சங்கீதம் 42 : 1 (RCTA)
கலைமான் நீரோடைகளை ஆர்வமுடன் நாடிச் செல்வது போல், இறைவா, என் நெஞ்சம் உம்மை ஆர்வத்துடன் நாடிச் செல்கிறது.
சங்கீதம் 42 : 2 (RCTA)
இறைவன் மீது, உயிருள்ள இறைவன் மீது என் உள்ளம் தாகங்கொண்டது. என்று சொல்வேன்? இறைவனின் முகத்தை என்று காண்பேன்?
சங்கீதம் 42 : 3 (RCTA)
உன் இறைவன் எங்கே?" என்று அவர்கள் நாளும் என்னிடம் சொல்லும் போது, என் கண்ணீரே எனக்கு இரவும் பகலும் உணவாயிற்று.
சங்கீதம் 42 : 4 (RCTA)
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு இறைவனின் இல்லத்திற்குச் சென்றேனே! அக்களிப்பும் புகழ் இசையும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும் போது என் உள்ளம் உருகுகிறது.
சங்கீதம் 42 : 5 (RCTA)
நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை. என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.
சங்கீதம் 42 : 6 (RCTA)
என் அகத்தே என் உள்ளம் தளர்ச்சியுறுகிறது. ஆகவே யோர்தான் நாட்டினின்றும், ஹெர்மோன், மீசார் மலைகளிலிருந்தும் உம்மை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
சங்கீதம் 42 : 7 (RCTA)
உம் நீர் வீழ்ச்சிகளின் இரைச்சலால் ஆழம் ஆழத்தை அழைக்கிறது. உம் அலைகள், கடற்திரைகள் எல்லாம் என் மேல் விழுந்தன.
சங்கீதம் 42 : 8 (RCTA)
பகற்பொழுதில் ஆண்டவர் எனக்கு அருள் புரிவாராக: இரவிலும் இறைவனுக்கு இன்னிசை பாடுவேன், உயிர் தரும் இறைவனைப் புகழ்வேன்.
சங்கீதம் 42 : 9 (RCTA)
என் பாறை அரணாயிருப்பவரே, ஏன் என்னை மறந்தீர்? என் எதிரியால் நொறுங்குண்டவனாய் வருத்தமுற்று நான் அலைவானேன்?' என்று இறைவனிடம் கூறுவேன்.
சங்கீதம் 42 : 10 (RCTA)
என் எதிரிகள் என்னைப் பழித்துரைக்கும் போதும், 'உன் இறைவன் எங்கே?' என்று நாளும் கூறும் போதும், என் எலும்புகள் நொறுங்குண்டு போகின்றன.
சங்கீதம் 42 : 11 (RCTA)
என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகின்றாய்? இறைவன்மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் கடவுளை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11