வெளிபடுத்தல் 13 : 1 (RCTA)
நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது கொடியதொரு விலங்கு கடலிலிருந்து வெளிவரக்கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து முடிகளும், அதன் தலைகளில் தூஷணப் பெயர்களும் இருந்தன.
வெளிபடுத்தல் 13 : 2 (RCTA)
நான் கண்ட விலங்கு சிறுத்தை போல இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போலும், வாய் சிங்கத்தின் வாய்போலும் இருந்தன. அதற்கு அந்தப் பறவைநாகம் தன் வல்லமையைவும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அளித்தது.
வெளிபடுத்தல் 13 : 3 (RCTA)
அதன் தலைகளுள் ஒன்று படுகாயப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது. ஆனால் அப்படுகாயம் குணமாய்விட்டது. அவ்விலங்கைப் பார்த்து, மண்ணில் வாழ்வோர் அனைவரும் வியந்து அதன் பின் சென்றனர்.
வெளிபடுத்தல் 13 : 4 (RCTA)
பறவைநாகம் அவ்விலங்குக்கு அதிகாரம் அளித்ததால், மக்கள் நாகத்தை வணங்கி, "விலங்குக்கு ஒப்பானவன் யார்?" என்று அவ்விலங்கையும் தொழுதார்கள்.
வெளிபடுத்தல் 13 : 5 (RCTA)
அவ்விலங்கு ஆணவச் சொற்களையும் தூஷணங்களையும் பேசுவதற்கு விடப்பட்டது. நாற்பத்திரண்டு மாதமளவு அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 13 : 6 (RCTA)
கடவுளுக்கு எதிராகத் தூஷணம் பேச வாய் திறந்து, அவரது பெயரையும் உறை விடத்தையும், அதாவது விண்ணில் உறைபவர்களையும் தூஷிக்கலாயிற்று.
வெளிபடுத்தல் 13 : 7 (RCTA)
இறைமக்களோடு போர் தொடுக்கவும், அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. குலம், இனம், மொழி, நாடு ஆகிய ஒவ்வொன்றின் மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 13 : 8 (RCTA)
மண்ணில் வாழ்வோர் அனைவரும், அதாவது பலியிடப்பட்ட செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் உலகத் தொடக்க முதல் பெயரெழுதப்படாதவர் அனைவரும், அதைத் தொழுவர்.
வெளிபடுத்தல் 13 : 9 (RCTA)
செவியுள்ளவன் இதைக் கேட்கட்டும்.
வெளிபடுத்தல் 13 : 10 (RCTA)
சிறைக்குக் குறிக்கப்பட்டவன் சிறைக்குச் செல்லத்தான் வேண்டும்; வாளால் கொல்லப்பட வேண்டியவன் வாளால் கொல்லப்படத்தான் வேண்டும். ஆகவே இறைமக்கள் மனவுறுதியும் விசுவாசமும் கொண்டு விளங்க வேண்டும்.
வெளிபடுத்தல் 13 : 11 (RCTA)
அப்போது மண்ணிலிருந்து வேறொரு விலங்கு வெளிவரக் கண்டேன். செம்மறியின் கொம்புகள்போன்ற இரு கொம்புகள் அதற்கு இருந்தன; ஆனால் அது பறவை நாகத்தைப் போல் பேசியது;
வெளிபடுத்தல் 13 : 12 (RCTA)
முதல் விலங்கு காட்டிய அதிகாரத்தை யெல்லாம் அதன் சார்பாக இரண்டாம் விலங்கு காட்டியது. படுகாயத்திலிருந்து குணமாக்கப்பட்ட அம்முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் தொழும்படி செய்தது. அது பெரிய அருங்குறிகள் புரிந்தது.
வெளிபடுத்தல் 13 : 13 (RCTA)
எல்லாரும் பார்க்க விண்ணினின்று நெருப்பு விழும்படிகூடச் செய்தது.
வெளிபடுத்தல் 13 : 14 (RCTA)
தனக்குக் கிடைத்த வல்லமையால், அம்முதல் விலங்கின் சார்பாகச் செய்த அருங்குறிகளில் வாயிலாக, மண்ணில் வாழ்பவர்களை அது வஞ்சித்தது. வாளால் காயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்கிற்குச் சிலை அமைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொன்னது.
வெளிபடுத்தல் 13 : 15 (RCTA)
அச்சிலைக்கு உயிரளித்துப் பேசச் செய்யவும், அதைத் தொழாதவர்களைக் கொன்று விடவும், இரண்டாவது விலங்குக்கு வல்லமை கிடைத்தது.
வெளிபடுத்தல் 13 : 16 (RCTA)
சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் தம் வலக்கையிலோ நெற்றியிலோ அடையாளம் போட்டுக்கொள்ளும்படி செய்தது.
வெளிபடுத்தல் 13 : 17 (RCTA)
அந்த விலங்கின் பெயரையோ அதன் பெயரின் எண்ணையோ அடையாளமாய்க் கொண்டிராதவர்கள், வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தார்கள்.
வெளிபடுத்தல் 13 : 18 (RCTA)
இங்கே அறிவுக் கூர்மை தேவைப்படுகிறது. அறிவுள்ளவன் விலங்கின் எண்ணைக் கணிக்கட்டும். அது ஒரு மனிதனைக் குறிக்கும் எண். அவ்வெண் அறுநூற்று அறுபத்தாறு.
❮
❯