின்று ஒரு குரலைக் கேட்டேன். அக்குரல், "ஆண்டவருக்குள் இறப்பவர் பேறுபெற்றோர்; ஆம், அவர்கள் இனித் தங்கள் உழைப்பினின்று இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்கள் செய்த நன்மையே அவர்களோடு கூட வரும் என, தேவ ஆவி கூறுகிறது. இதை எழுதி வை' என்ற சொன்னது.
வெளிபடுத்தல் 14 : 14 (RCTA)
பின்னர் இதோ ஒரு வெண் மேகத்தையும், அதன் மேல் மனுமகனைப்போன்ற ஒருவர் வீற்றிருப்பதையும் கண்டேன். அவர் தலையில் ஒரு பொன் முடியும், கையில் கூரிய அரிவாளும் இருந்தன.
வெளிபடுத்தல் 14 : 15 (RCTA)
மற்றொரு வானதூதர் ஆலயத்தினின்று வெளி வந்து, மேகத்தின்மீது வீற்றிருப்பவரை நோக்கி, உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறவடைக் காலம் வந்துவிட்டது; மாநிலப் பயிர் முற்றிவிட்டது' என்று உரக்கக் கத்தினார்.
வெளிபடுத்தல் 14 : 16 (RCTA)
மேகத்தின்மீது வீற்றிருந்தவர் தமது அரிவாளை மாநிலத்தின்மீது வீசினார். மாநிலமும் அறுவடையாயிற்று.
வெளிபடுத்தல் 14 : 17 (RCTA)
வேறொரு வானதூதர் விண்ணிலுள்ள ஆலயத்திலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூரிய அரிவாள் இருந்தது.
வெளிபடுத்தல் 14 : 18 (RCTA)
இன்னுமொரு வானதூதர் பீடத்தினின்று வெளிவந்தார். அவர் நெருப்பின் மேல் அதிகாரம் உள்ளவர். கூரிய அரிவாள் ஏந்தியவரைப் பார்த்து 'உம் கூரிய அரிவாளை எடுத்து மாநிலத்தின் திராட்சைக் குலைகளைக் கொய்துவிடும்; கனிகள் பழுத்துவிட்டன' என்று உரக்கக் கத்தினார்.
வெளிபடுத்தல் 14 : 19 (RCTA)
ஆகவே, வானதூதர் மாநிலத்தின் மீது தம் அரிவாளை வீசி, மாநிலத்திராட்சைக் கொடியின் குலைகளைக் கொய்தார். கடவுளது கோபம் என்னும் பெரிய ஆலையில் அவற்றைப் போட்டார்.
வெளிபடுத்தல் 14 : 20 (RCTA)
நகருக்கு வெளியே உள்ள ஆலையிலே அவை மிதிக்கப்பட்டன. அந்த ஆலையினின்று பாய்ந்த இரத்தம் குதிரைகளின் கடிவாள உயரமளவு இருநூறு கல் தொலைவுக்குப் பாவியது.
❮
❯