சங்கீதம் 78 : 1 (RCTA)
என் மக்களே, என் போதனைக்குச் செவிசாயுங்கள்! நான் கூறும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
சங்கீதம் 78 : 2 (RCTA)
உவமைகளால் நான் பேசுவேன். பழங்காலத்து மறைபொருள்களை எடுத்துரைப்பேன்.
சங்கீதம் 78 : 3 (RCTA)
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொன்னவை, இவற்றை உரைப்போம்.
சங்கீதம் 78 : 4 (RCTA)
அவர்களின் மக்களான உங்களிடமிருந்து அவற்றை மறைக்க மாட்டோம் வரும் தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் சொல்வோம். ஆண்டவருடைய மாண்பு மிக்க செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அற்புதச் செயல்களையும் கூறுவோம்.
சங்கீதம் 78 : 5 (RCTA)
யாக்கோபின் இனத்தாருக்குக் கட்டளையொன்று ஏற்படுத்தினார்; இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். நம் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதே அவர் தந்த சட்டம்.
சங்கீதம் 78 : 6 (RCTA)
இனி வரும் தலைமுறையில் பிறக்கும் மக்கள் அதையறியவும், அவர்களும் தங்கள் மக்களுக்கு அவற்றை அறிவிக்கவும்.
சங்கீதம் 78 : 7 (RCTA)
கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும், அவருடைய செயல்களை மறவாதிருக்கவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்.
சங்கீதம் 78 : 8 (RCTA)
தங்கள் முன்னோர்களைப் போல் இவர்களும் எதிர்ப்பு மனமும் அடங்காத்தனமும் கொண்ட தலைமுறையாய் ஆகாதிருக்கவும், நேரிய மனமில்லாத மக்களாய்க் கடவுளுக்குப் பிரமாணிக்கமற்ற உள்ளத்தினராய் இல்லாதிருக்கவும் இப்படி ஒரு சட்டம் தந்தார்.
சங்கீதம் 78 : 9 (RCTA)
வில் வீரரான எப்பிராயிமின் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.
சங்கீதம் 78 : 10 (RCTA)
கடவுளுடைய உடன்படிக்கையை அவர்கள் காக்கவில்லை. அவரது சட்டத்தின்படி நடக்க அவர்கள் விரும்பவில்லை.
சங்கீதம் 78 : 11 (RCTA)
அவருடைய செயல்களை அவர்கள் மறந்தனர். தங்கள் கண்முன் அவர் செய்த வியத்தகு செயல்களை அவர்கள் மறந்தனர்.
சங்கீதம் 78 : 12 (RCTA)
எகிப்து நாட்டில் அவர்கள் முன்னோர்கள் காணப் புதுமைகளை அவர் செய்தார், தானிஸ் சமவெளியில் அவற்றைச் செய்தார்.
சங்கீதம் 78 : 13 (RCTA)
கடலைப் பிளந்து அவர்களை வழிநடத்தினார். நீர் திரளை அணை போல் நிற்கச் செய்தார்.
சங்கீதம் 78 : 14 (RCTA)
பகலில் மேகத்தினால் வழிகாட்டினார். இரவு முழுவதும் நெருப்பின் ஒளியினால் வழி நடத்தினார்.
சங்கீதம் 78 : 15 (RCTA)
பாலைவெளியில் பாறைகளைப் பிளந்தார்; ஆறு போல் நீர் பெருக்கெடுக்கச் செய்தார். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.
சங்கீதம் 78 : 16 (RCTA)
பாறையினின்று நீரோடை வெளிப்படச் செய்தார். ஆறு போல் அதனைப் பாயச் செய்தார்.
சங்கீதம் 78 : 17 (RCTA)
அப்படி இருந்தும் அவர்கள் அவருக்கு எதிராய்ப் பாவமே செய்தனர். பாலைவெளியிலே உன்னதமானவரை எதிர்த்தனர்.
சங்கீதம் 78 : 18 (RCTA)
கடவுளை அவர்கள் பரிசோதிக்கத் துணிந்தனர். தங்கள் இச்சையின்படி உணவு கேட்டனர்.
சங்கீதம் 78 : 19 (RCTA)
கடவுளை எதிர்த்து, "பாலைவெளியில் கடவுள் நமக்குப் பந்தி படைக்க முடியுமோ?" என்றனர்.
சங்கீதம் 78 : 20 (RCTA)
இதோ! அவர் பாறையைத் தட்டினார்; தண்ணீர் புறப்பட்டது, வெள்ளம் போல் ஓடியது. இனித் தம் மக்களுக்கு உணவு கொடுக்க அவரால் முடியுமா? இறைச்சி தேடித்தர இயலுமா?" என்றனர்.
சங்கீதம் 78 : 21 (RCTA)
இதைக் கேட்ட போது ஆண்டவர் சினங்கொண்டெழுந்தார்; யாக்கோபின் இனத்தவருக்கு எதிராக அவரது சினம் நெருப்புப் போல் பற்றியது. இஸ்ராயேலுக்கு எதிராக அவர் சினம் மூண்டெழுந்தது.
சங்கீதம் 78 : 22 (RCTA)
ஏனெனில், அவர்கள் கடவுளை விசுவாசிக்கவில்லை. அவரது மீட்பின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கவில்லை.
சங்கீதம் 78 : 23 (RCTA)
ஆனால் அவரோ வானில் உலவும் மேகங்களுக்குக் கட்டளையிட்டார், வானங்களின் கதவுகளைத் திறந்து விட்டார்.
சங்கீதம் 78 : 24 (RCTA)
உண்பதற்கு மன்னாவை மழை போல் பொழிந்தார், வானத்து உணவை அவர்களுக்கு அளித்தார்.
சங்கீதம் 78 : 25 (RCTA)
விண்ணோரின் உணவை மனிதன் உண்ணலானான். வேண்டிய அளவுக்கு உணவை அனுப்பினார்.
சங்கீதம் 78 : 26 (RCTA)
வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.
சங்கீதம் 78 : 27 (RCTA)
தூசி போல் ஏராளமாக இறைச்சியைப் பொழிந்தார். கடல் மணல் போல் எண்ணற்ற பறவைகளை வரவழைத்தார்.
சங்கீதம் 78 : 28 (RCTA)
அவை அவர்களுடைய பாளையத்தில் வந்து விழுந்தன. அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிக் கிடந்தன.
சங்கீதம் 78 : 29 (RCTA)
நன்றாக உண்டனர், நிறைவு கொண்டனர். இப்படி அவர்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.
சங்கீதம் 78 : 30 (RCTA)
ஆனால் அவர்கள் விருப்பம் முற்றிலும் நிறைவேறு முன்பே, அவர்கள் உண்டது வயிற்றில் இறங்கு முன்பே,
சங்கீதம் 78 : 31 (RCTA)
கடவுளின் சினம் அவர்களுக்கெதிராய் மூண்டெழுந்தது! அவர்களுள் வலிமை மிக்கவர்களை வதைத்தொழித்தார். இஸ்ராயேலின் இளைஞர்களை மடியச் செய்தார்.
சங்கீதம் 78 : 32 (RCTA)
எனினும், பாவம் செய்வதை அவர்கள் விடவில்லை. அவர் செய்த புதுமைகளையும் அவர்கள் நம்பவில்லை.
சங்கீதம் 78 : 33 (RCTA)
ஆகவே, அவர்கள் வாழ்நாள் மூச்சுப் போல் மறையச் செய்தார். அவர்கள் வயது திடீரென முடிவடையச் செய்தார்.
சங்கீதம் 78 : 34 (RCTA)
அவர்களைச் சாகடித்த போது அவரைத் தேடி ஓடினர். மனந்திரும்பி, கடவுளை நாடினர்.
சங்கீதம் 78 : 35 (RCTA)
கடவுளே தங்களுக்கு அடைக்கலப் பாறை என்பதை நினைவு கூர்ந்தனர். உன்னத கடவுளே தங்கள் மீட்பரென்பதை நினைவுக்குக் கொணர்ந்தனர்.
சங்கீதம் 78 : 36 (RCTA)
ஆனால் அவர்களின் வாய் பேசியது வஞ்சகம். அவர்களின் நா எடுத்துரைத்தது பொய்.
சங்கீதம் 78 : 37 (RCTA)
அவரிடம் அவர்கள் காட்டிய மனம் நேர்மையற்றது. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
சங்கீதம் 78 : 38 (RCTA)
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார். அவர்களை அழித்து விடவில்லை. பலமுறை தம் கோபத்தை அடக்கிக் கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்கள்மேல் காட்டவில்லை.
சங்கீதம் 78 : 39 (RCTA)
அவர்கள் வெறும் மனிதரேயென்று அவர் நினைவு கூர்ந்தார். விரைவில் மறையும் மூச்சென நினைவில் கொண்டார்.
சங்கீதம் 78 : 40 (RCTA)
பாலைவெளியில் எத்தனையோ முறை அவர்கள் அவருக்குச் சினமூட்டினர். எத்தனையோ முறை அவருடைய மனத்தைப் புண்படுத்தினர்.
சங்கீதம் 78 : 41 (RCTA)
மீளவும் கடவுளைச் சோதித்தனர். இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எரிச்சலூட்டினர்.
சங்கீதம் 78 : 42 (RCTA)
அவரது கை வன்மையை அவர்கள் மறந்து விட்டனர். எதிரியின் கையினின்று அவர்களை மீட்ட நாளை நினைத்தாரில்லை.
சங்கீதம் 78 : 43 (RCTA)
எகிப்தில் அவர் அருங்குறிகளைச் செய்த நாளை மறந்தனர். தானிஸ் சமவெளியில் அவர் புதுமைகளைச் செய்த நாளை நினைக்கவில்லை.
சங்கீதம் 78 : 44 (RCTA)
அந்நாளில் ஆறுகளை இரத்தமாக மாற்றினார். நீரில்லாதபடி ஓடைகளை இரத்த வெள்ளமாக்கினார்.
சங்கீதம் 78 : 45 (RCTA)
அவர்களை அரித்துத் தின்னும்படி பூச்சிகளை அனுப்பினார், அவர்களைத் துன்புறுத்த தவளைகளை ஏவினார்.
சங்கீதம் 78 : 46 (RCTA)
அவர்கள் விளைச்சலைக் கம்பளிப் பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்கள் உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
சங்கீதம் 78 : 47 (RCTA)
திராட்சைக் கொடிகளைக் கல் மழையால் அழித்தார். ஆலங்கட்டிகளால் அத்தி மரங்களை நாசமாக்கினார்.
சங்கீதம் 78 : 48 (RCTA)
அவர்களுடைய கால்நடைகளைக் கல் மழைக்கு இரையாக்கினார். அவர்களுடைய ஆடுமாடுகள் இடி மின்னலுக்கு இரையாயின.
சங்கீதம் 78 : 49 (RCTA)
தம் சினத்தின் கொடுமையை அவர்கள் மேல் காட்டினர்; கோபமும் கொடுமையும் துன்பமும் அவர்கள் மேல் விழச் செய்தார், துன்பம் விளைக்கும் தூதர்களைக் கூட்டமாய் அனுப்பினார்.
சங்கீதம் 78 : 50 (RCTA)
தம் கோப வெள்ளம் மடை திறந்து ஓடச் செய்தார். சாவினின்று அவர்களை அவர் காக்கவில்லை; கால் நடைகளைக் கொள்ளை நோய்க்குக் கையளித்தார்.
சங்கீதம் 78 : 51 (RCTA)
எகிப்தில் தலைபேறான ஒவ்வொன்றையும் வதைத்தார்: காம் இனத்தார் இல்லங்களில் தலைச்சன் பிள்ளைகளைச் சாகடித்தார்.
சங்கீதம் 78 : 52 (RCTA)
ஆடுகளைப் போல் தம் மக்களை நடத்திச் சென்றார்: ஆட்டு மந்தையைப் போல் பாலைவெளியில் அவர்களைக் கூட்டிச் சென்றார்.
சங்கீதம் 78 : 53 (RCTA)
பாதுகாப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார்: அவர்கள் அஞ்சவேயில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் விழுங்கிற்று.
சங்கீதம் 78 : 54 (RCTA)
தம் புனித நாட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார்: தம் வலக்கரத்தால் சொந்தமாக்கிக் கொண்ட மலைகளுக்கு அழைத்துச் சென்றார்.
சங்கீதம் 78 : 55 (RCTA)
அவர்கள் போகுமிடத்தில் இருந்த வேற்றினத்தாரை விரட்டி விட்டார்; அந்நாடுகளை இஸ்ராயேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்: அந்நாட்டுக் குடியிருப்புகளில் அவர்களை வாழச் செய்தார்.
சங்கீதம் 78 : 56 (RCTA)
எனினும், அவர்கள் உன்னத கடவுளைச் சோதித்தனர்; அவருக்கு எரிச்சலூட்டினர். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை.
சங்கீதம் 78 : 57 (RCTA)
தங்கள் முன்னோர்களைப் போல் அவர்களும் தவறு செய்தனர்; முறை தவறிப் போயினர்: கோணலான அம்பைப் போல குறி பிசகிப் போயினர்.
சங்கீதம் 78 : 58 (RCTA)
குன்றுகளில் பீடங்கள் கட்டி அவர்கள் சினமூட்டினர்: சிலைகளை வழிபட்டு அவருக்குக் கோபத்தை உண்டாக்கினர்.
சங்கீதம் 78 : 59 (RCTA)
கடவுள் இதையறிந்து சினந்தெழுந்தார்: இஸ்ராயேலை அறவே புறக்கணித்தார்.
சங்கீதம் 78 : 60 (RCTA)
சீலோவில் தமக்கிருந்த உறைவிடத்தை அவர் விட்டகன்றார்: மனிதரிடையே அவர் வாழ்ந்து வந்த கூடாரத்தை விட்டுப் போனார்.
சங்கீதம் 78 : 61 (RCTA)
தம் வலிமையை அடிமைத்தனத்துக்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியின் கையில் விட்டு விட்டார்.
சங்கீதம் 78 : 62 (RCTA)
தம் மக்களை வாளுக்கு இரையாகச் செய்தார்; தம் உரிமைச் சொத்தானவர்கள் மீது சினந்தெழுந்தார்.
சங்கீதம் 78 : 63 (RCTA)
அவர்களுடைய இளைஞர்களை நெருப்பு எரித்து விட்டது: கன்னிப் பெண்களுக்கு திருமண மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
சங்கீதம் 78 : 64 (RCTA)
அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய விதவைகளும் ஒப்பாரி வைக்கவில்லை.
சங்கீதம் 78 : 65 (RCTA)
ஆண்டவரோ தூக்கத்தினின்று எழுவது போல் விழித்தெழுந்தார்: மது மயக்கம் தெளிந்து எழும் வீரனைப் போல் குதித்தெழுந்தார்.
சங்கீதம் 78 : 66 (RCTA)
தம் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தார்: என்றென்றும் நிந்தனைக்கு உரியவர்களாக ஆக்கினார்.
சங்கீதம் 78 : 67 (RCTA)
யோசேப்பின் குடும்பத்தை அவர் புறக்கணித்தார்: எப்பிராயிம் கோத்திரத்தை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
சங்கீதம் 78 : 68 (RCTA)
யூதாவின் கோத்திரத்தையே அவர் தேர்ந்தெடுத்தார்: சீயோன் மலையையே அவர் நேசித்தார்.
சங்கீதம் 78 : 69 (RCTA)
வானமட்டும் உயரத் தம் திருத்தலத்தை நிறுவினார்: என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியைப் போல் அதை ஆக்கினார்.
சங்கீதம் 78 : 70 (RCTA)
தம் ஊழியன் தாவீதை அவர் தேர்ந்து கொண்டார்; ஆட்டுக் கிடைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.
சங்கீதம் 78 : 71 (RCTA)
கறவல் ஆடுகளின் பின் திரிந்த அவரை அழைத்துக் கொண்டார்: தம் மக்களான யாக்கோபின் இனத்தாரை, தம் உரிமைச் சொத்தான இஸ்ராயேலை மேய்க்கச் செய்தார்.
சங்கீதம் 78 : 72 (RCTA)
அவரும் நேர்மையான உள்ளத்தோடு அவர்களை மேய்த்தார்: மிகுந்த கைத்திறனோடு அவர்களை வழி நடத்தினார்.
❮
❯