வெளிபடுத்தல் 11 : 1 (RCTA)
பின்பு பிரம்புபோன்றதோர் அளவுகோலை என் கையில் கொடுத்துச் சொன்னதாவது; "எழுந்து, கடவுளின் ஆலயத்தையும் அதன் பீடத்தையும் அளவிடு; அங்கே வழிபடுவோரையும் கணக்கிடு.
வெளிபடுத்தல் 11 : 2 (RCTA)
ஆலயத்திற்கு வெளியே உள்ள முற்றத்தையோ அளக்காமல் விட்டுவிடு. ஏனெனில், அது புறவினத்தார் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகர் அவர்களால் நாற்பத்திரண்டு மாதம் மிதிபடும்.
வெளிபடுத்தல் 11 : 3 (RCTA)
என் சாட்சிகள் இருவரை அனுப்புவேன். அவர்கள் கோணித் துணி உடுத்தி, அந்த ஆயிரத்து இருநூற்று அறுபது நாளளவு இறைவாக்கு உரைப்பர்.
வெளிபடுத்தல் 11 : 4 (RCTA)
மண்ணுலகை ஆளும் ஆண்டவர் முன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும், இரண்டு விளக்குத் தண்டுகளும் அவர்களே.
வெளிபடுத்தல் 11 : 5 (RCTA)
அவர்களுக்குத் தீங்கு செய்ய யாராவது முற்பட்டால் அவர்கள் வாயினின்று தீ வெளிப்பட்டு எதிரிகளை விழுங்கி விடும். ஆம், அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுபவனுக்கு இவ்வாறு அழிவு வந்தே தீரும்.
வெளிபடுத்தல் 11 : 6 (RCTA)
தாங்கள் இறைவாக்குரைக்கும் நாளில் மழை பொழியாதபடி வானத்தை அடைத்துவிட அவர்களுக்கு வல்லமை இருக்கும். விரும்பும் போதெல்லாம் அவர்கள் தண்ணீரை இரத்தமாக்கவும், மண்ணுலகை வாதைகள் பலவற்றால் வாட்டவும் அவர்களுக்கு வல்லமை இருக்கும்.
வெளிபடுத்தல் 11 : 7 (RCTA)
அவர்கள் சான்று பகரும் பணியை முடித்தபின், பாதாளக் குழியினின்று வெளியே கிளம்பும் கொடிய விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, வென்று அவர்களைக் கொன்றுவிடும்.
வெளிபடுத்தல் 11 : 8 (RCTA)
அவர்களுடைய பிணங்கள் அந்த மாநகரத்தின் பெரு வீதியில் கிடக்கும். அந்நகரைச் சோதோம் என்றும், எகிப்து என்றும் உருவகப்படுத்துவர். அவர்களுடைய ஆண்டவர் அறையுண்டது அந்நகரிலேதான்.
வெளிபடுத்தல் 11 : 9 (RCTA)
பல இனங்கள், குலங்கள், மொழிகள் நாடுகளைச் சார்ந்த மனிதர் மூன்றரை நாளளவு அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடைப்பதைப் பார்ப்பார்கள். அவற்றைக் கல்லறையில் அடக்கஞ் செய்யவிடமாட்டார்கள்.
வெளிபடுத்தல் 11 : 10 (RCTA)
மண்ணில் வாழ்வோர் இதைப் பார்த்து, மகிழ்ச்சி கொண்டாடுவர். அந்த மகிழ்ச்சியில் ஒருவர்க்கொருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர். ஏனெனில், இவ்விரு இறைவாக்கினரும் மண்ணில் வாழ்ந்தவர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தார்கள்.
வெளிபடுத்தல் 11 : 11 (RCTA)
மூன்றரை நாளுக்குப்பின் உயிரளிக்கும் ஆவி கடவுளிடமிருந்து வந்து அவர்களுக்குள் நுழைந்தது; நுழையவே, அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
வெளிபடுத்தல் 11 : 12 (RCTA)
அப்போது விண்ணகத்தில் உண்டான பெரியதொரு குரல், "இங்கே வாருங்கள்" என்று தங்களுக்குச் சொல்வதை அந்த இறைவாக்கினர் கேட்டனர். உடனே பகைவர் கண்ணுக்கெதிரிலேயே அவர்கள் மேகத்தின் மீது விண்ணகத்திற்குச் சென்றார்கள்.
வெளிபடுத்தல் 11 : 13 (RCTA)
அதே நேரத்தில் ஒரு பெரும் நில நடுக்கம் உண்டாயிற்று. நகரத்தின் பத்திலொரு பாகம் இடிந்து விழுந்தது. அந்த நில நடுக்கத்தில் ஏழாயிரம் பேர் மடிந்தனர். எஞ்சியிருந்தோர் அச்சமேலிட்டு விண்ணகக் கடவுளுக்கு மகிமை அளித்தனர்.
வெளிபடுத்தல் 11 : 14 (RCTA)
இங்ஙனம் இரண்டாவது வாதை கடந்துவிட்டது. இதோ, மூன்றாவது வாதை விரைவிலே வரப்போகிறது.
வெளிபடுத்தல் 11 : 15 (RCTA)
பின் ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதினார். விண்ணகத்தில் பேரொலிகள் உண்டாகி, "இவ்வுலகை ஆளும் உரிமை நம் ஆண்டவருக்கும் அவரின் மெசியாவுக்கும் உரியதாயிற்று; அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்" என்று முழங்கின.
வெளிபடுத்தல் 11 : 16 (RCTA)
கடவுள் முன்னிலையில் தம் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருபத்து நான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிச் சொன்னதாவது:
வெளிபடுத்தல் 11 : 17 (RCTA)
ஆண்டவராகிய கடவுளே, எல்லாம் வல்லவரே. இருப்பவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
வெளிபடுத்தல் 11 : 18 (RCTA)
ஏனெனில், உம் பெரும் வல்லமையைக் காட்டி ஆட்சி செலுத்தலானீர். புறவினத்தார் சினந்தெழுந்தனர்; உம் சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பிடவும், உம் அடியார்கள், இறைவாக்கினர், பரிசுத்தர்கள் உம் பெயருக்கு அஞ்சுவோர், சிறியோர், பெரியோர் அனைவர்க்கும் கைம்மாறு அளிக்கவும், மண்ணுலகை அழிப்பவர்களை அழித்து விடவும் நேரம் வந்துவிட்டது.
வெளிபடுத்தல் 11 : 19 (RCTA)
பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப் பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19