சங்கீதம் 90 : 1 (RCTA)
ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்.
சங்கீதம் 90 : 2 (RCTA)
மலைகள் தோன்றுமுன்பே, பூமியும் உலகும் உண்டாகு முன்பே, ஊழ் ஊழிக்காலமாக இறைவா, நீர் இருக்கிறீர்.
சங்கீதம் 90 : 3 (RCTA)
மண்ணோடு மண்ணாகும்படி நீர் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறீர்: "மனுமக்களே மண்ணாகத் திரும்புங்கள்" என்கிறீர்.
சங்கீதம் 90 : 4 (RCTA)
ஏனெனில், உமக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட, கடந்து போன நேற்றைய தினத்தைப் போலவும், ஓர் இரவுச் சாமத்தைப் போலவும் உள்ளன.
சங்கீதம் 90 : 5 (RCTA)
அவர்களை எடுத்து விடுகிறீர். வைகறையில் கண்ட கனவைப் போலவும், செழித்து வளரும் பூண்டைப் போலவும் ஆகிறார்கள்.
சங்கீதம் 90 : 6 (RCTA)
காலையில் பூக்கிறது, செழித்திருக்கிறது: மாலையிலோ வாடி விடுகிறது.
சங்கீதம் 90 : 7 (RCTA)
உம் கோபத்தால் நாங்கள் தொலைந்து போனோம்: நீர் கொண்ட சினத்தால் அதிர்ந்து போனோம்.
சங்கீதம் 90 : 8 (RCTA)
எங்கள் பாவங்கள் எல்லாம் உம் கண்முன் வைத்தீர்: மறைவான எம் பாவங்கள் உம் திருமுகத்தின் ஒளியிலே உள்ளன.
சங்கீதம் 90 : 9 (RCTA)
உம் கோபத்தில் எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து போயிற்று. ஒரு மூச்சுபோல முடிந்து விட்டது எங்கள் வாழ்வு
சங்கீதம் 90 : 10 (RCTA)
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமையுடையோர்க்கு எண்பது; அவற்றில் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே! ஏனெனில், அவை விரைவில் கழிந்து போகின்றன: நாங்களும் அவற்றோடு போய்விடுகிறோம்.
சங்கீதம் 90 : 11 (RCTA)
உமது கோபத்தின் வல்லமையை உணர்ந்தவன் யார்? உம்மிடம் காட்டவேண்டிய அச்சத்திற்கு ஏற்றபடி உம் கடுஞ்சினத்தை அறிந்தவன் யார்?
சங்கீதம் 90 : 12 (RCTA)
உள்ளத்தின் ஞானத்தை அடையுமாறு, எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்.
சங்கீதம் 90 : 13 (RCTA)
ஆண்டவரே, திரும்பி வாரும்; எவ்வளவு காலம் கோபம் கொள்வீர்? உம் ஊழியர் மீது இரக்கம் வையும்.
சங்கீதம் 90 : 14 (RCTA)
உம் இரக்கப் பெருக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்: எம் வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து அகமகிழ்வோம்.
சங்கீதம் 90 : 15 (RCTA)
எங்களை நீர் தண்டித்த காலத்திற்கும், எங்கள் மீது துன்பங்கள் வந்த காலத்திற்கும் ஏற்றவாறு எங்களை மகிழ்வித்தருளும்.
சங்கீதம் 90 : 16 (RCTA)
உம் திருச்செயலை உம் அடியார்கள் காண்பார்களாக: அவர்களுடைய மக்களுக்கு உம் மகிமை விளங்குவதாக.
சங்கீதம் 90 : 17 (RCTA)
நம் ஆண்டவராகிய கடவுள் இன்முகம் காட்டுவாராக: எங்கள் வேலைகளைப் பயனுள்ளவையாக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17