சங்கீதம் 8 : 1 (RCTA)
ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர்.
சங்கீதம் 8 : 2 (RCTA)
உம் எதிரிகள் பின்னடையுமாறு, சிறுவர்களின் வாயும் உம்மை புகழ்ந்தேத்தச் செய்தீர்: எதிரியையும் பகைவனையும் ஒடுக்கவே இங்ஙனம் செய்தீர்.
சங்கீதம் 8 : 3 (RCTA)
உம்முடைய வானங்களை உம் படைப்புகளை, நீர் அமைத்த நிலவை, விண்மீன்களைக் காணும் போது,
சங்கீதம் 8 : 4 (RCTA)
மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்? அவனைப்பற்றி அக்கறை கொள்ள அவன் யார் என்று சொல்லத் தோன்றுகிறது!
சங்கீதம் 8 : 5 (RCTA)
வானதூதரை விட அவனைச் சிறிது தாழ்ந்தவனாகப் படைத்தீர்: மாண்பையும் பெருமையையும் அவனுக்கு முடியாகச் சூட்டினீர்.
சங்கீதம் 8 : 6 (RCTA)
உம் படைப்புகள் அனைத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் தந்தீர்: அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
சங்கீதம் 8 : 7 (RCTA)
ஆடுமாடுகள், வயல் வெளியில் உலவும் விலங்குகள் அனைத்தும், அவனுக்குப் பணியச் செய்தீர்;
சங்கீதம் 8 : 8 (RCTA)
வானத்துப் பறவைகள், கடலில் வாழும் மீன்கள், அதில் நீந்தும் அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
சங்கீதம் 8 : 9 (RCTA)
ஆண்டவரே, எம் ஆண்டவரே, உலகெங்கும் உமது பெயர் எவ்வளவு வியப்புக்குரியது!

1 2 3 4 5 6 7 8 9