சங்கீதம் 58 : 1 (RCTA)
அதிகாரம் படைத்தவர்களே, நீங்கள் மெய்யாகவா நீதித் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள்? மனுமக்களே, நீங்கள் நியாயமாகவா தீர்ப்புக் கூறுகிறீர்கள்?
சங்கீதம் 58 : 2 (RCTA)
மாறாக நீங்கள் மனமாரக் கேடு செய்கிறீர்கள்: பூவுலகில் அநீதி புரிவதே உங்கள் வேலையாயுள்ளது.
சங்கீதம் 58 : 3 (RCTA)
தீயவர்கள் தாயின் வயிற்றிலிருந்தே நெறி தவறிச் செல்கின்றனர்: பொய்யர்கள் பிறப்பிலிருந்தே வழிதவறிச் செல்கின்றனர்.
சங்கீதம் 58 : 4 (RCTA)
பாம்பின் நஞ்சு போன்றது அவர்களிடத்திலுள்ள நஞ்சு: தன் காதை அடைத்துக் கொள்ளும் செவிட்டு விரியன் பாம்பின் நஞ்சை போன்றது அவர்கள் உள்ளத்திலுள்ள நஞ்சு.
சங்கீதம் 58 : 5 (RCTA)
பாம்பாட்டியின் குரலை அது கேட்க விரும்புவதில்லை: திறமையுடன் அவன் மகுடி ஊதினாலும் அதன் செவியில் விழுவதில்லை.
சங்கீதம் 58 : 6 (RCTA)
கடவுளே, அவர்கள் வாயிலுள்ள பற்களை உடைத்தெறியும்: ஆண்டவரே, அந்தச் சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை நொறுக்கி விடும்.
சங்கீதம் 58 : 7 (RCTA)
ஓடி மறைந்து விடும் தண்ணீர் போல அவர்கள் சிதறிப் போவார்களாக: தங்கள் அம்புகளை அவர்கள் தொடுக்கும் போது அவை கூர்மையற்றுப் போகட்டும்.
சங்கீதம் 58 : 8 (RCTA)
கரைந்து ஓடுகிற நத்தையைப் போல் அவர்கள் உருகிப் போவார்களாக: தாயின் வயிற்றிலேயே பிறக்காமல் சிதைந்தழியும் கருவைப் போல ஒழிவார்களாக.
சங்கீதம் 58 : 9 (RCTA)
அடுப்பில் போட்டு எரிவதற்கு முன்பே, பச்சையாயிருக்கும் போதே, சுழற்காற்றினால், அடிபட்டுப் போகும் முட்புதர் போல் ஆவார்களாக.
சங்கீதம் 58 : 10 (RCTA)
இப்படி நீர் பழிவாங்குவதைக் காணும் போது, நீதிமான் அகமகிழ்வான் தீயவரின் இரத்தத்தில் தன் பாதங்களைக் கழுவுவான்.
சங்கீதம் 58 : 11 (RCTA)
அப்போது மனிதர்கள்: "உண்மையிலேயே நீதிமானுக்குக் கைம்மாறு உண்டு. மெய்யாகவே பூவுலகில் நீதி வழங்கும் கடவுள் இருக்கிறார்" என்று சொல்வார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

BG:

Opacity:

Color:


Size:


Font: