சங்கீதம் 77 : 1 (RCTA)
இறைவனை நோக்கி என் குரல் எழும்பிற்று; அவரை நோக்கிக் கூப்பிடுகிறேன். எனக்குச் செவிசாய்க்கும் வண்ணம் கடவுளைக் கூவி அழைக்கிறேன்; என் துன்ப நாளில் நான் ஆண்டவரை நாடுகிறேன்.
சங்கீதம் 77 : 2 (RCTA)
இராக்காலத்தில் சலிப்பின்றி என் கைகளை அவரை நோக்கி விரித்தேன், என் ஆன்மா ஆறுதல் பெற விரும்பவில்லை.
சங்கீதம் 77 : 3 (RCTA)
ஆண்டவரை நினைக்கும் போது நான் பெருமூச்சு விடுவிறேன். அவரை எண்ணும் போது என் மனம் சோர்ந்து போகிறது.
சங்கீதம் 77 : 4 (RCTA)
என் கண் இமைகள் கொட்டாதபடி செய்கின்றீர். கலக்கமுற்றுப் பேசவும் முடியாதவனாயிருக்கிறேன்.
சங்கீதம் 77 : 5 (RCTA)
கடந்த காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். கடந்து சென்ற ஆண்டுகளை சிந்திக்கலானேன்.
சங்கீதம் 77 : 6 (RCTA)
இரவில் எனக்குள் சிந்தனை செய்கிறேன். எண்ணி எண்ணி என் மனம் ஆராய்கின்றது.
சங்கீதம் 77 : 7 (RCTA)
ஆண்டவர் என்றென்றும் கைவிட்டு விடுவாரா? இனி ஒருபோதும் இரங்கமாட்டாரா?
சங்கீதம் 77 : 8 (RCTA)
அவரது கருணை அடியோடு நின்றுவிடுமா? அவர் அளித்த வாக்குறுதி தலைமுறை தலைமுறையாய் அற்றுப் போய்விடுமா?
சங்கீதம் 77 : 9 (RCTA)
இரக்கங்கொள்ள கடவுள் மறந்துவிட்டாரா? சினத்தில் அவரது அருள் உள்ளம் அடைபட்டு விட்டதா?
சங்கீதம் 77 : 10 (RCTA)
உன்னதமானவருடைய வலக்கரம் மாறிப் போனது. இதுவே என் துயரம்" என்றேன்.
சங்கீதம் 77 : 11 (RCTA)
ஆண்டவருடைய செயல்களை நினைத்தேன். ஆதிமுதல் அவர் செய்த வியத்தகு செயல்களை மறக்க மாட்டேன்.
சங்கீதம் 77 : 12 (RCTA)
உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானம் பண்ணுவேன். உம் அரிய செயல்களில் என் மனத்தைச் செலுத்துவேன்.
சங்கீதம் 77 : 13 (RCTA)
இறைவா, நீர் காட்டிய வழி புனிதமானது. நம்முடைய இறைவனைப் போல் மகத்துவமுள்ள கடவுள் யார்?
சங்கீதம் 77 : 14 (RCTA)
அரியன செய்கிற கடவுள் நீரே. மக்களிடையேயில் உமது வல்லமை விளங்கச் செய்தீர்
சங்கீதம் 77 : 15 (RCTA)
யாக்கோபு, சூசை இவர்களுடைய சந்ததியாகிய உம் மக்களை உமது கரத்தால் மீட்டீர்.
சங்கீதம் 77 : 16 (RCTA)
இறைவா, கடல் வெள்ளம் உம்மைப் பார்த்தது, உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது. ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.
சங்கீதம் 77 : 17 (RCTA)
கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடி முழங்கின. உம் அம்புகள் பறந்தன.
சங்கீதம் 77 : 18 (RCTA)
உமது இடி முழக்கம் கடும் புயலில் ஒலித்தது: மின்னல்கள் பாருலகில் ஒளிவீசின; பூமியனைத்தும் நடுங்கி அதிர்ந்தது.
சங்கீதம் 77 : 19 (RCTA)
கடலின் வழியாக நீர் நடந்து சென்றீர்; வெள்ளத்தினிடையே நீர் வழி காட்டினீர். உமது அடிச்சுவடுகளோ காணப்படவில்லை.
சங்கீதம் 77 : 20 (RCTA)
மந்தையைப் போல் உம் மக்களை நடத்திச் சென்றீர், மோயீசன், ஆரோன் இவர்களைக் கொண்டு அழைத்துச் சென்றீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20