சங்கீதம் 31 : 1 (RCTA)
ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன், நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்: உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 31 : 2 (RCTA)
என் பக்கம் செவிசாய்த்தருளும், என்னை விடுவிக்க விரைந்தருளும்; எனக்கு அடைக்கலந்தரும் பாறையாயிரும்: கோட்டை போலிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 31 : 3 (RCTA)
ஏனெனில், நீர் எனக்குக் கற்கோட்டையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்: உம் பெயரின் பொருட்டு என்னை வழி நடத்தியருள்வீர், நல்வழி காட்டுவீர்.
சங்கீதம் 31 : 4 (RCTA)
என்னைப் பிடிக்க மறைவாக விரித்துள்ள கண்ணியினின்று என்னைத் தப்புவித்தருள்வீர்: ஏனெனில், நீர் எனக்கு அடைக்கலமாயுள்ளீர்.
சங்கீதம் 31 : 5 (RCTA)
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்: ஆண்டவரே, வார்த்தையில் தவறாத இறைவா, நீர் என்னை மீட்டருள்வீர்.
சங்கீதம் 31 : 6 (RCTA)
வெறும் சிலைகளை வணங்குகிறவர்களை நீர் வெறுக்கிறீர்: நானோ ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறேன்.
சங்கீதம் 31 : 7 (RCTA)
உம் அருளன்பை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: ஏனெனில், துயர் மிக்க என் நிலையப் பார்த்து என் நெருக்கடியில் எனக்கு உதவி செய்தீர்.
சங்கீதம் 31 : 8 (RCTA)
எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை: எதிரியின் நெருக்கடியில்லாத இடத்தில் என்னை நிலை நிறுத்தினீர்.
சங்கீதம் 31 : 9 (RCTA)
ஆண்டவரே, என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் துன்ப நெருக்கடியில் அகப்பட்டிருக்கிறேன்: என் கண்கள் வருத்தத்தால் பலவீனமடைகின்றன, என் உயிரும் உடலும் அப்படியே.
சங்கீதம் 31 : 10 (RCTA)
வருத்ததிலேயே என் வாழ்நாள் கடந்துசெல்கின்றது; பெருமூச்சு விடுதலே என் வாழ்க்கையாயிருக்கின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது, என் எலும்புகளும் தேய்ந்து போகின்றன.
சங்கீதம் 31 : 11 (RCTA)
என் எதிரிகள் அனைவருடையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்; என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்: எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவனானேன்; வெளியே என்னைக் காண்கின்றவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்.
சங்கீதம் 31 : 12 (RCTA)
இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்: உடைந்துபோன மட்கலத்தைப் போலானேன்.
சங்கீதம் 31 : 13 (RCTA)
பலர் என்னை இழித்துப் பேசுவது என்காதில் விழுந்தது; எப்பக்கமும் அச்சம் என்னைச் சூழ்கிறது: பலரும் எனக்கெதிராய்ச் சதிசெய்து என் உயிரைப் பறிக்க எண்ணினர்.
சங்கீதம் 31 : 14 (RCTA)
ஆனால் ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்: 'நீரே என் கடவுள்' என்றேன்.
சங்கீதம் 31 : 15 (RCTA)
என் கதி உம் கையில் உள்ளது: என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 31 : 16 (RCTA)
கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்: உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்.
சங்கீதம் 31 : 17 (RCTA)
ஆண்டவரே, உம்மைக் கூவியழைத்தேன், நான் ஏமாற்றமடைய விடாதேயும்: தீயோர் ஏமாற்றமடைவார்களாக, கீழுலகில் விழுந்து வாயடைத்துப் போவார்களாக.
சங்கீதம் 31 : 18 (RCTA)
பொய் சொல்லும் வாய் பேச்சற்றுப் போவதாக: செருக்கும் புறக்கணிப்பும் கொண்டு நீதிமானுக்கு எதிராக ஆணவச் சொல் பேசும் நாவு அசைவற்றுப் போவதாக.
சங்கீதம் 31 : 19 (RCTA)
ஆண்டவரே, உம்மை அஞ்சுவோர்க்கு நீர் சேர்த்து வைத்திருக்கும் அருள் எத்துணை மிக்கது!
சங்கீதம் 31 : 20 (RCTA)
உம்மை நாடி வருவோர்க்கு அனைவர் முன்னிலையிலும் நீர் காட்டும் அருள் எத்துணை மிகுதியானது! எதிரிகளுடைய சதிகளினின்று உம்முடைய திருமுகத்தின் ஆதரவால் அவர்களைப் பாதுகாக்கின்றீர்: தீ நாவுகளுடைய பேச்சுக்கு இரையாகாதபடி அவர்களை உம் கூடாரத்தில் ஒளித்துக் காக்கின்றீர்.
சங்கீதம் 31 : 21 (RCTA)
ஆண்டவர் வாழ்த்துப் பெறுவாராக: ஏனெனில், அரண்கொண்ட நகரத்தில் என் மீது தம் வியப்புக்குரிய இரக்கத்தைக் காட்டியுள்ளார்.
சங்கீதம் 31 : 22 (RCTA)
நானோ, "உம் திருமுன்னிலையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன்!" என்று அச்சம் மேலிட்டவனாய்ச் சொல்லலானேன்: நீரோ என் வேண்டுதலின் குரலைக் கேட்கலானீர்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட போது எனக்குச் செவிகொடுத்தீர்.
சங்கீதம் 31 : 23 (RCTA)
ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அன்பு காட்டுங்கள்: விசுவாசமுள்ளவர்களை ஆண்டவர் பாதுகாக்கிறார்; செருக்குற்று நடப்பவர்களுக்கு அவர் நிறைவான தண்டனை அளிக்கின்றார்.
சங்கீதம் 31 : 24 (RCTA)
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே, மனத்திடன் கொள்ளுங்கள்: உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்.
❮
❯