சங்கீதம் 81 : 1 (RCTA)
நம் துணைவராம் இறைவனுக்கு அக்களிப்போடு புகழ் பாடுங்கள்: யாக்கோபின் இறைவனை நினைத்து ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 81 : 2 (RCTA)
வீணை மீட்டுங்கள், முரசு கொட்டுங்கள்; இன்னிசை எழுப்பும் யாழும் சுரமண்டலமும் இசைத்துப் பாடுங்கள்.
சங்கீதம் 81 : 3 (RCTA)
அமாவாசை, முழுமதி, மற்றும் விழா நாட்களில் எக்காளம் ஊதுங்கள்.
சங்கீதம் 81 : 4 (RCTA)
இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த ஆணை அது: யாக்கோபின் இறைவன் தந்த கட்டளை அது.
சங்கீதம் 81 : 5 (RCTA)
எகிப்தை விட்டு வெளியேறிய போது இச்சட்டத்தை அவர் சூசையின் இனத்தவர்க்குத் தந்தார். அறியாத மொழியொன்று என் செவியில் விழுந்தது.
சங்கீதம் 81 : 6 (RCTA)
சுமையின் கீழ் அவர்கள் நொறுங்காத வண்ணம் அவர்களை விடுவித்தேன்: மண் சுமந்து உழைத்து வந்த அவர்களை விடுவித்தேன்.
சங்கீதம் 81 : 7 (RCTA)
துன்ப வேளையில் நீ என்னைக் கூவி அழைத்தாய், நான் உனக்கு விடுதலை அளித்தேன்; இடி முழக்கத்தினிடையே மேகத்தினின்று உனக்கு மறுமொழி சொன்னேன்: மெரீபாவின் நீர் ஊற்றண்டையில் உன்னைச் சோதித்தறிந்தேன்.
சங்கீதம் 81 : 8 (RCTA)
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு அறிவுரை கூறுவேன்: இஸ்ராயேலே, நீ எனக்குச் செவிசாய்ப்பாயானால் எவ்வளவோ நலமாயிருக்கும்!
சங்கீதம் 81 : 9 (RCTA)
வேறு தேவன் எவரும் உனக்கு இருத்தலாகாது: அந்நிய தேவன் யாரையும் நீ வணங்கலாகாது.
சங்கீதம் 81 : 10 (RCTA)
எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேற்றிய கடவுளாகிய ஆண்டவர் நாமே: உன் வாயைத் திற; அதை நான் நிரப்புவேன்.
சங்கீதம் 81 : 11 (RCTA)
ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை: இஸ்ராயேலர் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
சங்கீதம் 81 : 12 (RCTA)
ஆகவே அவர்கள் இருதயக் கடினத்திற்கே கையளித்தேன்: தங்கள் யோசனையின்படி நடக்க விட்டு விட்டேன்.
சங்கீதம் 81 : 13 (RCTA)
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால் எவ்வளவோ நலம்! நான் காட்டிய வழியில் இஸ்ராயேல் நடந்திருந்தால் எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!
சங்கீதம் 81 : 14 (RCTA)
அவர்கள் எதிரிகளை உடனுக்குடனே ஒழித்திருப்பேன்: என் கரத்தின் வல்லமை அவர்கள் எதிரிகளைத் தாக்கியிருக்கும்.
சங்கீதம் 81 : 15 (RCTA)
ஆண்டவரைப் பகைக்கிறவர்கள் அவரிடம் இச்சகம் பேசியிருப்பார்கள்: அவர்களுடைய தண்டனைத் தீர்ப்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
சங்கீதம் 81 : 16 (RCTA)
கோதுமையின் கொழுமையால் நான் இஸ்ராயேல் மக்களை உண்பித்திருப்பேன்: காட்டுத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்திருப்பேன்'.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16