சங்கீதம் 28 : 1 (RCTA)
ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்; என் பாறை அரணே! என் குரல் உமது செவியில் விழுவதாக! என் குரலுக்கு நீர் செவிசாய்க்கவில்லையேல், படுகுழியில் செல்வோருக்கு ஒப்பாவேன் நான்.
சங்கீதம் 28 : 2 (RCTA)
உம்மை நோக்கி நான் கூவுகையில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளும்: உமது ஆலயத் தூயகத்தை நோக்கி என் கைகளை நான் உயர்த்தும் போது, என் குரலைக் கேட்டருளும்.
சங்கீதம் 28 : 3 (RCTA)
பாவிகளோடு என்னை ஒழித்துவிடாதேயும்; தீமை செய்பவர்களோடு என்னைத் தொலைத்து விடாதேயும்: அவர்கள் அயலாரோடு சமாதானப் பேச்சு நிகழ்த்துவார்கள்; ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருப்பவை தீய எண்ணங்களே.
சங்கீதம் 28 : 4 (RCTA)
அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குக் கூலி கொடும்; அவர்களுடைய செயல்களின் தீமைக்கு ஏற்றவாறு அவர்களைத் தண்டியும்: அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பலனளியும்; தங்கள் செயல்களின் பயனை அவர்கள் அடையச் செய்யும்.
சங்கீதம் 28 : 5 (RCTA)
ஏனெனில், ஆண்டவருடைய செயல்களை அவர்கள் கவனிப்பதில்லை, அவருடைய கைவேலையை நினைப்பதில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஒழித்து விடுவாராக, மீளவும் எழும்பாதபடி செய்வாராக.
சங்கீதம் 28 : 6 (RCTA)
ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக: ஏனெனில், என் வேண்டுதலின் குரலைக் கேட்டருளினார்.
சங்கீதம் 28 : 7 (RCTA)
ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாயிருக்கிறார்; என் இதயம் அவர் மீது நம்பிக்கை கொண்டது: எனக்குதவி கிடைத்தது; ஆகவே, என் இதயம் அக்களிக்கின்றது, இன்னிசை பாடி அவரைப் புகழ்கின்றேன்.
சங்கீதம் 28 : 8 (RCTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமை ஆவார்: தம்மால் அபிஷுகம் பெற்றவருக்கு மீட்புத்தரும் பாதுகாப்பும் அவரே.
சங்கீதம் 28 : 9 (RCTA)
ஆண்டவரே, உம் மக்களைக் காத்தருளும், உம் உரிமைப் பொருளான அவர்களுக்கு ஆசி அளித்தருளும்: மேய்ப்பனாக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக் கொள்ளும்.
❮
❯