வெளிபடுத்தல் 1 : 1 (RCTA)
இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு: விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் அடியார்களுக்கு வெளிப்படுத்துமாறு கடவுள் அதை அவருக்கு அருளினார்.
வெளிபடுத்தல் 1 : 2 (RCTA)
கிறிஸ்துவோ தம் தூதரை அனுப்பித் தம் அடியானாகிய அருளப்பனுக்கு அவற்றைத் தெரிவித்தார். அருளப்பன் தான் கண்டதனைத்தையும் அறிவித்து, கடவுளின் வார்த்தைக்கும், இயேசு கிறிஸ்து அளித்த சாட்சியத்துக்கும் சான்று கூறினான்.
வெளிபடுத்தல் 1 : 3 (RCTA)
இவ்விறைவாக்குகளை வாசிப்பவனும், அவற்றிற்குச் செவிசாய்த்து இந்நூலில் எழுதியுள்ளதின்படி நடப்பவர்களும் பேறுபெற்றவர்களே: இதோ! குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.
வெளிபடுத்தல் 1 : 4 (RCTA)
ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அருளப்பன் எழுதுவது: 'இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர்' எனும் இறைவனிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.
வெளிபடுத்தல் 1 : 5 (RCTA)
இவரே நம்பிக்கைக்குரிய சாட்சி, இறந்தோரிலிருந்து எழுந்தவருள் தலைப்பேறானவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைமையானவர். இவர் நமக்கு அன்புசெய்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களினின்று நம்மை விடுவித்தார்.
வெளிபடுத்தல் 1 : 6 (RCTA)
மேலும் தம் தந்தையும் கடவுளுமானவருக்கு ஊழியம் செய்ய நம்மை அரசகுல குருக்களாக்கினார். இவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக. ஆமென்.
வெளிபடுத்தல் 1 : 7 (RCTA)
இதோ அவர் மேகங்கள் சூழ வருகிறார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தினவர்களும் காண்பார்கள். அவருக்குச் செய்ததை நினைத்து மண்ணுலகின் குலத்தார் அனைவரும் புலம்பி அழுவர். ஆம், இது உண்மை. ஆமென்.
வெளிபடுத்தல் 1 : 8 (RCTA)
"அரகமும் னகமும் நானே" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள். இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர் அவரே.
வெளிபடுத்தல் 1 : 9 (RCTA)
இயேசுவுக்குள் உங்களோடு வேதனையிலும் அரசுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்ளும் உங்கள் சகோதரனாகிய அருளப்பன் யான், கடவுளின் வார்த்தையை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகப் பத்மு என்ற தீவுக்கு அனுப்பப்பட்டேன்.
வெளிபடுத்தல் 1 : 10 (RCTA)
அன்று ஞாயிற்றுக்கிழமை; தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. எனக்குப் பின்னால் பெருங் குரல் ஒன்று கேட்டது. அது எக்காளம்போல் ஒலித்தது.
வெளிபடுத்தல் 1 : 11 (RCTA)
'காட்சியில் காண்பவற்றை ஏட்டில் எழுதி எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தைரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கு அனுப்பு' என்று அக்குரல் சொன்னது.
வெளிபடுத்தல் 1 : 12 (RCTA)
என்னோடு பேசியவர் யார் என்று அறியத் திரும்பிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டேன்.
வெளிபடுத்தல் 1 : 13 (RCTA)
அவற்றின் நடுவில் மனுமகனைப்போன்ற ஒருவரைப் பார்த்தேன்; அவர் நீண்ட அங்கி அணிந்திருந்தார். மார்பில் பொற்கச்சை கட்டியிருந்தார்.
வெளிபடுத்தல் 1 : 14 (RCTA)
அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும், உறைபனிபோலும் இருந்தது. அவருடைய கண்கள் எரிதழல்போல் சுடர்விட்டன.
வெளிபடுத்தல் 1 : 15 (RCTA)
அவருடைய பாதங்கள் உலையிலிட்ட வெண்கலம்போல் இருந்தன. அவரது குரல் கடல் அலைகளின் இரைச்சலை ஒத்திருந்தது.
வெளிபடுத்தல் 1 : 16 (RCTA)
தம் வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டிருந்தார். இரு புறமும் கூர்மையான வாள் அவரது வாயினின்று வெளிப்பட்டது. அவரது முகம் நண்பகல் கதிரவன் ஒளி என ஒளிர்ந்தது.
வெளிபடுத்தல் 1 : 17 (RCTA)
நான் அவரைக் கண்டதும் செத்தவனைப் போல் அவருடைய அடிகளில் விழுந்தேன். அவர் என்னை வலக் கையால் தொட்டு, சொன்னதாவது: "அஞ்சாதே, முதலும் இறுதியும் நானே. வாழ்பவரும் நானே.
வெளிபடுத்தல் 1 : 18 (RCTA)
சாவுக்குட்பட்டேனாயினும் இதோ, நான் என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் எனக்கு உண்டு.
வெளிபடுத்தல் 1 : 19 (RCTA)
ஆகையால் நீ கண்டதையும் இப்போது நிகழ்கின்றதையும் இனி நிகழப்போவதையும் எழுது.
வெளிபடுத்தல் 1 : 20 (RCTA)
எனது வலக் கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் குத்துவிளக்குகள் இவற்றின் உட்பொருள் இதுவே; ஏழு விண்மீன்கள் ஏழு சபைகளின் தூதர்களையும், ஏழு குத்து விளக்குகள் ஏழு சபைகளையும் குறிக்கின்றன.
❮
❯