சங்கீதம் 45 : 1 (RCTA)
இனிய கருத்தொன்றைப் பேச என் நெஞ்சம் துடிக்கிறது, என் பாடலை நான் அரசரிடம் கூறுகிறேன்: தயங்காமல் எழுதுவோனின் எழுது கோல் போலுள்ளது என் நாவு
சங்கீதம் 45 : 2 (RCTA)
மனுமக்கள் அனைவரிலும் நீர் எழில் மிக்கவர்; உம் பேச்சில் அருள் விளங்கும்: ஆகவே கடவுள் உம்மை என்றென்றும் ஆசீர்வதித்தார்.
சங்கீதம் 45 : 3 (RCTA)
வீரம் மிகுந்தவரே, உம் பட்டயத்தை இடையில் செருகிக்கொள்ளும்: அதுவே உமக்கு மாண்பும் எழிலும் தரும்.
சங்கீதம் 45 : 4 (RCTA)
உண்மைக்காவும் நீதிக்காவும் போரிடக் கிளம்பி வாரும்: வலக்கரம் உம் அரிய செயல்களை விளங்கச் செய்வதாக.
சங்கீதம் 45 : 5 (RCTA)
உம் அம்புகள் கூர்மையானவை, மக்கள் உமக்குப் பணிகின்றனர்: அரசரின் எதிரிகள் கதிகலங்கி வீழ்கின்றனர்.
சங்கீதம் 45 : 6 (RCTA)
இறைவா, உமது அரியணை என்றென்றும் உள்ளது: உமது ஆட்சிச் செங்கோல் நேரியது.
சங்கீதம் 45 : 7 (RCTA)
நீதியை விரும்புகின்றீர், அக்கிரமத்தை வெறுக்கின்றீர்: ஆகவே கடவுள், உம் கடவுள் உம் தோழர்களை விட மேலாக உம்மை மகிழ்ச்சித் தைலத்தால் அபிஷுகம் செய்தார்.
சங்கீதம் 45 : 8 (RCTA)
நீர் அணிந்துள்ள ஆடைகளில் வெள்ளைப் போளம், சந்தனம், இலவங்கத்தின் நறுமணம் வீசுகின்றது: தந்த மாளிகையினின்று எழும் யாழின் ஓசை உமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.
சங்கீதம் 45 : 9 (RCTA)
அரசிளம் பெண்கள் உம்மை எதிர்கொண்டு வரவேற்கின்றனர்: ஒபீர் தங்க அணிகள் அணிந்து உம் அரசி உம் வலப்புறம் நிற்கிறார்.
சங்கீதம் 45 : 10 (RCTA)
மகளே, நான் சொல்வது கேள். நினைத்துப் பார், இதற்குச் செவிசாய்: உன் இனத்தாரையும் வீட்டாரையும் மறந்து விடு.
சங்கீதம் 45 : 11 (RCTA)
அரசர் உன் பேரழிலை விரும்புவார். அவரே உன் தலைவர், அவருக்குத் தலை வணங்கு.
சங்கீதம் 45 : 12 (RCTA)
தீர் நாட்டு மக்கள் காணிக்கைகள் ஏந்தி வருகின்றனர். மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்.
சங்கீதம் 45 : 13 (RCTA)
அரசனின் மகள் எழில் மிக்கவளாய் இதோ வருகின்றாள்: பொன் இழை ஆடையை அவள் அணிந்துள்ளாள்.
சங்கீதம் 45 : 14 (RCTA)
பன்னிற ஆடையை அணிந்தவளாய் அவள் அரசரிடம் அழைத்து வரப்படுகின்றாள்: இளத்தோழியரும் அவளோடு உம்மிடம் வருகின்றனர்.
சங்கீதம் 45 : 15 (RCTA)
மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்: அரச மாளிகையில் அவர்கள் இதோ நுழைகின்றனர்.
சங்கீதம் 45 : 16 (RCTA)
உன் முன்னோருக்குப் பதிலாக உனக்குப் புதல்வர்கள் இருப்பர்: மாநிலமனைத்திற்கும் அவர்களை நீ தலைவர்களாக்குவாய்.
சங்கீதம் 45 : 17 (RCTA)
தலைமுறை தலைமுறையாய் உமது பெயரை நான் நினைவு கூர்வேன், என்றென்றும் மக்களினத்தார் உம்மைக் கொண்டாடுவர்.
❮
❯