சங்கீதம் 138 : 1 (RCTA)
ஆண்டவரே, என் முழு மனத்துடன் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: ஏனெனில் நான் வாய் திறந்து உம்மிடம் சொன்னதைக் கேட்டருளினீர்; வான் தூதர் முன்னிலையில் உமக்குப் புகழ் பாடுவேன்.
சங்கீதம் 138 : 2 (RCTA)
உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்; உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்; ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
சங்கீதம் 138 : 3 (RCTA)
நான் உம்மைக் கூவியழைத்த நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: என் ஆன்மாவுக்கு மேன் மேலும் வலிமை தந்தருளினீர்.
சங்கீதம் 138 : 4 (RCTA)
ஆண்டவரே, நீர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளை உலகின் அரசர் அனைவரும் கேட்டு, உம்மைப் போற்றுவார்கள்.
சங்கீதம் 138 : 5 (RCTA)
ஆண்டவருடைய மகிமை உண்மையில் உன்னதமானது' என்று அவர்கள் ஆண்டவருடைய வழிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்கள்.
சங்கீதம் 138 : 6 (RCTA)
ஆண்டவர் உண்மையாகவே உன்னதமானவர் எனினும், எளியவரைக் கண்நோக்குகின்றார்: செருக்குற்றோரையோ வெகு தொலைவிலிருந்து காண்கிறார்.
சங்கீதம் 138 : 7 (RCTA)
நான் துன்பத்திடையே நடந்தாலும் என் உயிரைக் காப்பீர்: என் எதிரிகளின் சினத்துக்கு விரோதமாக உமது கரத்தை நீட்டினீர்; உமது வலக்கரம் என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 138 : 8 (RCTA)
ஆண்டவர் தாம் தொடங்கிய வேலையை எனக்கெனச் செய்து முடிப்பார்: ஆண்டவரே, உமது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது; உம் படைப்புகளைக் கைவிடாதேயும்.
❮
❯