வெளிபடுத்தல் 10 : 1 (RCTA)
பின் வல்லமைமிக்க இன்னொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையென அணிந்திருத்தார். அவர் தலைமேல் ஒரு வானவில் இருந்தது. முகம் கதிரவனைப்போலவும், கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.
வெளிபடுத்தல் 10 : 2 (RCTA)
அவர் கையில் சிறியதோர் ஏட்டுச் சுருள் பிரித்திருந்தது. வலக்காலைக் கடலின்மீதும், இடக்காலைத் தரையின் மீதும் வைத்து கர்ச்சிக்கும் சிங்கம்போல முழக்கம் செய்தார்.
வெளிபடுத்தல் 10 : 3 (RCTA)
அப்படி முழக்கம் செய்தபோது ஏழு இடிகள் எதிரொலித்துப் பேசின.
வெளிபடுத்தல் 10 : 4 (RCTA)
ஏழு இடிகளும் அப்படிப் பேசியபோது நான் எழுதப்போனேன். ஆனால் விண்ணிலிருந்து வெளிவந்த ஒரு குரல், "ஏழு இடிகளும் பேசியதை மறைத்து வை, எழுதாதே" என்று சொல்லக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 10 : 5 (RCTA)
கடலிலும் தரையிலும் நிற்கிறதாக நான் கண்ட வானதூதர் தம் வலக்கையை விண்ணோக்கி உயர்த்தினார்.
வெளிபடுத்தல் 10 : 6 (RCTA)
விண்ணையும் அதில் உள்ளதையும், மண்ணையும் அதில் உள்ளதையும், கடலையும் அதில் உள்ளதையும், படைத்தவரும் என்றென்றும் வாழ்பவருமானவரின் பெயரால் ஆணையிட்டு, "இனித்தாமதம் இராது.
வெளிபடுத்தல் 10 : 7 (RCTA)
ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதும் நாளில் கடவுளின் மறைவான திட்டம் நிறைவேறியிருக்கும். இறைவாக்கினரான தம் ஊழியர்களுக்குக் கடவுள் அறிவித்த நற்செய்தியின்படியே அவை நிறைவேறும்" என்றர்.
வெளிபடுத்தல் 10 : 8 (RCTA)
விண்ணினின்று நான் கேட்ட குரல் என்னிடம் திரும்பவும் பேசி, "கடல்மீதும் தரைமீதும் நிற்கிற வானதூதரின் கையிலுள்ள பிரித்த ஏட்டுச் சுருளை நீ போய் வாங்கிக்கொள்" என்றது.
வெளிபடுத்தல் 10 : 9 (RCTA)
நானும் அந்த வானதூதரிடம் போய், அந்த ஏட்டுச் சுருளை எனக்குத் தரும்படி கேட்டேன். அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு. இது உன் வயிற்றில் கசக்கும். ஆனால் வாயிலே தேனைப்போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.
வெளிபடுத்தல் 10 : 10 (RCTA)
அப்போது வானதூதரின் கையிலிருந்த அச்சுருளை வாங்கித் தின்றேன். அதுவாயில் தேனைப்போல இனித்தது. ஆனால் தின்றதும் வயிற்றில் கசந்தது.
வெளிபடுத்தல் 10 : 11 (RCTA)
"பல மக்களினம், பல நாடுகள், மொழியினர் பலர், அரசர் பலர் இவர்களைக் குறித்து நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்" என்று எனக்குச் சொல்லப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11