சங்கீதம் 55 : 1 (RCTA)
இறைவா, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பத்தின் மட்டில் பாராமுகமாயிராதேயும்.
சங்கீதம் 55 : 2 (RCTA)
என் செபத்தை ஏற்றுக்கொண்டு, நான் கேட்பதைத் தந்தருளும்.
சங்கீதம் 55 : 3 (RCTA)
எனக்குற்ற துயரத்தால் நான் கலங்குகிறேன்: எதிரியின் குரலும், பாவியின் இரைச்சலும் கேட்டு நான் பெரிதும் அவதியுறுகிறேன். அவர்கள் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்: வெகுண்டெழுந்து என்னைத் தாக்குகின்றனர்.
சங்கீதம் 55 : 4 (RCTA)
என் இதயமோ எனக்குள் கலக்கம் அடைந்துள்ளது. சாவானோ என்ற அச்சம் என்னை மேற்கொண்டுள்ளது.
சங்கீதம் 55 : 5 (RCTA)
அச்சமும் திகிலும் என்னை மேற்கொண்டன: நடுக்கம் என்னை முற்றிலும் ஆட்கொண்டது.
சங்கீதம் 55 : 6 (RCTA)
புறாவைப்போல் எனக்குச் சிறகுகள் இல்லையே! இருந்தால் பறந்து போய் அமைதியடைந்திருப்பேனே!" என்று சொல்லிக் கொண்டேன்.
சங்கீதம் 55 : 7 (RCTA)
வெகு தொலைவு போயிருப்பேன்: பாலை வெளியில் தங்கியிருப்பேன்.
சங்கீதம் 55 : 8 (RCTA)
புயலினின்றும் பெருங் காற்றினின்றும் வெகு விரைவில் புகலிடம் தேடியிருப்பேன்.
சங்கீதம் 55 : 9 (RCTA)
ஆண்டவரே, அவர்களுடைய மொழிகளைக் கலங்கடித்து, குழப்பம் உண்டாகச் செய்யும்: ஏனெனில், நகரத்தில் வன்முறையும் கலகமும் காண்கிறேன்.
சங்கீதம் 55 : 10 (RCTA)
இரவும் பகலும் அவைகள் அதன் மதில்களைச் சுற்றி வருகின்றன. அதன் நடுவே தீச் செயல்களும் அடக்கு முறையும் தான் உள்ளன.
சங்கீதம் 55 : 11 (RCTA)
அதன் நடுவே சதிச் செயல்களும் உள்ளன. தீமையும் வஞ்சகமும் அதன் தெருக்களை விட்டுப் போகவேயில்லை.
சங்கீதம் 55 : 12 (RCTA)
என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்: என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்தால், அவனிடமிருந்து தப்பியோடி ஒளிந்திருப்பேன்.
சங்கீதம் 55 : 13 (RCTA)
ஆனால் என் தோழன் நீயே! என் நண்பனும் என் உயிர்த்தோழனுமான நீயே என்னை எதிர்த்தாய்!
சங்கீதம் 55 : 14 (RCTA)
உன்னோடு இனிய நட்புறவு கொண்டிருந்தேனே! விழாக் கூட்டத்தில் இறைவனின் இல்லத்தில் நாம் ஒன்றாய் இருந்தோமே!
சங்கீதம் 55 : 15 (RCTA)
மரணம் அவர்கள் மேல் வந்து விழுவதாக; உயிரோடு அவர்கள் கீழுலகுக்குச் செல்வார்களாக: ஏனெனில், அக்கிரமம் அவர்கள் இல்லங்களில் அவர்களிடையே இருக்கின்றது.
சங்கீதம் 55 : 16 (RCTA)
நானோவெனில் கடவுளை நோக்கிக் கூவுவேன்; ஆண்டவர் என்னை மீட்டுக் கொள்வார்.
சங்கீதம் 55 : 17 (RCTA)
காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் புலம்புகிறேன்; பெருமூச்சு விடுகிறேன்: அவர் என் குரலுக்குச் செவிசாய்ப்பார்.
சங்கீதம் 55 : 18 (RCTA)
எனக்கெதிராய் உள்ளவர் பலராயினர்: என்னைத் துன்புறுத்தும் இவர்கள் கையினின்று அவர் என் ஆன்மாவை மீட்டு, அமைதி நிலவும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.
சங்கீதம் 55 : 19 (RCTA)
என்றென்றும் ஆட்சி செய்பவரான கடவுள் எனக்குச் செவிசாய்த்து அவர்களை ஒடுக்கி விடுவார்: ஏனெனில், அவர்கள் மனமாற்றம் அடையார், கடவுளுக்கு அஞ்சார்.
சங்கீதம் 55 : 20 (RCTA)
ஒவ்வொருவனும் தனக்கு அறிமுகமானவர்களுக்கெதிராகக் கை நீட்டுகின்றான்: தான் செய்த உடன்படிக்கையை மீறுகின்றான்.
சங்கீதம் 55 : 21 (RCTA)
அவன் பேச்சு வெண்ணெயை விட மிருதுவாயுள்ளது: அவன் நெஞ்சமோ போர் மனம் படைத்தது. அவன் சொற்கள் எண்ணெயை விட இனிமையாயுள்ளது: ஆனால் ஓங்கிய வாள் போன்றவை.
சங்கீதம் 55 : 22 (RCTA)
ஆண்டவர் மீது உன் கவலையைப் போட்டு விடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமான் என்றும் நிலைகலங்க விடமாட்டார்.
சங்கீதம் 55 : 23 (RCTA)
இறைவா, நீர் அவர்களை அழிவுப் பாதாளத்தில் விழச்செய்வீர்; இரத்த வெறியர்களும் வஞ்சகர்களும் தம் வாழ்நாளில் பாதியும் காணமாட்டார்கள்: நானோவெனில், ஆண்டவரே, உம்மையே நம்புகிறேன்.
❮
❯