சங்கீதம் 69 : 1 (RCTA)
இறைவா, என்னை மீட்டருளும்: ஏனெனில், வெள்ளம் என் கழுத்து மட்டும் பெருக்கெடுத்துள்ளது.
சங்கீதம் 69 : 2 (RCTA)
ஆழ்ந்த சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கிறேன்: கால் ஊன்ற இடமேயில்லை, ஆழ்ந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டேன்: வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது.
சங்கீதம் 69 : 3 (RCTA)
கூவிக் கூவி களைத்து விட்டேன்; என்தொண்டையும் வறண்டு போயிற்று: என் இறைவன் துணையை எதிர்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின.
சங்கீதம் 69 : 4 (RCTA)
காரணமின்றி என்னைப் பகைப்பவர்கள் என் தலையின் முடியை விட அதிகமாயுள்ளனர்; அநியாயமாய் என்னை எதிர்ப்பவர்கள் என்னை விட வலிமை கொண்டுள்ளனர். நான் எடுத்துக் கொள்ளாததைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.
சங்கீதம் 69 : 5 (RCTA)
இறைவா, நீர் என் அறிவீனத்தை அறிவீர்: என் பாவங்கள் உமக்கு மறைவாயில்லை.
சங்கீதம் 69 : 6 (RCTA)
ஆண்டவரே, வான்படைகளின் ஆண்டவரே, உம்மில் நம்பிக்கை வைப்பவர்கள் என்னால் ஏமாற்றம் அடைய விடாதேயும். இஸ்ராயேலின் இறைவனே, உம்மைத் தேடுவோர் என்னால் வெட்கமுற விடாதேயும்.
சங்கீதம் 69 : 7 (RCTA)
ஏனெனில், உம் பொருட்டே நான் நிந்தனையை ஏற்றேன்: உம் பொருட்டே வெட்கத்தால் என் முகம் கவிந்து போயிற்று.
சங்கீதம் 69 : 8 (RCTA)
என் உறவினர்க்கும் நான் அந்நியனானேன்: என் சகோதரருக்கும் நான் வேற்று மனிதனானேன்.
சங்கீதம் 69 : 9 (RCTA)
உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்து விட்டது: உம்மை நிந்திப்பவர்களின் நிந்தனைகள் என் மேல் விழலாயின.
சங்கீதம் 69 : 10 (RCTA)
நோன்பிருந்து என் ஆன்மாவை ஒறுத்தேன்: ஆனால், அதுவும் நிந்தனைக்குரியதாயிற்று.
சங்கீதம் 69 : 11 (RCTA)
சாக்குத்துணியை என் ஆடையாய் உடுத்தினேன்: ஆனால், அவர்கள் ஏளனத்துக்குள்ளானேன்.
சங்கீதம் 69 : 12 (RCTA)
நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர். மது உண்பவர்கள் என்னைத் தூற்றுகின்றனர்.
சங்கீதம் 69 : 13 (RCTA)
ஆனால், ஆண்டவரே, உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு: இறைவா, உமக்கு உகந்த நேரத்தில் உம்மை நோக்கி வேண்டுகிறேன். மிகுதியான உம் நன்மைத் தனத்திற்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உறுதியான உமது அருட்துணைக்கேற்ப எனக்குச் செவிசாய்த்தருளும்.
சங்கீதம் 69 : 14 (RCTA)
சேற்றில் நான் அமிழ்ந்திப் போகாதபடி என்னை விடுவித்தருளும்; என்னைப் பகைப்பவர்களிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: ஆழ்ந்த வெள்ளத்தினின்று என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 69 : 15 (RCTA)
பெருவெள்ளம் என்னை மூழ்கடிக்கவோ, ஆழ்கடல் என்னை விழுங்கிடவோ விடாதேயும்: பாழ்கிணறு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்.
சங்கீதம் 69 : 16 (RCTA)
உமது அருள் கனிவு மிக்கதாதலின், ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்னைக் கண்ணோக்கும்.
சங்கீதம் 69 : 17 (RCTA)
உம் ஊழியனிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: துன்புறுகிறேனாதலின், இறைவா, விரைவில் என் மன்றாட்டைக் கேட்டருளும்.
சங்கீதம் 69 : 18 (RCTA)
என்னிடம் அணுகி வந்து என்னை மீட்டருளும்: உம் எதிரிகளின் பொருட்டு எனக்கு விடுதலை அளித்தருளும்.
சங்கீதம் 69 : 19 (RCTA)
எனக்குற்ற நிந்தனையை நீர் அறிவீர், நான் அடைந்த அவமானத்தையும் ஏமாற்றத்தையும் நீர் அறிவீர்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரும் உம் எதிரிலேயே உள்ளனர்.
சங்கீதம் 69 : 20 (RCTA)
எனக்குற்ற நிந்தைனையால் என் உள்ளம் உடைந்தது, தளர்வுறலானேன்; எனக்கு இரக்கம் காட்டுபவருண்டோ எனப் பார்த்தேன்: ஒருவருமில்லை. ஆறுதலளிப்பார் உண்டோ எனப் பார்த்தேன்; ஒருவரையும் காணவில்லை.
சங்கீதம் 69 : 21 (RCTA)
கசந்த பிச்சை எனக்கு உணவாகக் கொடுத்தனர்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தனர்.
சங்கீதம் 69 : 22 (RCTA)
அவர்களுடைய பந்தி அவர்களுக்கு வைத்த கண்ணி போலாவதாக: நண்பர்களுக்கு விரித்த வலை போலாவதாக.
சங்கீதம் 69 : 23 (RCTA)
பார்வையில்லாதவாறு அவர்கள் கண்கள் இருளடைந்து போகட்டும்: அவர்களுடைய இடுப்புகள் என்றும் தள்ளாடிப் போகட்டும்.
சங்கீதம் 69 : 24 (RCTA)
உமது கோபாக்கினை அவர்கள் மேல் விழச் செய்யும்: உமது சினத்தின் கணலில் அவர்கள் பிடிபடுவார்களாக.
சங்கீதம் 69 : 25 (RCTA)
அவர்கள் குடியிருப்புப் பாழ்பட்டுப் போவதாக: அவர்கள் கூடாரங்களில் தங்க எவரும் இல்லாமல் போகட்டும்.
சங்கீதம் 69 : 26 (RCTA)
ஏனெனில், நீர் வதைத்தவனை அவர்கள் துன்புறுத்துகிறார்கள்; நீர் காயப்படுத்தினவனுடைய வேதனையை அதிகரிக்கிறார்கள்.
சங்கீதம் 69 : 27 (RCTA)
குற்றத்தின் மேல் குற்றத்தை அவர்கள் மேல் சுமத்தும்: குற்றமற்றவர்களென அவர்கள் தீர்ப்படைய விடாதேயும்.
சங்கீதம் 69 : 28 (RCTA)
வாழ்வோரின் நூலிலிருந்து அவர்கள் பெயர் எடுபடட்டும்: நீதிமான்களோடு அவர்களுடைய பெயர் எழுதப்பட விடாதேயும்.
சங்கீதம் 69 : 29 (RCTA)
நானோவெனில் சிறுமையுற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்: இறைவா, உமது அருட்துணை என்னைக் காப்பதாக.
சங்கீதம் 69 : 30 (RCTA)
புகழ் இசைத்து இறைவனின் பெயரைப் புகழ்வேன்; நன்றி உணர்வோடு அவர் புகழ் சாற்றுவேன்.
சங்கீதம் 69 : 31 (RCTA)
எருதுப் பலியை விட அது இறைவனுக்கு உகந்ததாகும். கொம்பும் குளம்பும் உள்ள காளையை விட உகந்ததாகும்.
சங்கீதம் 69 : 32 (RCTA)
எளியோரே, இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். இறைவனைத் தேடுவோரே, உங்கள் உள்ளம் புத்துயிர் பெறுவதாக.
சங்கீதம் 69 : 33 (RCTA)
ஏனெனில், ஏழைகளின் குரலை ஆண்டவர் கேட்டருளுகின்றார். சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
சங்கீதம் 69 : 34 (RCTA)
வானமும் வையமும் அவரைப் புகழ்வனவாக: கடல்களும் கடல்களில் வாழும் அனைத்துமே அவரைப் புறக்கணிப்பதில்லை.
சங்கீதம் 69 : 35 (RCTA)
ஏனெனில், கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார் யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அவர்கள் அங்குக் குடியிருப்பர், அதை உரிமையாக்கிக் கொள்வர்.
சங்கீதம் 69 : 36 (RCTA)
அவருடைய ஊழியர்கள் வழி வந்தோர் அதை உரிமைப்படுத்திக் கொள்வர்; அவர் மீது அன்பு கொள்பவர் அதில் வாழ்வார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36