சங்கீதம் 109 : 1 (RCTA)
என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாயிராதீர்.
சங்கீதம் 109 : 2 (RCTA)
தீயவரும் வஞ்சகரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசினர்.
சங்கீதம் 109 : 3 (RCTA)
பகை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்: காரணமெதுவுமின்றி என்னை வதைத்தனர்.
சங்கீதம் 109 : 4 (RCTA)
நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.
சங்கீதம் 109 : 5 (RCTA)
நன்மைக்குப் பதிலாக அவர்களெனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் பகைமையே காட்டினர்.
சங்கீதம் 109 : 6 (RCTA)
அவனுக்கெதிராகத் தீயவனைத் தூண்டிவிடும்: அவனை அவன் குற்றம் சாட்டுவானாக.
சங்கீதம் 109 : 7 (RCTA)
நியாயம் விசாரிக்கையில் அவன் தண்டனைக்குள்ளாகட்டும்: அவன் செய்யும் வேண்டுகோள் வீணாகட்டும்.
சங்கீதம் 109 : 8 (RCTA)
அவனுடைய வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனுடைய சொத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்ளட்டும்.
சங்கீதம் 109 : 9 (RCTA)
அவனுடைய மக்கள் அனாதைகளாகட்டும்: அவன் மனைவி விதவையாகட்டும்.
சங்கீதம் 109 : 10 (RCTA)
அவனுடைய மக்கள் நிலையின்றி அலைந்து பிச்சை எடுக்கட்டும்: பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்.
சங்கீதம் 109 : 11 (RCTA)
கடன் கொடுத்தவன் அவன் சொத்தையெல்லாம் பறித்துக் கொள்ளட்டும்: அவன் உழைப்பின் பயனை அந்நியர்கள் பிடுங்கிக் கொள்ளட்டும்.
சங்கீதம் 109 : 12 (RCTA)
அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனுமில்லாதிருக்கட்டும்; திக்கற்ற அவன் பிள்ளைகள் மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்.
சங்கீதம் 109 : 13 (RCTA)
அவன் சந்ததி அடியோடு தொலையட்டும்: இரண்டாம் தலைமுறைக்குள் அவனுடைய பெயர் இல்லாது போகட்டும்.
சங்கீதம் 109 : 14 (RCTA)
அவனுடைய முன்னோர்களின் பாவங்களை ஆண்டவர் நினைத்துக் கொள்ளட்டும்: அவனுடைய தாய் செய்த பாவம் நீங்காதிருக்கட்டும்.
சங்கீதம் 109 : 15 (RCTA)
அவைகள் என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்: அவர்களுடைய நினைவை அடியோடு எடுத்து விடட்டும்.
சங்கீதம் 109 : 16 (RCTA)
ஏனெனில், அவனும் யாருக்கும் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியவனையும் ஏழையையும் துன்புறுத்தினவன் அவன்: நெஞ்சம் நொறுங்குண்டவனைக் கொன்றொழிக்கத் தேடியவன்.
சங்கீதம் 109 : 17 (RCTA)
சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன் மீது விழட்டும்: ஆசி கூறுவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனை விட்டகலட்டும்.
சங்கீதம் 109 : 18 (RCTA)
சாபனையே அவன் தன் ஆடையாக அணியட்டும்: உடலில் தண்ணீர் ஊறுவது போல, எலும்பில் எண்ணெய் தோய்ந்திருப்பது போல சாபனை அவனுக்குள் இறங்கட்டும்.
சங்கீதம் 109 : 19 (RCTA)
அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்: நாள்தோறும் அவன் கட்டும் கச்சைப் போல் இருக்கட்டும்.
சங்கீதம் 109 : 20 (RCTA)
என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீமை பேசுவோருக்கும், ஆண்டவர் அளிக்கும் பிரதிபலனாய் இது இருப்பதாக.
சங்கீதம் 109 : 21 (RCTA)
ஆனால் ஆண்டவராகிய இறைவா, நீர் உமது பெயரின் பொருட்டு என்னை ஆதரியும்: ஏனெனில், கருணை மிக்கது உம் இரக்கம், என்னை மீட்டருளும்.
சங்கீதம் 109 : 22 (RCTA)
நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
சங்கீதம் 109 : 23 (RCTA)
மறைந்து போகும் நிழலைப் போல் நான் மறைகின்றேன்: வெட்டுக்கிளியைப் போல நான் காற்றில் அடிபடுகின்றேன்.
சங்கீதம் 109 : 24 (RCTA)
நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் ஊனுடல் பலமற்று நொந்து போகிறது.
சங்கீதம் 109 : 25 (RCTA)
நானோ அவர்களுடைய நிந்தனைக்குரியவன் ஆனேன்; என்னைப் பார்க்கிறவர்கள் தலையை அசைக்கிறார்கள்.
சங்கீதம் 109 : 26 (RCTA)
ஆண்டவரே, என் இறைவா, எனக்குதவியாக வாரும்: உமது இரக்த்திற்கேற்ப என்னை மீட்டுக்கொள்ளும்.
சங்கீதம் 109 : 27 (RCTA)
இது உம் கைவேலையென்று அவர்கள் அறியட்டும்: ஆண்டவரே, இது உம் செயலென்று அவர்களுக்குத் தெரியட்டும்.
சங்கீதம் 109 : 28 (RCTA)
அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும்: என்னை எதிர்த்து எழும்பினால் பின்னடைந்து போகட்டும்; உம் ஊழியனோ அகமகிழட்டும்.
சங்கீதம் 109 : 29 (RCTA)
என்னைக் குற்றம் சாட்டுவோரை மானக்கேடு ஆட்கொள்வதாக: வெட்கம் அவர்களைப் போர்வை போல் போர்த்துவதாக.
சங்கீதம் 109 : 30 (RCTA)
என் நாவினால் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: மக்கள் பலரிடையில் அவரைப் போற்றுவேன்.
சங்கீதம் 109 : 31 (RCTA)
ஏனெனில், ஏழையின் வலப்பக்கம் அவர் நிற்கிறார். குற்றம் சாட்டி அவனை ஒறுப்போரிடமிருந்து அவனைக் காக்க நிற்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31