சங்கீதம் 49 : 1 (RCTA)
மக்கள் இனங்களே, நீங்களனைவரும் நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள்: புவி மீது வாழ்வோரே, நீங்களனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.
சங்கீதம் 49 : 2 (RCTA)
தாழ்ந்தோர் உயர்ந்தோர் பணக்காரர் ஏழைகள், நீங்கள் அனைவரும் இதற்குச் செவி கொடுங்கள்.
சங்கீதம் 49 : 3 (RCTA)
என் வாய் ஞானத்தை உரைக்கும்: என் உள்ளத்தின் தியானத்தால் அறிவு எழும்.
சங்கீதம் 49 : 4 (RCTA)
உவமை மொழிக்கு நான் செவிசாய்ப்பேன்: சுரமண்டலத்தின் இன்னிசைக்குப் பொருந்த என் மறைபொருளைக் கூறுவேன்.
சங்கீதம் 49 : 5 (RCTA)
துன்ப மிகு நாளில் நான் அஞ்ச வேண்டுவதேன்? என்னைத் துன்புறுத்துவோர் செய்யும் அக்கிரமம் என்னைச் சூழும் போது, நான் ஏன் அஞ்ச வேண்டும்?
சங்கீதம் 49 : 6 (RCTA)
தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைப்போருக்கும், தம் செல்வப் பெருக்கை நினைத்துப் பெருமைப் படுவோருக்கும், நான் அஞ்ச வேண்டுவதேன்?
சங்கீதம் 49 : 7 (RCTA)
தன்னைத்தானே விடுவித்துக் கொள்பவன் ஒருவனுமில்லை; தன் மீட்புக்குரிய விலையைக் கடவுளுக்குத் தர யாராலும் இயலாது.
சங்கீதம் 49 : 8 (RCTA)
அந்த மீட்புக்குரிய விலை மிக உயர்ந்தது.
சங்கீதம் 49 : 9 (RCTA)
சாவைக் காணாததும் என்றென்றும் நீடிப்பதுமான வாழ்வை வாங்கிக்கொள்ள, எத்தொகையும் போதவே போதாது.
சங்கீதம் 49 : 10 (RCTA)
ஞானிகள் கூட இறப்பதைக் காணலாம்; அப்படியே ஞானமற்றவர்களும் அறிவீனர்களும் இறந்தொழிவதைக் காணலாம்: தம் செல்வத்தை அந்நியருக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
சங்கீதம் 49 : 11 (RCTA)
கல்லறைகளே அவர்களுக்கு நிலையான இல்லங்கள்; தலைமுறையாக அவர்களுக்கு உள்ள குடியிருப்புகள் அவையே: தங்கள் பெயரில் எவ்வளவு நில புலம் கொண்டிருந்தாலும் இதுவே அவர்கள் கதி.
சங்கீதம் 49 : 12 (RCTA)
ஏனெனில், தன் செல்வ நிலையில் மனிதன் நிலைத்திருப்பதில்லை; செத்தொழியும் விலங்குகளுக்கு அவன் ஒப்பாவான்.
சங்கீதம் 49 : 13 (RCTA)
மூடத்தனமான நம்பிக்கையுள்ளவர்கள் கதி இதுவே: தங்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் கதி இதுவே.
சங்கீதம் 49 : 14 (RCTA)
கீழுலகில் அவர்கள் ஆடுகளைப் போல அடைபடுவர்: சாவே அவர்களுக்கு மேய்ப்பன். நீதிமான்கள் அவர்கள் மேல் தோற்றம் மறைந்தொழியும், கீழுலகே அவர்கள் இருப்பிடமாகும்.
சங்கீதம் 49 : 15 (RCTA)
எனினும், கடவுள் என்னைக் கீழுலகினின்று விடுவிப்பார்: என்னை அவர் ஏற்றுக் கொள்வார்.
சங்கீதம் 49 : 16 (RCTA)
ஒருவன் பணக்காரனானால் அவனைக் கண்டு அஞ்சவேண்டாம்: அவன் குடும்பச் செல்வம் பெருகினால் அஞ்சவேண்டாம்.
சங்கீதம் 49 : 17 (RCTA)
அவன் சாகும் பொழுது தன்னோடு எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை: அவளுடைய சொத்து அவனோடு போவதில்லை.
சங்கீதம் 49 : 18 (RCTA)
நிம்மதியான வாழ்வு உனக்குக் கிடைத்ததென பிறர் புகழ்வர்" என்று வாழ்நாளில் அவன் தன்னைப் பாராட்டிக் கொண்டாலும்,
சங்கீதம் 49 : 19 (RCTA)
தன் முன்னோர்கள் போன இடத்திற்கே அவனும் போவான்: அவர்கள் எந்நாளும் ஒளியைக் காணப்போவதில்லை.
சங்கீதம் 49 : 20 (RCTA)
ஏனெனில், செல்வம் கொண்டு வாழ்பவன் தன் நிலையை அறியாவிடில், செத்தொழியும் விலங்குகளுக்கு ஒப்பாவான்.
❮
❯