சங்கீதம் 72 : 1 (RCTA)
இறைவா, அரசனிடம் உமது நீதி நேர்மை விளங்கச் செய்யும். அரச மகனிடம் உமது நீதித் தன்மை விளங்கச் செய்யும்.
சங்கீதம் 72 : 2 (RCTA)
நீதியோடு அவர் உம் மக்களை ஆள்வாராக. உம்முடையவரான எளியோரை நேர்மையுடன் நடத்துவாராக.
சங்கீதம் 72 : 3 (RCTA)
மலைகள் உம் மக்களுக்குச் சமாதானம் தருவனவாக: குன்றுகள் நீதியைக் காப்பனவாக.
சங்கீதம் 72 : 4 (RCTA)
எளிய மக்களை அவர் காப்பாராக, ஏழைகளின் மக்களை அவர் பாதுகாப்பாராக: கொடியவனை அவர் நொறுக்கி விடுவாராக.
சங்கீதம் 72 : 5 (RCTA)
கதிரவனைப் போல் அவர் நீடூழி வாழ்வாராக: நிலவைப்போல் தலைமுறை தலைமுறையாய் வாழ்வாராக.
சங்கீதம் 72 : 6 (RCTA)
புல்வெளியில் விழும் மழை போல் அவர் இருப்பார்: நிலத்தில் பாயும் நீர் போல் அவர் இருப்பார்.
சங்கீதம் 72 : 7 (RCTA)
அவரது ஆட்சியின் நாளில் நீதி செழித்தோங்குவதாக; சமாதானம் நிலை பெறும் நிலவு இருக்கும் வரையில் சமாதானம் நிலை பெறும்.
சங்கீதம் 72 : 8 (RCTA)
ஒரு கடலினின்று மறு கடல் வரைக்கும் அவர் அதிகாரம் செலுத்துவார்: நதியினின்று உலகின் எல்லை வரை அவர் ஆள்வார்.
சங்கீதம் 72 : 9 (RCTA)
அவருடைய எதிரிகள் வந்து அவர் முன் தெண்டனிடுவர்: அவருடைய பகைவர் மண்ணைக் கவ்வுவர்.
சங்கீதம் 72 : 10 (RCTA)
தார்சிஸ் நாட்டு மன்னர்களும் தீவுகளின் மன்னர்களும் காணிக்கைகள் கொணர்வர்: அராபியா, சாபா நாட்டு வேந்தர்களும் காணிக்கை செலுத்துவர்.
சங்கீதம் 72 : 11 (RCTA)
மாநிலத்தரசர் அனைவரும் அவரை வணங்குவர்: மக்களினத்தார் அனைவரும் அவருக்கு ஊழியம் செய்வர்.
சங்கீதம் 72 : 12 (RCTA)
தம்மைக் கூவி அழைக்கும் ஏழைக்கு அவர் விடுதலை தருவார். திக்கற்ற எளியவனை விடுவிப்பார்.
சங்கீதம் 72 : 13 (RCTA)
ஏழை எளியவர் மீது இரக்கம் கொள்வார். ஏழைகளின் வாழ்வை மலரச் செய்வார்.
சங்கீதம் 72 : 14 (RCTA)
கொடுமையினின்றும் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் முன்னிலையில் விலை மிக்கது.
சங்கீதம் 72 : 15 (RCTA)
அவர் நீடூழி வாழ்க: சாபா நாட்டுத் தங்கம் அவருக்குக் காணிக்கையாகட்டும். அவருக்காக வேண்டுதல் என்றும் எழும்பும். என்றும் அவருக்கு ஆசி மொழி கிடைக்கும்.
சங்கீதம் 72 : 16 (RCTA)
நாட்டில் நிரம்பக் கோதுமை விளையட்டும்; உயர்ந்த மலைகளிலும் அதன் விளைச்சல் லீபானைப் போல் விளங்கட்டும். வயல் வெளிப் புல் போல நகர மக்கள் செழிக்கட்டும்.
சங்கீதம் 72 : 17 (RCTA)
அவரது பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக: கதிரோன் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிலைப்பதாக. அவர் வழியாய்ப் பூவுலக இனத்தார் அனைவரும் ஆசி பெறுவர். மக்கள் இனத்தார் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றிப் புகழ்வர்.
சங்கீதம் 72 : 18 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி: அவர் ஒருவரே வியத்தகு செயல்களைச் செய்கிறார்.
சங்கீதம் 72 : 19 (RCTA)
மாட்சியை விளங்கும் அவரது பெயர் என்றென்றும் வாழ்த்துப் பெறுவதாக: வையகம் அனைத்தும் அவர் புகழால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.
❮
❯