சங்கீதம் 59 : 1 (RCTA)
என் இறைவா, என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: எனக்கெதிராய் எழும்புவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளிப்பளித்தருளும்.
சங்கீதம் 59 : 2 (RCTA)
தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: இரத்த வெறியர்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 59 : 3 (RCTA)
இதோ! அவர்கள் என் உயிருக்கு உலை வைக்கிறார்கள்; வலியோர் எனக்கெதிராய்ச் சதி செய்கிறார்கள்; ஆண்டவரே, என்னிடம் தீவினையோ, பாவமோ இல்லை.
சங்கீதம் 59 : 4 (RCTA)
என்னிடம் குற்றமில்லாதிருந்தும் என்னை எதிர்க்க விரைகின்றனர், என்னைத் தாக்குகின்றனர்: விழித்தெழும், எனக்குத் துணைசெய்யும், என் நிலையைப் பாரும்.
சங்கீதம் 59 : 5 (RCTA)
ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.
சங்கீதம் 59 : 6 (RCTA)
மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்; நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
சங்கீதம் 59 : 7 (RCTA)
இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: 'யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?' என்கின்றனர்.
சங்கீதம் 59 : 8 (RCTA)
ஆனால், ஆண்டவரே, நீர் அவைகளைப் பார்த்து நகைக்கிறீர்: புற இனத்தார் அனைவரையும் ஏளனம் செய்கின்றீர்.
சங்கீதம் 59 : 9 (RCTA)
எனக்கு வலிமையானவரே, உம்மையே நோக்கியுள்ளேன்: ஏனெனில் இறைவா, நீர் என் பாதுகாப்பு அரண்.
சங்கீதம் 59 : 10 (RCTA)
என் இறைவனே, என்மீது இரங்குபவர்: என் எதிரிகள்மீது வெற்றிகொண்டு மகிழ எனக்கு அருள்வாராக.
சங்கீதம் 59 : 11 (RCTA)
என் மக்களுக்கு அவர்கள் இடறலாகாதபடி இறைவனே, அவர்களைக் கொன்றுவிடும்; உமது வலிமையால் அவர்களைக் கலங்கடித்து விடும்: எங்கள் கேடயமாகிய ஆண்டவரே, அவர்களைத் தாழ்த்திவிடும்.
சங்கீதம் 59 : 12 (RCTA)
பாவமே அவர்கள் பேசும் சொற்கள், பாவமே அவர்கள் நாவினின்றெழும் பேச்சு: தங்கள் தற்பெருமையிலும் பேசும் சாபனைகளிலும் பொய் வார்த்தைகளிலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்களாக.
சங்கீதம் 59 : 13 (RCTA)
சினங்கொண்டு அவர்களை அழித்து விடும்; இனி அவர்கள் இராதபடி ஒழித்து விடும்: யாக்கோபின் இனத்தாரிடையிலும் பூவுலகெங்கும் ஆள்பவர் கடவுளே என்று அனைவரும் அறிவார்களாக.
சங்கீதம் 59 : 14 (RCTA)
மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்: நாய்களைப் போல் உறுமுகின்றனர், ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
சங்கீதம் 59 : 15 (RCTA)
இரையைத் தேடி அலைகின்றனர்: உணவு கிடைக்காவிட்டால் ஊளையிடுகின்றனர்.
சங்கீதம் 59 : 16 (RCTA)
நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.
சங்கீதம் 59 : 17 (RCTA)
எனக்கு வலிமையானவரே, உமக்குப் புகழ் பாடுவேன்: ஏனெனில் இறைவனே, நீரே எனக்குப் பாதுகாப்பு அரண்; என் இறைவனே, என் மீது இரங்குபவர் நீரே!
❮
❯