சங்கீதம் 44 : 1 (RCTA)
இறைவா, நாங்கள் எம் செவியாலே கேள்வியுற்றோம்; எங்கள் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தனர்: முற்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாளில் நீர் செய்த செயலை எங்களுக்கு எடுத்துரைத்தனர்.
சங்கீதம் 44 : 2 (RCTA)
நீர் உம் வல்லமையால் புற இனத்தாரை விரட்டி எங்கள் முன்னோரை நிலைபெறச் செய்தீர்: பல நாடுகளை ஒடுக்கி அவர்கள் ஓங்கச் செய்தீர்.
சங்கீதம் 44 : 3 (RCTA)
எங்கள் முன்னோர் நாட்டைக் கைப்பற்றியது தங்கள் வாளின் வலிமையால் அன்று, அவர்களுக்கு மீட்பு கிடைத்தது தங்கள் கைவன்மையால் அன்று: உமது வலக்கரமும் உமது புயப்பலமும், உம் முகத்தினின்று எழுந்த பேரொளியுமே அவர்களுக்குத் துணை நின்றது; ஏனெனின், நீர் அவர்கள் மீது அன்பு கூர்ந்தீர்.
சங்கீதம் 44 : 4 (RCTA)
நீரே என் அரசர், நீரே என் இறைவன்: யாக்கோபின் இனத்தாருக்கு வெற்றி அளித்தவர் நீரே.
சங்கீதம் 44 : 5 (RCTA)
எங்கள் எதிரிகளை உம் துணையால் விரட்டியடித்தோம்: எங்களை எதிர்த்து நின்றவர்களை உமது பெயரால் நசுக்கி விட்டோம்.
சங்கீதம் 44 : 6 (RCTA)
என் வில்லின் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை: எனக்கு மீட்பளித்தது என் வாள் அன்று.
சங்கீதம் 44 : 7 (RCTA)
எதிரிகளினின்று எமக்கு மீட்பளித்தவர் நீரே: எங்கள் பகைவர்களைச் சிதறடித்தவர் நீரே.
சங்கீதம் 44 : 8 (RCTA)
எந்நாளும் கடவுளை நினைத்துப் பெருமை கொண்டோம்: உமது பெயரை எந்நேரமும் போற்றிப் புகழ்ந்தோம்.
சங்கீதம் 44 : 9 (RCTA)
இப்போதோ நீர் எங்களைப் புறக்கணித்து விட்டீர்; எங்களைக் கலங்கடித்தீர்: கடவுளே, நீர் எங்கள் சேனையோடு புறப்பட்டு வரவில்லை.
சங்கீதம் 44 : 10 (RCTA)
எங்கள் எதிரிகள் முன் நாங்கள் பின்னடையச் செய்தீர்: எங்கள் பகைவர்கள் எங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.
சங்கீதம் 44 : 11 (RCTA)
கொல்லப்படும் ஆடுகள் போல எங்களைக் கையளித்தீர்: புற இனத்தாரிடையே எங்களைச் சிதறடித்தீர்.
சங்கீதம் 44 : 12 (RCTA)
விலை எதுவுமின்றி உம் மக்களை விற்று விட்டீர்: அவர்களை விற்றதால் உமக்குக் கிடைத்த பயனோ ஒன்றுமில்லை.
சங்கீதம் 44 : 13 (RCTA)
எங்கள் அயலாருடைய நிந்தனைக்கு நீர் எங்களை ஆளாக்கினீர்: எங்களைச் சூழ்ந்துள்ள மக்களின் ஏளனத்துக்கும் பழிப்புக்கும் எங்களை உட்படுத்தினீர்.
சங்கீதம் 44 : 14 (RCTA)
புற இனத்தாரிடையே எங்களை ஒரு பழிச் சொல்லாக்கினீர்: மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைக்கின்றனர்.
சங்கீதம் 44 : 15 (RCTA)
எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது.
சங்கீதம் 44 : 16 (RCTA)
என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும் போது, என் எதிரியையும் பகைவனையும் நான் பார்க்கும் போது வெட்கிப் போகிறேன்.
சங்கீதம் 44 : 17 (RCTA)
நாங்களும்மை மறக்காவிடினும் உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்கள் மீது வந்து விழுந்தன.
சங்கீதம் 44 : 18 (RCTA)
எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை: நீர் காட்டிய வழியினின்று விலகி நாங்கள் அடியெடுத்து வைக்கவில்லை.
சங்கீதம் 44 : 19 (RCTA)
எனினும் துயர் மிக்க இடத்தில் எங்களை நொறுக்கி விட்டீர்: எங்கள் மீது இருள் கவியச் செய்தீர்.
சங்கீதம் 44 : 20 (RCTA)
இறைவன் பெயரை நாங்கள் மறந்திருந்தால், வேறு தெய்வங்களை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டிருந்தால்,
சங்கீதம் 44 : 21 (RCTA)
இது கடவுளுக்குத் தெரியாமலா போகும்? உள்ளத்தின் ஆழத்தை அவர் அறிந்தவரன்றோ!
சங்கீதம் 44 : 22 (RCTA)
எனினும் நாளெல்லாம் உமக்காக நாங்கள் கொல்லப்படுகிறோம்; கசாப்புக்குச் செல்லும் ஆடுகளெனக் கருதப்படுகிறோம்.
சங்கீதம் 44 : 23 (RCTA)
ஆண்டவரே, துயிலெழும், ஏன் உறங்குகிறீர்? விழித்தெழும், எங்களை ஒருபோதும் தள்ளி விடாதேயும்.
சங்கீதம் 44 : 24 (RCTA)
ஏன் உமது முகத்தை மறைத்துக் கொள்கிறீர்? நாங்கள் உறும் சிறுமையையும் துன்ப நிலையையும் ஏன் மறந்துவிட்டீர்?
சங்கீதம் 44 : 25 (RCTA)
நாங்கள் முகங்குப்புற விழுந்து விட்டோம்: தரையோடு தரையாய்க் கிடக்கிறோம்.
சங்கீதம் 44 : 26 (RCTA)
எங்களுக்குத் துணை செய்ய எழுந்தருளும்: உமது இரக்கத்தை முன்னிட்டு விடுதலையளித்தருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26