சங்கீதம் 74 : 1 (RCTA)
இறைவா, நீர் எங்களை ஏன் என்றென்றைக்கும் தள்ளி விட்டீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள் மேல் உமக்குச் சினம் மூள்வதேன்?
சங்கீதம் 74 : 2 (RCTA)
ஆதிகால முதல் நீர் நிறுவிய உமது சபையை நினைவு கூர்ந்தருளும்; உம்முடைய உரிமைப் பொருளென மீட்டுக்கொண்ட குலத்தை நினைவு கூர்ந்தருளும் உமது உறைவிடம் அமைந்துள்ள சீயோன் மலையை நினைவு கூர்ந்தருளும்.
சங்கீதம் 74 : 3 (RCTA)
நெடுங்காலமாய்ப் பாழ்பட்டுக் கிடந்த இடத்தை நோக்கி அடி எடுத்து வையும்: பகைவன் உமது திருத்தலத்தில் அனைத்தையும் பாழ்படுத்தி விட்டான்.
சங்கீதம் 74 : 4 (RCTA)
உம் மக்கள் கூடிய தலத்தில் உம்முடைய எதிரிகள் முழக்கமிட்டனர். தங்கள் கொடிகளை அங்கே வெற்றிச் சின்னங்களாக நாட்டினர்.
சங்கீதம் 74 : 5 (RCTA)
அடர்ந்த சோலையில் கோடாரியைக் கையில் தாங்குபவர்கள் போலாயினர்.
சங்கீதம் 74 : 6 (RCTA)
இதோ, அவர்கள் கோடாரியும் சம்மட்டியும் கொண்டு, அதன் வாயில்களைத் தகர்ந்தெறிகின்றனர்.
சங்கீதம் 74 : 7 (RCTA)
உமது திருத்தலத்தைத் தீக்கிரையாக்கினர். மாநிலத்தில் உமது பெயர் விளங்கிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினர்.
சங்கீதம் 74 : 8 (RCTA)
அவர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்து விடுவோம், இறைவனின் திருத்தலங்களனைத்தையும் மாநிலமெங்கும் எரித்து விடுவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
சங்கீதம் 74 : 9 (RCTA)
முன்னைய அருங்குறிகள் எவையும் காணோம், இறைவாக்கினர் எவருமில்லை. இந்நிலை எந்நாள் வரைக்கும் நீடிக்கும் என்று அறிபவன் நம்மிடையே யாருமில்லை.
சங்கீதம் 74 : 10 (RCTA)
இறைவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? உமது பெயரைப் பகைவன் என்றென்றுமே பழிப்பானோ?
சங்கீதம் 74 : 11 (RCTA)
உமது கரத்தை ஏன் நீட்டாமலிருக்கிறீர்? ஏன் உம் வலக்கரத்தை மடக்கி வைத்திருக்கிறீர்?
சங்கீதம் 74 : 12 (RCTA)
ஆதியிலிருந்தே கடவுள் என் அரசராயுள்ளார். மாநிலத்தில் மீட்புத் தருபவர் அவரே.
சங்கீதம் 74 : 13 (RCTA)
உமது வல்லமையால் கடலைப் பிளந்து விட்டீர். நீரில்வாழ் பறவை நாகங்களின் தலைகளை நசுக்கி விட்டீர்.
சங்கீதம் 74 : 14 (RCTA)
திமிலங்களின் தலைகளை உடைத்து விட்டீர். கடல் வாழ் விலங்குளுக்கு அவற்றை இரையாகக் கொடுத்தீர்.
சங்கீதம் 74 : 15 (RCTA)
ஊற்றுகளையும் நீரோடைகளையும் புறப்படச் செய்தீர். பெருக்கெடுத்தோடும் ஆறுகளை வற்றச் செய்தீர்.
சங்கீதம் 74 : 16 (RCTA)
பகலும் உமதே, இரவும் உமதே, நிலவையும் கதிரவனையும் அமைத்தவர் நீரே.
சங்கீதம் 74 : 17 (RCTA)
பூமிக்கு எல்லைகளைத் திட்டம் செய்தவர் நீரே. கோடையும் மாரியும் ஏற்படுத்தியவர் நீரே.
சங்கீதம் 74 : 18 (RCTA)
ஆண்டவரே, பகைவன் உம்மைப் பழித்தான். தீய மக்கள் உமது திருப்பெயரைச் சபித்தனர்; இதை நினைவுகூரும்.
சங்கீதம் 74 : 19 (RCTA)
உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பருந்துக்கு இரையாக விட்டு விடாதேயும் உம்முடைய எளிய மக்களின் வாழ்வை ஒரு நாளும் மறவாதேயும்.
சங்கீதம் 74 : 20 (RCTA)
உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும். பூமியின் மறைவிடங்களிலும் வெளியிடங்களிலும் கொடுமை நிறைந்திருக்கிறதே!
சங்கீதம் 74 : 21 (RCTA)
சிறுமையுற்றவன் ஏமாற்றமடைய விடாதேயும். ஏழை எளியோர் உமது திருப்பெயரைப் புகழ்வாராக.
சங்கீதம் 74 : 22 (RCTA)
எழுந்தருளும் இறைவனே, உமது வழக்கை நீரே நடத்தும். அறிவிலியால் நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைவு கூரும்.
சங்கீதம் 74 : 23 (RCTA)
உம்மை எதிர்த்து எழுபவர்களின் அமளி எந்நேரமும் அதிகரிக்கின்றது. உமது எதிரிகள் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23